Tuesday, March 30, 2021

ரபி நானோ?

இன்றைய (31 மார்ச் 2021) நற்செய்தி (மத் 26:14-25)

ரபி நானோ?

யூதாசு ஏன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு வரலாற்றில் மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன:

ஒன்று, அவர் 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். அதாவது, தன் பணத் தேவைக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். இக்கூற்றுக்கு எதிராக இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: முதலாவது, ஏற்கெனவே யூதாசு பணத்தின் பொறுப்பாளராக இருக்கின்றார். ஆக, பணத்திற்கான தேவை அவருக்கு அதிகம் இருந்திருக்காது. இரண்டாவது, அவர் பணத்துக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்திருந்தால், இயேசு துன்புறுத்தப்படுதல் கண்டு அவர் காசுகளைத் தலைமைக் குருக்களிடம் திருப்பித் தரத் தேவையில்லை. தான் பணத்தைப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் அவர் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.

இரண்டு, இயேசு ஓர் அரசியல் மெசியாவாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் யூதாசு. ஆனால், இயேசு தன்னையே ஓர் ஆன்மிக மெசியாவாக முன்வைக்கத் தொடங்கியதால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக, ஏமாற்றம் கோபமாக மாற அவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், இயேசுவின் மேல் அவர் கோபம் கொண்டதாகவோ, அல்லது அவர் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் எந்தப் பதிவும் இல்லை.

மூன்று, இயேசு தன் மெசியா பணியேற்பில் தாமதிப்பதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவின் பணியைத் துரிதப்படுத்துவதற்காக அவரைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றே இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கின்றது. ஏனெனில், இயேசுவின் பணியின்போது அவரைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்தைப் பார்க்கின்ற யூதாசு, இயேசு சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே செல்வதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவுக்கு மக்களுடைய ஆதரவும் உடனிருப்பும் இருக்கும் என்று தவறாகக் கணக்கிட்டுவிடுகின்றார். 'ஓசன்னா!' பாடிய கூட்டத்தைக் கண்டவுடன் இன்னும் யூதாசுக்கு உற்சாகம் கூடியிருக்கும். ஆனால், 'ஓசன்னா!' பாடிய கூட்டம் 'சிலுவையில் அறையும்!' என்று பேசத் தொடங்கியடவுடன், யூதாசைப் பதற்றம் பற்றிக்கொள்கின்றது. தன் கணக்கு தவறிவிட்டதாக உணர்கின்றார். தான் தொடங்கிய கொடுமையைத் தானே முடித்து வைக்க நினைத்து தலைமைக் குருக்களிடம் செல்கின்றார். சென்று முறையிடுகின்றார். பெற்ற காசுகளைத் திரும்ப வீசுகின்றார். பாவம்! அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோற்கின்றன. விரக்தியில் தன்னைத் தானே மாய்த்துக்கொள்கின்றார். தன் தலைவரைக் காணவும் துணியாமல் போயிற்று அவருக்கு.

இந்த நிகழ்வைக் குறித்தே இயேசு, 'அவன் பிறவாமல் இருந்திருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்!' என்கிறார். 

நாம் ஒன்று நினைக்க, எதார்த்தம் வேறொன்றாக மாறுவது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று.

நல்லது என நினைத்து நாம் சொல்லும் ஒற்றைச் சொல் அடுத்தவருக்குத் தீயதாக மாறலாம்.

நல்லது செய்வதாக நினைத்து நாம் செய்த ஒற்றைச் செயல் அடுத்தவருக்குப் பெரிய கெடுதலாக மாறியிருக்கலாம்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறும் என்பதற்கு யூதாசு என்னும் கதை மாந்தர் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் இறுதி இராவுணவில் இருக்கின்றார். 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்!' என்று இயேசு சொன்னவுடன், சீடர்கள் ஒரு மாதிரியும், யூதாசு வேறு மாதிரியும் பதில் சொல்வதைக் கவனித்தீர்களா?

சீடர்கள் ஒவ்வொருவரும், 'ஆண்டவரே, நானோ?' என்கின்றனர்.

ஆனால் யூதாசு மட்டும், 'ரபி, நானோ?' என்கின்றார்.

உடனே இயேசு, 'நீயே சொல்லிவிட்டாய்!' என்கிறார்.

யூதாசு அப்படி என்ன சொன்னார்?

'ரபி' என்று சொன்னார்.

மற்றவர்கள் எல்லாம், 'ஆண்டவரே!' என, யூதாசு மட்டும், இயேசுவை, வெறும் 'போதகர், ஆசிரியர், ரபி' என்று பார்க்கின்றார். பாவம் அவர்! அவரால் இயேசுவை அப்படி மட்டுமே பார்க்க முடிந்தது. இயேசுவைத் தவறாகப் பார்க்கத் தொடங்கியதன் விளைவு, அவரைக் காட்டிக்கொடுக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், துன்புறும் ஊழியன் மூன்றாம் பாடலிலிருந்து வாசிக்கின்றோம். தான் இழிநிலையை அடைந்தாலும் தன்னுடன் தன் ஆண்டவராகிய கடவுள் இருப்பதாக உணர்கிறார் ஊழியன். 

'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்' என்கிறார் துன்புறும் ஊழியன்.

நம் நாவு கற்றோனின் நாவாக இருந்தால் இறைவனை ஏற்று அறிக்கையிட முடியும். 

இயேசுவை, 'ஆண்டவர்' என அறிக்கையிட மறுத்த யூதாசு, 'ரபி!' என்கிறார். 

அது அவருடைய கடின உள்ளமா?

அல்லது இயேசுவைப் பற்றிய தவறான எதிர்பார்ப்பா?

அல்லது இப்படித்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்னும் இறைத்திருவுளமா?

நம் ஒவ்வொருவரைப் போலவே யூதாசும் ஒரு புதிர்.

1 comment:

  1. இயேசுவின் சிந்தனை ஓட்டமும்,யூதாசின் சிந்தனை ஓட்டமும் முரண் பட்டிருந்த காரணத்தாலேயே இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் வேலையைத் துரிதமாகச் செய்கிறார் யூதாசு.மற்றவருக்கெல்லாம் “ ஆண்டவராகத்” தெரிந்த இயேசு யூதாசுக்கு வெறும் “ ரபி” யாகிப்போனார். காரணம் அவருடைய கடின உள்ளம் என்கிறார் தந்தை.

    “ நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட,ஆண்டவராகிய என் தலைவர் கற்றோனின் நாவை எனக்களித்துள்ளார்” என்று நம்மால் சொல்லமுடிந்தாலும்.....நாம் சொன்னாலும் பேறுபெற்றவர்களே!

    தந்தையின் இறுதி வரி “ நம் ஒவ்வொருவரைப் போலவே யூதாசும் ஒரு புதிர்.” மனத்தில் கொஞ்சம் கலக்கம்.”நாம் நினைப்பது நடக்காமல் போனாலும்...நடக்கும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுவதே விவேகம்.” புரிய வைக்க முயற்சித்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete