நிறைவுள்ளவராக விரும்புதல்
'நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?' என்று தன்னிடம் கேட்டு வருகின்ற இளைஞரிடம், 'கட்டளைகளைக் கடைப்பிடியும்' என்கிறார் இயேசு.
பின், அக்கட்டளைகள் எவை என்பதை, பத்துக் கட்டளைகளிலிருந்து சிலவற்றை எடுத்தாண்டு விடையளிக்கிறார்.
தொடர்ந்து, 'நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடும்!' என்கிறார். இளைஞர் முகவாட்டத்தோடு செல்கின்றார்.
இங்கே, பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்த இளைஞன், இயேசுவின் இந்தக் கட்டளையை ஏற்க மறுத்துவிடுகிறார்.
அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது என்பது ஒரு காரணம்.
இயேசுவின் வார்த்தைகளைக் கட்டளையாக ஏற்றுக்கொள்ளாதது இன்னொரு காரணம்.
இங்கே, இயேசு, செல்வந்த இளைஞன் தன் சொத்துக்களை இழக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஏனெனில், இழத்தலுக்கு நிறைய வழிகள் இருக்கின்றன. செலவழித்தல், வீணடித்தல், பரிசாகக் கொடுத்தல், கடனாகக் கொடுத்தல் என்னும் நிறைய வழிகளில் ஒருவர் தன் சொத்துக்களை இழக்க முடியும். ஆனால், இங்கே, இழத்தல் என்பது, ஒருவர் தன்னிடம் உள்ளதை ஏழைகளின் வயிற்றுக்கு அல்லது வாழ்வுக்கு மாற்றுவது.
அல்லது, தானே ஓர் அடையாளமாக மாறுவது.
நிறைவாழ்வு என்பது குறைகளோடு இருக்கும் ஒருவரைக் கண்டுபிடித்து அவரை நிறைவுசெய்வது.
அவ்வளவுதான்!
ஆக, அடுத்தவர் மைய வாழ்வுக்கு இளைஞரை அழைக்கின்றார் இயேசு.
இயேசுவின் சமகாலத்தில், பத்துக் கட்டளைகள் எல்லாம் ஒவ்வொருவருடைய தனி மனித முன்னேற்றத்திற்காகவும், தூய்மைக்காகவும், அறநெறிக்காகவும் தேவையானவை எனக் கருதப்பட்டன. ஆனால், அவற்றைத் தாண்டி பிறரோடு இணைந்த ஓர் அறநெறிக்கு அழைக்கின்றார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 24:15-24), தன் இறைவாக்குப் பணியில், தன் மனைவியை இழக்கும் எசேக்கியேல் தானே ஓர் அடையாளமாக மாறி நிற்கின்றார். யூதா நாட்டினர் எசேக்கியேல் போலத் துக்கம் கொண்டாடவும் வழி அறியாமல் நாடு கடத்தப்படுவர் என்ற செய்தியை ஆண்டவராகிய கடவுள் அவருடைய இழப்பின் வழியாக வழங்குகின்றார்.
நாம் கற்கும் பாடங்கள் எவை?
நிலைவாழ்வு பற்றிய விருப்பம் கொள்தல்.
இயேசுவிடம் வருதல்.
முகமலர்ந்து செல்தல்.
“நிறைவு”..... இதன் பொருள் அனைவருக்கும் ஒன்றுபோல இருக்கத்தேவையில்லை. அவரவரிடம் இருப்பதையும்...இல்லாததையும் பொறுத்து மாறுபடும்.பாதிவயிறு நிறைந்தவனும் நிறைவு கொள்கிறான்; வயிறு முட்ட உண்டவனும் நிறைவு கொள்கிறான். நிறைவா இல்லை குறைவா? அதை நிர்ணயிப்பது அவரவர் மனதேயன்றி அவரிடம் இருக்கும் பொருளல்ல. செல்வந்தன் இளைஞனிடம் இருந்ததும் “மனக்குறைவே. “ இழத்தலுக்கு செலவழித்தல்,வீண்டித்தல்,பரசாக்க் கொடுத்தல் எனும் பல பொருள்களைத் தாண்டி “ இழத்தல் என்பது தன்னிடம் உள்ளதை ஏழைகளின் வயிற்றுக்கு அல்லது வாழ்வுக்கு மாற்றுவதும்” , “குறைகளோடு இருக்கும் ஒருவரை நிறைவு செய்வதுமே” என்தகிறார் தந்தை. பகிர்ந்து தின்றால் பசியாறும்; தானாகத்தின்றால் வீணாகப்போகும்” என்பது முதுமொழி.என்னிடம் எவ்வளவு உள்ளது என்று கணக்குப் பார்ப்பதை விடுத்து உள்ளதில் ஒருபங்கை அடுத்தவரின் வயிற்றுக்கு அல்லது வாழ்வுக்கு மாற்ற வழி சொல்லும் ஒரு அழகான பதிவு. இது என்னால் முடியுமெனில் இயேசுவை நோக்கி வரவும்,முகமலர்ந்து செல்லவும் கூட என்னாலும் முடியும்.கைமாறு கருதாது அலுங்கிக் குலுங்கி கொடுத்து என்னிடம் உள்ளதை அடுத்தவரின் வயிற்றுக்கு/ வாழ்வுக்கு மாற்ற கண்டிப்பாக என்னாலும் முடியும் என்ற நேர்மறை உணர்வைத் தந்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDeleteஆமென்!
ReplyDelete