Saturday, August 15, 2020

மரிய ராஜ் நினைவேந்தல்

மதுரை உயர்மறைமாவட்டம் 

இன்று தன் மூத்த அருள்பணியாளர்களில் 

ஒருவரை இழந்து நிற்கின்றது. 

மகிழ்ச்சி

மன நிறைவு

மனச் சுதந்திரம்

மரிய ராஜ்!

மரியாள் விண்ணக ராஜ்யம் சென்ற இன்றே,

தான் இவ்வளவு நாள்கள் இங்கே கண்ட காணும் கடவுளைக் காண

அங்கே சென்று விட்டார் மரிய ராஜ்!

'அப்பொழுது, 'என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா? என்று ஆகார் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, 'காண்கின்ற இறைவன் நீர்' என்று பெயரிட்டழைத்தாள்' (தொநூ 16:13)

அருள்பணி மரிய ராஜ் அவர்களின் ஆன்மீகம், தனிமனித வாழ்வு, பிறரோடு உறவு என அனைத்திற்கும் ஊற்றாக இருந்தது மேற்காணும் விவிலிய வார்த்தைகள் மட்டுமே.

தன்னை இறைவன் காண்கின்றார் என்பதால் மகிழ்ச்சியாக இருந்தார்.

தன்னை இறைவன் காண்கின்றார் என்பதால் மனநிறைவோடு இருந்தார்.

தன்னை இறைவன் காண்கின்றார் என்பதால் மனச்சுதந்திரத்துடன் இருந்தார்.

இவர், தன் வாழ்வை, ஆகாரின் பாலைநிலப் பயணத்தின் உருவகமாகவே எண்ணியிருந்தார். பயணியாகவே தன் வாழ்ந்தார்.

(அ) பயணிகள் சுமைகள் அதிகம் வைத்துக்கொள்வதில்லை. அருள்பணி மரிய ராஜ் அவர்கள் எதையும் சுமக்கவில்லை. தன்னிடம் உள்ளதைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் எங்கள் இல்லத்தின்முன் உள்ளவர்களுக்கு வாரி வழங்கியவர். 

(ஆ) பயணிகள் சகப் பயணிகளோடு கோபித்துக் கொள்வதில்லை. அருள்பணி. மரிய ராஜ் அவர்களின் எந்த ஒரு சொல்லும் செயலும் யாருக்கும் காயம் இழைத்ததில்லை. அனைவரையும் கடவுளின் கண்களால் கண்டவர். 'மாட்சியின் பெரியோரைக் கண்டு அவர்; வியந்ததும் இல்லை. சிறியோரை இகழ்ந்ததும் இல்லை!'

(இ) பயணிகள் நிகழ்காலத்தில் வாழ்பவர்கள். நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்ந்தார் அருள்பணி. மரிய ராஜ். கடந்த காலத்தின் பதிவுகள் அவர்மேல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எதிர்காலம் பற்றிய பார்வைகள் அவருக்கு அச்சம் தரவில்லை.

உரோமையில் அவர் ஏறிய பாப்பிறை விவிலியக் கல்லூரியின் படிக்கட்டுக்களில் நானும் ஏறி பாடம் பயின்றேன் என்பதிலும், அவரோடு ஓராண்டு அருகிருந்தேன் என்பதிலும் நான் மகிழ்கிறேன். திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரிக்கு மாறுதலாகி நான் வந்தபோது, உடன் வந்து என்னை ஆசீர்வதித்தவர் என்பதிலும் நான் மகிழ்ந்து நன்றி கூறுகிறேன்.

அருள்பணி வாழ்வு என்னும் அழைப்பின் மகிழ்ச்சி.

எந்த நிலையிலும் தளர்ந்து போகாது மனநிறைவு.

தன் நம்பிக்கையை இறுதிவரை வாழ்ந்த மனச்சுதந்திரம்.

இவை நான் இன்று இவரிடம் கற்கின்ற பாடங்கள்.

அருள்பணி. மரிய ராஜ் இல்லாத பேராயர் இல்லம், 

ஆகார் இல்லாத ஆபிரகாமின் வீடு போலவே இருக்கும்.

தன் ஆசைகளைத் தனக்குள்ளே வைத்துக்கொண்டு 

பாலைவனத்தில் பயணப்பட்ட ஆகார் போல,

எங்களைவிட்டுப் புறப்பட்டுப் போன அன்பு அருள்பணியாளரே!

உம் ஆசைகளை எமக்கு ஆசீகளாகத் தரும்!

அன்புடன்,

உம் சகோதர அருள்பணியாளர்கள்


1 comment:

  1. கண்களைப்பனிக்க வைக்கும் ஒரு பதிவு. தன்னுடன் உறவாக ஒட்டி வாழ்ந்த ஒரு அருள்பணியாளருக்குத் தந்தை தரும் பிரியா விடை.” மாட்சியின் பெரியோரைக்கண்டு அவர் வியந்ததும் இல்லை; சிறியோரை அவர் இகழ்ந்ததும் இல்லை.”..... தந்தையின் இந்த வரிகளே போதும் அவர் யாரென்று உலகிற்கு உணர்த்த.அழைப்பின் மகிழ்ச்சி,மனநிறைவு,நம்பிக்கையுடன் கூடிய மனச்சுதந்திரம்.....இவையே இவரை அணிசெய்த அணிகலன்களாக்க் கூறுகிறார் தந்தை.இவர் இல்லாத பேராயர் இல்லம் ஆகார் இல்லாத ஆபிரகாமின் வீடு போல இருக்குமெனில் அந்த வெறுமையை மேலிருந்து தந்தை தன் ஆசியால் நிரப்பட்டும்! .இத்தனை அருமை பெருமைகளுக்குச் சொந்தக்கார்ரான அருள்பணியாளரை நானும் சந்தித்துள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே! இவரின் ஆன்மா இறைவனில் நிறைவடையட்டும்! தந்தை மரிய ராஜுக்கு ஒரு முகாரி ராகம் பாடிய தந்தைக்கு என் பாராட்டுக்கள்!

    ReplyDelete