Thursday, March 18, 2021

புனித யோசேப்பு

இன்றைய (19 மார்ச் 2021) திருநாள்

புனித யோசேப்பு

இன்று நாம் புனித யோசேப்பை அன்னை கன்னி மரியாவின் கணவர் என்று கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு, 'புனித யோசேப்பு ஆண்டு' என்பதால் இன்றைய நாள் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

'To Be' means 'To be Useless.'

புனித யோசேப்பு ஆண்டை அறிமுகம் செய்த அன்று (8 டிசம்பர் 2020) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, 'தந்தையின் இதயத்தோடு' ('Patris Corde') என்னும் திருத்தூது மடலில், புனித யோசேப்பின் தந்தைக்குரிய ஏழு பரிமாணங்களை வகைப்படுத்துகிறார். அவற்றில் இறுதியாக இருப்பது, 'நிழல்நில் தந்தை.' இந்தப் பகுதியை திருத்தந்தை இப்படி நிறைவு செய்கிறார்: 'ஒரு தந்தை, தான் 'பயனற்றவர்' என்ற நிலையை அடையும்போதுதான் அவர் ஒரு தந்தையாகவும் ஆசிரியராகவும் மாறுகிறார். அந்த நிலையில் அவர், தன் குழந்தை தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குவதையும், தன் துணை இல்லாமலேயே வாழ்வின் பாதைகளில் நடக்க இயல்வதையும் காண்கிறார். யோசேப்பு போல அவர் மாறும் போது அந்நிலையை அடைகிறார்.'

திருத்தந்தை அவர்களின் இவ்வரிகள் என்னை அதிகம் யோசிக்க வைத்தன.

'இருப்பது' என்றால் 'பயனற்று இருப்பது!' (To Be means To be Useless).

இதை நம்மால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், 'இருப்பது' என்றாலே 'பயனுக்காக இருப்பது' என்றுதான் நாம் கற்றுவைத்துள்ளோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், உண்மை அதுவன்று.

நீங்க ஒரு டீச்சர். கணிதத்தில் ஐந்தாவது பாடம் நடத்த வேண்டும் என்று வகுப்பறைக்குள் செல்கிறீர்கள். அங்கே உங்களுக்கு முன் உங்கள் மாணவி ஒருத்தி, அழகாக கணிதத்தை கரும்பலகையில் எழுதி மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு கோபம் வருமா? அல்லது உங்களுக்கு மகிழ்ச்சி வருமா?

மாணவி தன் கண்முன்பாக தான் கற்றுக்கொடுக்க நினைத்த பாடத்தைக் கற்றுக்கொடுப்பதைக் காணும் ஆசிரியர், தான் 'பயனற்றவர்' என உணர்கிறார். அந்த நொடியில் அவர் அந்த மாணவியைக் கொண்டாடுகிறார்.

நீங்கள் ஒரு அப்பா. உங்களுடைய எந்தவொரு அறிவுரையும் உடனிருப்பும் இல்லாமலேயே உங்கள் மகன் நன்றாகப் படிக்கிறான், தன் வாழ்க்கை நிலையைத் தெரிவு செய்கிறான். நீங்கள் பெருமைப்படுமாறு நடக்கிறான். அவனது வளர்ச்சியைக் காண்கின்ற நீங்கள், 'என் குறுக்கீடு இல்லாமலேயே இவ்வளவு வளர்ந்துவிட்டானே!' என்று உணரும் அந்த நொடியில் நீங்கள் பயனற்ற நிலைக்கு ஆளாகிறீர்கள்.

நான் ஒரு பங்குத் தந்தை. என் பங்குத் தளத்தில் உள்ள எல்லா நிகழ்வுகளும் எனது எந்தவொரு ஈடுபாடுமின்றி மிக அழகாக நடக்கின்றன. அவற்றைக் காணும் நான், பயனற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.

இதுவே பயனற்ற நிலையை உணர்தல்.

இதுவே மெய்யான ஞானம்.

இந்த ஞானத்தையே புனித யோசேப்பு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (2 சாமு 7) இறைவாக்கினர் நாத்தானோடு உரையாடுகின்ற தாவீது அரசர், தன் கடவுளுக்கு ஆலயம் கட்ட விரும்புகிறார். ஆனால், நாத்தான் வழியாக குறுக்கீடு செய்கின்ற ஆண்டவராகிய கடவுள், 'நீயா எனக்கு ஆலயம் கட்ட விரும்புகிறாய். நான் உனக்கு ஆலயம் கட்டுவேன்' என்று சொல்லும் அந்த நொடியில், தாவீது அரசர் தான் பயனற்றவர் என்பதை உணர்கிறார்.

