Wednesday, March 24, 2021

மங்கள வார்த்தை

இன்றைய (25 மார்ச் 2021) திருநாள்

இன்று 'மங்கள வார்த்தை திருநாள்' என்றழைக்கப்படும் 'ஆண்டவரின் பிறப்பு முன்னறிவிப்பு' பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய திருநாள் நமக்கு மூன்று 'உ'க்களை முன்வைக்கின்றன: (அ) உடல், (ஆ) உடனிருப்பு, மற்றும் (இ) உறுதி.

(அ) உடல்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:4-10) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைவராக முன்வைத்தபின், இயேசுவின் பலியை மற்ற எல்லா தலைமைக்குருக்களின் பலிகளைவிட மேன்மையானதாகவும் நிறைவானதாகவும் காட்டுகின்றார். மற்ற தலைமைக்குருக்களின் பலிகளில், 'பலி செலுத்தபவர் வேறு,' 'பலி வேறு' என்ற இரட்டைத்தன்மை இருந்தது. ஆனால், இயேசுவின் பலியில் அப்படி அல்ல. அவரில் பலியும், பலி செலுத்துபவரும் ஒன்றாகவே இருக்கின்றன. திருப்பாடல் 40ஐ மேற்கோள் காட்டுகின்ற ஆசிரியர், 'எனக்கொரு உடலைத் தந்தீர். உம் திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்!' என்று முன்வந்து தன் உடலையே பலியாகக் கையளிக்கிறார் இயேசு. இவ்வாறாக, 'உடல் இல்லாமல் பலியும் மீட்பும் இல்லை' என உணர்த்துகிறார் இயேசு. மனித உலகிற்குள் நுழைய விரும்பிய கடவுள் உடலின் வழியாக மனித உலகிற்குள் நுழைகின்றார். இவ்வாறு உடலைப் புனிதப்படுத்துகின்றார். உடலை இறைவனுக்குப் பலியாக்குவதன் வழியாக உடலை இறைவனுக்குரிய பொருளாக அர்ப்பணிக்கிறார் இயேசு. 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' என்று வார்த்தை மனித உடல் ஏற்கிறார். இறைவன் மனுஉரு ஏற்க மரியாள் தன் உடலில் இடம் கொடுக்கிறார்.

(ஆ) உடனிருப்பு

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 7:10-14, 8:10) ஆகாசு இறைவனுக்கு ஆண்டவராகிய கடவுள் அடையாளம் ஒன்றைத் தருகிறார்: 'இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் ... அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர். 'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு' என்பது பொருள்.' அசீரியப் படையெடுப்பை எதிர்கொள்ள எகிப்தின் உதவியை நாடுவதா அல்லது வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த ஆகாசுக்கு இறைவன் தன் உடனிருப்பைத் தருகின்றார். மனுக்குலத்திற்குள் தன் மனுவுருவாதல் வழியாக நுழைந்த வார்த்தையாகிய இறைவன் நமக்குத் தருவதும் உடனிருப்பே.

(இ) உறுதி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38), 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று வாக்குறுதி கொடுக்கின்றார். இதுதான் மரியாவின் மிஷன் ஸ்டேட்மன்ட். தன் வாழ்க்கை முழுவதையும் இதற்காகவே வாழுகின்றார். இத்தாழ்ச்சியில் அடிமைத்தனம் இல்லை. மாறாக, முழு விடுதலை இருக்கின்றது. ஏனெனில், இனி எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார். இறைத்திருவுளம் ஏற்றலில் உள்ள நன்மை இதுதான். அது நம்மை முழுமையான விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.

இறைவன் கபிரியேல் வழியாக மரியாளுக்குச் சொன்ன வார்த்த எந்த அளவிற்கு மங்களமோ, அதே அளவிற்கு மங்களம் மரியாளின் 'ஆம்' என்ற வார்த்தையும்.

இந்த ஒற்றை 'ஆம்' என்ற சொல்தான் விண்ணையும் மண்ணையும் இணைத்தது.

3 comments:

  1. உன்னதமான மூன்று " உ " கள் தந்தமைக்கு 🙏

    ReplyDelete
  2. தந்தையின் மூன்று ‘உ’க்கள். உடலின் வழியாக உலகிற்குள் வந்ததால் இயேசு ‘உடலைப்’ புனிதப்படுத்தினார் என்பதும்....மனுக்குலத்தில் தன் மனுவுருவாதல் வழியாக நுழைந்த வார்த்தையாகிய இறைவன் நமக்குத் தந்ததும் ‘உடனிருப்பே’ என்பதும் எத்தனை புரிதலைத் தருகிறதோ அதைவிட ஒரு படி மேலே புரிதலைத் தருகிறது அந்த மூன்றாவது ‘உ’. “ ஆம்! இறைத்திருவுளம் ஏற்றல்.”

    இறைவன் கபிரியேல் வழியாக மரியாளுக்குச் சொன்ன வார்த்தையில் உள்ள அதே மங்களம், மரியாளின் ‘ஆம்’ என்ற வார்த்தையிலும் உள்ளது. இந்த ‘ஆம்’ இல்லையெனில் விண்ணும் மண்ணும் இணைந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இணைப்பை சாத்தியமாக்கியது அன்னை மரியாளின் ‘ஆம்’ லிருந்த ‘ மன உறுதி’.

    தந்தையின் பதிவில் வார்த்தைகளின் உள்ளே புதைந்துள்ள அர்த்தங்களை மட்டுமல்ல.... அவர் வார்த்தைகளோடு உருண்டு,புரண்டு விளையாடும் விளையாட்டையும் சேர்த்தே இரசிக்கிறேன். தந்தைக்கு ‘அன்னை மரியாளின் விண்ணேற்புத் திருநாள்’ வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. மங்கள வார்த்தை திருநாள்

    ReplyDelete