Monday, March 15, 2021

நம்பிக்கை

இன்றைய (15 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 4:43-54)

நம்பிக்கை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் இரண்டாவது அறிகுறியை வாசிக்கின்றோம். இயேசு ஏழு அறிகுறிகள் செய்வதாகப் பதிவு செய்கிறார் யோவான்.

யோவான் நற்செய்தி, நிக்கதேம், சமாரியப் பெண், அரச அலுவலர், கிரேக்கர்கள், பிலாத்து என ஒவ்வொரு குழுவாக நகர்கிறது.

இந்ந நற்செய்தியில் உள்ள மூன்று முரண்களைப் புரிந்துகொள்வோம்:

ஒன்று, 'சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது' என்று இயேசு சொல்லியிருக்கிறார். ஆனால், அவருடைய சொந்த ஊரார் அவரை வரவேற்கின்றனர்.

இரண்டு, 'அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்ப மாட்டீர்கள்' எனக் கடிந்துகொள்கின்ற இயேசு, அரச அலுவலரின் மகனை நலமாக்குகின்றார்.

மூன்று, 'வாரும்!' என்றழைத்த அரச அலுவலரின் வார்த்தை பயனற்றுப் போகிறது. 'போ! நலமடைவான்!' என்ற இயேசுவின் கட்டளை தூரத்திலும் அற்புதம் நிகழ்த்துகிறது.

முதல் அறிகுறி நடந்தபோது இயேசுவின் சீடர்கள் நம்புகின்றனர். இரண்டாவது அறிகுறி நடந்தபோது, அலுவலரும் அவரின் இல்லத்தாரும் நம்புகின்றனர்.

நம்பிக்கையால் வந்த அவர், மீண்டும் நம்புகிறாரா?

முதல் முறை, இயேசுவின் வார்த்தைக்கு அதிகாரம் உண்டு என நம்புகிறார்.

இரண்டாம் முறை, இயேசுவே வார்த்தை என நம்புகிறார்.

இந்த நம்பிக்கைப் பயணத்திற்கு இவர் நமக்கு ஆறு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றார்:

(அ) வாய்ப்புகளைத் தேடு.

காய்ச்சலுக்கு மருந்து இறப்பே என்ற தன் சமகாலத்துப் புரிதலை உடைத்துப் போடுகின்ற அலுவலர் வேறு வாய்ப்புகளைத் தேடுகிறார்.

(ஆ) எதிர்வினை ஆற்றாதே.

இயேசுவின் வார்த்தைகள் முதலில் கடினமாக இருந்தாலும் எதிர்வினை ஆற்றவில்லை அலுவலர். பொறுமையோடு தன் விண்ணப்பத்தைத் தொடங்குகிறார்.

(இ) இயேசு வந்து செயலாற்ற வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்.

நம் நம்பிக்கையின் தொடக்கநிலையில் நாமும் இறைவனுக்குக் கட்டளையிடுகிறோம். ஆனால், நம் வார்த்தைக்கு ஆற்றல் குறைவே.

(ஈ) ரிஸ்க் எடுக்கிறார்.

'போ!' என்று இயேசு சொன்னவுடன் போகிறார். நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் இருந்தாலும் ரிஸ்க் எடுத்து இல்லம் திரும்புகிறார்.

(உ) பணியாளர்களிடம் உறுதிப்படுத்துகிறார்.

பணியாளர்களைக் கண்டவுடன், 'ஐயோ! மகன் இறந்துவிட்டானோ!' என்ற எண்ணம் மின்னி மறைந்திருக்கலாம் அவருடைய மனத்தில். ஆனால், அவர்கள் நல்ல செய்தியையே கொண்டு வருகிறார்கள். செய்தியை உறுதிப்படுத்துகிறார்.

(ஊ) தான் கொண்டிருந்த நம்பிக்கையை தன் குடும்பத்தாருக்கும் கொடுக்கிறார்.

இயேசுவின் வார்த்தை செயலாற்றிய அந்த நொடியில், அவருடைய வார்த்தையும் ஆற்றல் பெறத் தொடங்குகிறது.

இப்போது பிழைத்த அந்த மகன் இன்னொரு நாள் நிச்சயம் இறந்திருப்பான்.

ஆனால், இன்று பெற்ற நம்பிக்கையை என்றும் தற்காத்துக்கொண்டிருப்பார் அந்த அலுவலர்.

2 comments:

  1. 🙏👍

    இப்போது பிழைத்த அந்த மகன் இன்னொரு நாள் நிச்சயம் இறந்திருப்பான்.

    ஆனால், இன்று பெற்ற நம்பிக்கையை என்றும் தற்காத்துக்கொண்டிருப்பார் அந்த அலுவலர்.

    Great are your interpretations!
    You are a strong instrument of our heavenly father.

    I pray, that you should be reached not only by the intellectuals, but also by the least of the least.
    Thank you.

    ReplyDelete
  2. “ வார்த்தை...நம்பிக்கை” இன்றையப் பதிவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். முதல் முறை இயேசுவின் வார்த்தைக்கு அதிகாரம் உண்டு என்று நம்பிய அலுவலர் இரண்டாம் முறை இயேசுவே வார்த்தை என நம்புகிறார். என் நம்பிக்கை ‘இயேசுவா’ இல்லை அவரது ‘வார்த்தையா’ எனும் எண்ணமும் கூடவே எழுகிறது.அன்றைய காலக்கட்டத்தில் இயேசுவாகவே இருந்திருப்பினும் அவரையும்,அவர் வார்த்தையையும் நம்புவதில் கண்டிப்பாக சிக்கல் இருந்திருக்கும். ஆனாலும் அவர் நம்பினார்.

    தந்தை தரும் இந்த நம்பிக்கைப்பாடங்கள் நம் “ நம்பிக்கை” ஆட்டம்” காணும் ஒவ்வொரு முறையும் உபயோகிக்க வேண்டியதே! நம் நம்பிக்கையின் அஸ்திவாரம் ஒரு லெவலுக்கு ஸ்ட்ராங்கான பிறகே இயேசு வல்ல செயல்களைச் செய்கிறார்.அதனால் தான் இப்போது பிழைத்த அந்த மகன் இன்னொரு நாள் இறப்பான் எனத்தெரிந்திருந்தும் அலுவலர் இன்று பெற்ற நம்பிக்கை என்றும் அவரைக் காத்து நிற்கும் என்கிறார் தந்தை.

    வாரத்தின் முதல் நாள்! நம்பிக்கைத் துளிகளோடு எம்மை இந்த வாரத்தை மட்டுமின்றி எந்த வாரத்தையும் சந்திக்க தயார் செய்த தந்தைக்கு என் நன்றிகள்! இந்த வாரம் இனிமையாகட்டும்!!!

    ReplyDelete