இரண்டாம் வாசகத்தில் (உரோ 4), ஆபிரகாமின் எதிர்நோக்கு பற்றிப் பேசுகின்ற பவுல், ''உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்' என்ற கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போலத் தோன்றினாலும், அவர் எதிர்நோக்கினார்ளூ தயங்காமல் நம்பினார்' என்கிறார் புனித பவுல். ஆபிரகாமின் வழிமரபினர் தோன்றுதலுக்குக் கடவுளே காரணம் என்பதால், அங்கே ஆபிரகாம் பயனற்ற நிலைக்கு தன்னையே உட்படுத்துகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 1), இயேசுவின் பிறப்பு அறிவிப்பு நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். 'மரியாவை எப்படி விலக்கி விடலாம்' என்று யோசித்துக் கொண்டே இருந்த யோசேப்பு, தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொள்கின்றார். 'விடிய விடிய யோசித்த யோசேப்பு, தன் யோசனையால் பயன் ஏதும் இல்லை' என்று உணர்ந்த அந்த நொடி, 'பயனற்றவர்' ஆகிறார். மேலும், இயேசு ஆலயத்தில் காணாமல் போகும் நிகழ்வில் (காண். லூக் 2), 'என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று இளவல் இயேசு கேட்ட அந்த நொடியில், 'நான் ஒரு பயனற்ற தந்தை' என்று உணர்ந்திருப்பார் யோசேப்பு.

ஆக, பயனற்ற நிலையை உணர்தல் என்பது தான் இல்லாமலேயே இந்த உலகில் நிகழ்வுகள் நகரும் என்ற மெய்ஞ்ஞானம் பெறுவது. ஏனெனில், அனைத்தையும் நடத்துபவர் கடவுளே. 

தன்னுடைமையாக்கும் அன்பு கொண்டிருக்கும் ஒருவர் தன்னால் மட்டுமே மற்றவர்களுக்குப் பயன் என்று சொல்லி, மற்றவர்களும் தன்னைப் போல இருக்க வேண்டும் என நினைப்பார். ஆனால், தற்கையளிப்பைக் கற்றுக்கொண்ட ஒருவர், கற்புநிறை அன்போடு தன் பயனற்ற நிலையை ஏற்றுக்கொள்வார்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்கா சென்று, ஒரு வழக்கறிஞராக அந்நாட்டு மக்களுக்குப் பணியாற்ற விரும்பினார். ஆனால், அங்கே அவர் கறுப்பின மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தபோது, வழக்கறிஞர் பணியில் பயனற்றவர் ஆகிறார்.

அன்னை தெரசா ஓர் ஆசிரியையாக கொல்கத்தாவின் தெருக்களில் நடந்து வருகிறார். ஆனால், அங்கு நிலவிய மிகவும் ஏழ்மையான நிலைகண்டு சமூகப் பணி செய்யத் தொடங்கிய அவர், ஆசிரியப் பணியில் பயனற்றவர் ஆகிறார்.

ஆக, ஒருவர் தன் வாழ்வில் தான் கொண்டிருக்கும் இலக்குகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இறைத்திட்டத்திற்குத் தன்னையே கையளிக்கும்போது பயனற்றவர் ஆக முடியும்.

இன்றைய கார்ப்பரேட் உலகம் நம்மை 'பயனுள்ளவர்களாக' இருக்க வேண்டும் என்று கற்பித்து, நம்மை மனஇறுக்கத்திலேயே வைத்துள்ளது. 'பயனுள்ள வகையில்' நேரம் செலவழிக்கப்பட வேண்டும், 'பயனுள்ள உறவுகள்' வேண்டும், 'பயனுள்ள இடத்தில்' பணத்தைச் சேமிக்க அல்லது முதலீடு செய்ய வேண்டும். 'பயனுள்ள இடத்தை' பார்க்க சுற்றுலா செல்ல வேண்டும். 'பயனுள்ள உணவை' சாப்பிட வேண்டும். இப்படி நமக்குக் கற்பிக்கப்படும் அனைத்தும் நம்மைச் சுற்றி கார்பரேட் விரிக்கும் மாய வலைகளே.

