Monday, March 22, 2021

பாவிகளாகவே சாவீர்கள்

இன்றைய (23 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 8:21-30)

பாவிகளாகவே சாவீர்கள்

இன்றைய நற்செய்தி வாசகம், 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்' நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அந்த நிகழ்வைப் பற்றி எழுதுகின்ற புனித அகுஸ்தினார், 'இறுதியில் காயமும் கருணையும் மட்டுமே அங்கு நின்றன. கருணை காயத்தைத் தீர்ப்பிடவில்லை. காயமும் இனிப் பாவம் செய்யவில்லை' என எழுதுகிறார். 

தொடர்ந்து வரும் உரையில், இயேசு பரிசேயர்களை நோக்கி, 'நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்!' என்கிறார். யோவான் நற்செய்தியில், 'பாவம்' என்பது 'தந்தையின் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நிலையே.' இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'இருக்கிறவர் நானே!' என்கிறார். இந்தப் பெயரைக் கொண்டே ஆண்டவராகிய கடவுள், தன்னை மோசேக்கு வெளிப்படுத்துகிறார். இது பரிசேயர்களுக்கு மிகப் பெரிய இடறலாக இருந்திருக்கும். ஏனெனில், 'கடவுள்' என்ற பெயரை வீணாக உச்சரிப்பதையே தடை செய்கின்ற அவர்கள், ஒருவர் அதே பெயரைத் தன் பெயராக அல்லது தானாக அறிவிப்பது ஏற்புடையதாக இருந்திருக்காது.

தொடர்ந்து இயேசு, தனக்கும் தன் தந்தைக்கும் உள்ள உறவை முன்வைக்கின்றார். இதுவும் அவர்களுக்குப் புதிய புரிதலாக இருந்திருக்கும். ஏனெனில், கடவுளை தந்தை என அழைத்திராத அவர்கள், கடவுளைத் தன் தந்தை என உரிமை கொண்டாடுபவரை ஏற்றுக்கொள்ளக் கண்டிப்பாகத் தயக்கம் காட்டுவார்கள். இங்கே இயேசு தன் தந்தையின் உடனிருப்பைத் தன் பெரிய பலமாக முன்வைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தையும், நற்செய்தி வாசகத்தையும் இணைக்கின்ற ஒற்றைச் சொல், 'உயர்த்தப்படுதல்.' முதல் வாசகத்தில், பாலைவனத்தில் மோசே வெண்கலப் பாம்பை உயர்த்தும் நிகழ்வை வாசிக்கின்றோம். உயர்த்தப்பட்ட பாம்பைக் கண்ட அனைவரும் நலம் பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில், உயர்த்தப்படுதல் என்பது 'அறிதல் நிலைக்கான தொடக்கம்' என்கிறார் இயேசு. 

'உயர்த்தப்படுதல்' என்பது யோவான் நற்செய்தியில் மூன்று விளைவுகளை ஏற்படுத்துகின்றது: (அ) நலம் பெறுதல் (காண். யோவா 3). (ஆ) கடவுளை அறிதல் (காண். யோவா 8). (இ) தந்தையோடு இணைதல் (காண். யோவா 12). உயர்த்தப்படுதல் என்பது இங்கே இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது: ஒன்று, இயேசு சிலுவையில் அறையப்படுதல். இரண்டு, இயேசு உயிர்த்து விண்ணேற்றம் அடைதல். 

'பாம்பைக் கண்டவர்' முதல் வாசகத்தில் 'இறக்கவில்லை.'
'
உயர்த்தப்பட்ட இயேசுவைக் கண்டவர்' நற்செய்தி வாசகத்தில் 'இறப்பதில்லை.'

மேலும், யோவான் நற்செய்தியில் 'காணுதல்' என்பது 'நம்புதலை' குறிக்கிறது (காண். யோவா 22). 

இயேசு ஒரு தளத்தில் நின்று பேசுகிறார். கேட்பவர்கள் இன்னொரு தளத்தில் அவரைப் புரிந்துகொள்கிறார்கள்.

'இன்னும் சிறிது காலத்தில் என்னைக் காணமாட்டீர்கள்' என்று அவர் தன் உயர்த்தப்படுதலை மனத்தில் வைத்துச் சொல்ல, அவர்களோ, 'அவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரோ?' என்கின்றனர். 

கீழிருந்து வந்தவர்கள் தாழ்வாகவே யோசிக்க, மேலிருந்த வந்த இயேசு அவர்களை உயர்த்த முயற்சி செய்கின்றார்.

இன்று நாம் அவரைப் போல மேலிருந்த நிலையில் சிந்திக்கவும் செயல்படவும் முயற்சி செய்தால் நலம்.

2 comments:

  1. பதிவின் ஆரம்பத்தில் வரும் விபசாரத்தில் பிடிபட்ட பெண் குறித்த புனித அகுஸ்தினாரின் “ இறுதியில் காயமும்,கருணையும் மட்டுமே அங்கு நின்றன.கருணை காயத்தைத் தீர்ப்பிடவில்லை.காயமும் இனிப்பாவம் செய்யவில்லை” எனும் வார்த்தைகள் என்னை மேலே வாசிக்க விடவில்லை. அத்தனை பாதிப்பு என் உள்ளத்தில். இருப்பினும் தொடர்ந்து வாசித்தேன்.

    “ பாம்பைக் கண்டவர்” முதல் வாசகத்தில் “இறக்கவில்லை”
    “உயர்த்தப்பட்ட இயேசுவைக்கண்டவர்” நற்செய்தி வாசகத்தில் “ இறப்பதில்லை.” இம்முறை என் புருவங்களை உயர்த்தியது தந்தை யேசுவின் வரிகள்.

    கீழிருந்து வந்தவர்கள் தாழ்வாகவே யோசிக்க, மேலிருந்து வந்த இயேசு அவர்களை உயர்த்த முயற்சிக்கிறார்......உண்மையே! நம்மையும் கூட மேலிருந்த நிலையில் சிந்திக்கவும், செயல்படவும் வைக்க முயற்சி செய்யும் தந்தையின் வரிகளுக்கு ஒரு சபாஷ்! கூடவே நன்றிகளும்!!!

    ReplyDelete