நம் இல்லத்தில் உள்ள குழந்தைகளைப் பாருங்கள். வயதானவர்களைப் பாருங்கள். உடல் அல்லது மனநலம் சரியாக இல்லாதவர்களைப் பாருங்கள். அவர்களால் மேற்காணும் எந்தவொரு பயனும் இல்லை. அவர்கள் எதையும் உருவாக்குவதில்லை. எந்த வளத்தையும் பெருக்குவதில்லை. அப்படி என்றால், அவர்கள் தேவையற்றவர்களா? இல்லை! 'பயனற்ற நிலையும்' இனிமையாக வாழ்க்கை நிலையே.

அடுத்தவர்களுக்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்ற ஆசையிலும், விருப்பத்திலும் நாம் அன்றாடம் விரக்திக்கு உள்ளாகிறோம். என் கணவருக்குப் பயனுள்ளவராக, என் மனைவிக்குப் பயனுள்ளவராக, என் மறைமாவட்டத்திற்குப் பயனுள்ளவராக, என் துறவற சபைக்குப் பயனுள்ளவராக, எனக்கு அடுத்திருப்பவருக்குப் பயனுள்ளவராக, என் நாட்டுக்குப் பயனுள்ளவராக நான் இருக்க வேண்டும் என்ற வீணான வேட்கையில் நாம் எத்தனை முறை சோர்வுக்கும், மனவிரக்திக்கும், குழப்பத்திற்கும் ஆளாகி உள்ளோம்?

'இருத்தல்' என்றால் 'பயனற்று இருத்தல்' என்பதை நாம் எப்படி அடைவது?

ஒன்று, உரிமை எடுத்தலைத் தவிர்க்க வேண்டும் (Let go of sense of entitlement).

நமக்கு யார் மேலும், எதன் மேலும் எப்போதும் உரிமை இல்லை. இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் பேராசியர் என்பதால் என் மாணவர் என்னை மதிப்பது என் உரிமை என நான் நினைப்பது தவறு. நான் ஓர் அருள்பணியாளர் என்பதால் என் பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும் என்பது என் உரிமை என நான் நினைப்பது தவறு. யோசேப்பு தன் வாழ்வில் எந்த நிலையிலும் எந்த உரிமையும் எடுத்துக்கொள்ளவில்லை. 'நான் மெசியாவின் தந்தை. விடுதியில் இடம் வேண்டுவது எங்கள் உரிமை' என்று விடுதிக்காரரிடம் சண்டையிடவில்லை. 'பிறந்திருப்பது மெசியா, யூதர்களின் அரசர். அவர் இங்கேதான் இருக்க வேண்டும்' என்று ஏரோதிடம் உரிமைக்காகக் குரல் கொடுக்கவில்லை. உரிமையை விட்டுக்கொடுக்க மிகப் பெரிய துணிச்சல் தேவை.

இரண்டு, எல்லாம் நிறைவாக (எந்தவொரு குறையுமின்றி) இருக்க வேண்டும் என நினைப்பதைத் தவிர்க்க வேண்டும் (Let go of perfectionism).

எல்லாம் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், தங்களால் மட்டுமே இந்த உலகத்திற்குப் பயன் இருப்பதாக நினைத்து, மாங்கு மாங்கு என்று வேலை செய்வார்கள். ஆனால், வாழ்க்கையின் நிகழ்வுகள் நாம் நினைப்பது போல நடப்பதில்லை. தன் வாழ்க்கைப் படகின் திசைமாற்றியைக் கடவுளிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார் யோசேப்பு. தான் நினைப்பது போலப் படகு செல்ல வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அவருடைய வாழ்க்கைப் படகு, எருசலேமுக்கும், எகிப்துக்கும், எருசலேமுக்கும், நாசரேத்துக்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டாலும், தான் நினைத்தது போல தன் வாழ்க்கை 'கரெக்ட்' ஆக இல்லை என்றாலும், தன் மௌனம் காத்தார் வளன்.

மூன்று, ஓய்ந்திருத்தல் அன்று, செயலாற்றுதல் (Don't be indifferent. But act by being different).

'பயனற்ற நிலை' என்றால் 'ஓய்ந்திருத்தல்' அன்று. என் குறுக்கீடு இல்லாமலேயே என் மாணவி கணிதம் படிக்கிறாள் என்றால், 'பரவாயில்லை. நான் ஓய்வெடுக்கலாம்' என்று நினைப்பது தவறு. அல்லது, என்னைச் சுற்றி நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது அன்று. மாறாக, நான் செய்வதனைத்தையும் வித்தியாசகமாகவும், மேன்மையாகவும் செய்ய வேண்டும். செயலாற்றுதல் என்பது வலி ஏற்பது. பயனற்ற நிலைக்குத் தன்னையே உட்படுத்துபவர் வலிகள் வழியேதான் அதை அடைய முடியும். 

நிற்க.

திருத்தூது மடலின் இறுதியில், நம் திருத்தந்தை அவர்கள், 'நாம் புனித யோசேப்பிடம் கேட்க வேண்டியதெல்லாம் அருளில் சிறந்த அருளான ஒன்றே: நம் மனமாற்றம்' என்கிறார்.

நம் மனமாற்றம் இதுவே.

'நான் தான் பயனுள்ளவன், பயனுள்ளவள்' என்ற தன்முனைப்பையும், தன்னுடைமையாக்கும் அன்பையும் விடுத்து, 'நான் பயனற்றவன், பயனற்றவள்' என்ற நிலைக்கு ஆட்படுத்துவது.

பயனற்ற நிலையே ஞான நிலை.

3 comments:

  1. "தன் வாழ்க்கைப் படகின் திசைமாற்றியைக் கடவுளிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார் யோசேப்பு."

    இருப்பது' என்றால் 'பயனற்று இருப்பது!' (To Be means To be Useless).

    நன்றி🙏

    ReplyDelete
  2. “புனித யோசேப்பு”... திருத்தந்தையின் யோசேப்பு குறித்த “ தந்தையின் இதயத்தோடு” அதன் இறுதி வரிகளை...நம் தந்தை இயேசுவைப்பாதித்த இறுதி வரிகளை...” ஒரு தந்தை அவர் “ பயனற்றவர் ஆகும்போதுதான் ஒரு நல்ல தந்தையாகவும்,நல்ல ஆசிரியராகவும் மாறுகிறார்”...... எனும் வரிகளை அலசுகிறார் அவர் உடல்,பொருள்,ஆவி அத்தனையையும் கொடுத்து.
    கூடவே “பயன்ற்ற நிலை” என்றால் “ஓய்ந்திருத்தல் அன்று” என்பதையும் உறுதிபடக்கூறுகிறார்.நான் செய்வதனைத்தையும் வித்தியாசமாகவும்,மேன்மையாகவும் செய்வது வலி என்ற ஒன்று என்னை வறுத்தெடுத்தாலும் கூட.

    நல்ல குடும்பம்,....தொழில்....படிப்பு...திருமணம்....இறுதியில் நன்மரணம் ...இத்தனைக்கும் பாதுகாவலராக இன்றுவரை நாம் பார்த்த வரை சற்று வித்தியாசமாகப் பார்க்க வைத்துள்ளார் திருத்தந்தை.....” அவரிடம் நாம் கேட்கவேண்டியதெல்லாம் “ “மனமாற்றம்” ஒன்றே என்கிறார்...அதுவே “அருளில் சிறந்த அருள்” என்கிறார் தந்தை.

    “பயனற்ற நிலையே ஞான நிலை” எனில் அது எத்துணை பேருக்கு சாத்தியம்? அந்தப் பயன்ற்ற நிலை வரும் வரை நான் உயிரோடு இருப்பேன் என்பதற்கு யார் கட்டியம் கூற முடியும்?

    கையில் இருக்கும் நாட்களனைத்தையுமே பயன்ற்ற நிலைக்கு மாற்றி விட்டால் என் “ “மனமாற்றம்” அதுவே என்ற புரிதலைத் தந்தை தந்தைக்கு என் நன்றிகள்! எத்தனையோ சிரமங்களுக்கிடையில்..உடல், உள்ள உபாதைகளுக்கிடையில் புனித யோசேப்புக்கு ஒரு “மணிமகுடம்” கட்டிய தந்தயை.....அவரின் உழைப்பை...இன்னொரு யோசேப்பாகவே பார்க்கிறேன். தந்தைக்கும்..அனைவருக்கும் புனித யோசேப்பின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. Excellent Reflection Yesu. God bless us

    ReplyDelete