Tuesday, August 25, 2020

ஏமாற்ற இடம் கொடாதீர்

இன்றைய (25 ஆகஸ்ட் 2020) முதல் வாசகம் (2 தெச 2:1-3,14-17)

ஏமாற்ற இடம் கொடாதீர்

தெசலோனிக்க நகர் திருஅவைக்கு புனித பவுல் எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து நாம் இந்நாள்களில் வாசித்துக் கொண்டிருக்கும். இறையியல் மற்றும் மேலாண்மையியல் கண்ணோட்டங்களில் இது  ஒரு முக்கியமான திருமடலாக இது பார்க்கப்படுகிறது. ஏனெனில், இரண்டாம் ஏற்பாட்டு நூல்களில் முதலில் எழுதப்பட்ட நூல் என அழைக்கப்படுகின்ற, 1 தெசலோனிக்கர் நூலில், பவுல், உடனடியாக நிகழவிருந்த இரண்டாம் வருகை பற்றிப் பேசுகின்றார். ஆனால், இரண்டாம் வருகை தள்ளிப்போகத் தொடங்கவே, புதிய நம்பிக்கையாளர்கள் சற்றே மனம் தளர்கின்றனர். அதாவது, உலகம் நாளை முடியப் போகிறது என யாரோ ஒருவர் எனக்குச் சொல்ல, நாளைக்கு உலகம் முடிந்துவிடும் என்ற எண்ணிக்கையில் நான் என் வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழி என அனைத்தையும் விற்று விடுகிறேன். அல்லது இலவசமாகக் கொடுத்து விடுகிறேன். அல்லது அவற்றை உண்டுவிடுகிறேன். ஆனால், நாளைக்கு உலகம் முடியவில்லை. மூன்றாம் நாளில், நான் எதைக் கொண்டு உயிர் வாழ்வேன்?

இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவான நிலையில், சிலர் தங்களுடைய பழைய நெறிகளுக்குத் திரும்புகின்றனர். இன்னும் சிலர் மனக்குழப்பம் அடைகின்றனர். இன்னும் சிலர் அப்படித் தங்களுக்குச் சொன்னவர்கள்மேல் கோபம் கொள்கின்றனர். இன்னும் சிலர் ஒன்றும் செய்ய இயலாமல் சோம்பித் திரிகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் பவுலுக்கு ஏற்படுகிறது: இவர்களுக்கு என்ன அறிவுறுத்துவது? இவர்களை எப்படி நெறிப்படுத்துவது?

இந்தப் பின்புலத்தில், இன்றைய முதல் வாசகத்தில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

'இரண்டாம் வருகை பற்றி யாராவது சொன்னால், அல்லது எழுதினால், மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம். திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர்!'

நான்கு மனித எதிர்மறை உணர்வுகளைப் பதிவு செய்கிறார் பவுல்:

மனம் கலங்க வேண்டாம்.

நிலைகுலைய வேண்டாம்.

திகிலுற வேண்டாம்.

ஏமாற வேண்டாம்.

நம் வாழ்வில் நாம் எந்தவொரு எதிர்மறை நிகழ்வையும் எதிர்கொள்கின்ற வேளையில் நம்மில் மேற்காணும் உணர்வுகள் எழுவது வழக்கம்.

கொரோனா நோய் பற்றிய அறிவிப்பு நமக்கு வந்தபோது, நாம் மனம் கலங்கினோம். நம் அறிவியல் மற்றும் மருத்துவம் அதற்குமுன் மண்டியிட்டபோது நாம் நிலைகுலைந்து போனோம். அங்கே, இங்கே என்று வந்த கொரோனா, நம் அலைபேசியில் நாம் சேமித்து வைத்திருக்கும் எண்ணைக் கொண்ட ஒரு நபருக்கு வந்தபோது திகிலுற்றோம். இந்த நிலையில், பல கட்டங்களில் அரசு இயந்திரங்களும் மருத்துவ பெருநிறுவனங்களும் நம்மை ஏமாற்றுகின்றன. 

இதற்குப் பதிலாக பவுல் மூன்று நேர்முக உணர்வுகளைக் கொண்டிருக்குமாறு அவர்களை அறிவுறுத்துகின்றார்:

(அ) அறிவுத்திறனின் ஆய்வுக்கு அனைத்தையும் உட்படுத்துங்கள். 'எல்லாரும் சொல்கிறார்கள்' என்று ஒரு பொதுஓட்டத்தில் ஓடத் தொடங்காமல், நின்று, 'இது என்ன? அது என்ன?' என ஆய்ந்தறிவது.

(ஆ) எதிர்நோக்குடன் இருங்கள். எல்லாம் மாறும் எனக் காத்திருத்தல். முடிவது அனைத்தும் இனிமையாகவே முடியும் என நம்பிக்கைகொள்ளல்.

(இ) ஊக்கம் கொள்ளுங்கள், ஊக்கப்படுத்துங்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொள்ளவதோடு, ஒருவர் மற்றவரையும் ஊக்குவிப்பது.


2 comments:

  1. எதிர்மறை உணர்வுகள் நம்மை உந்தித்தள்ளும்போது, அவை நம்மை இட்டுச்செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் செல்ல நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பவுலின் அறிவுறுத்தலோடும், நம் இன்றைய வாழ்க்கையின் எடுத்துக்காட்டுகளோடும் சமர்ப்பிக்கிறார் தந்தை.மந்தையோடு மந்தையாக நம் பயணத்தைத் தொடராமல் ஏன்? எதற்கு? போன்ற கேள்விகளின் பதிலறிந்து நம் பயணத்தைத் தொடரவும், ‘இதுவும் கடந்து போம்; அதுவும் இனிமையாகவே கடந்து போம்’ என்ற நம்பிக்கையை முன்வைக்கவும், மனத்தில் அச்சம் தலைவிரித்தாடுகையில் என்னை நானே ஊக்குவித்து எனக்கு அடுத்தவரையும் ஊக்கப்படுத்துவதுமே அவை.
    கொரோனா எனும் அசுரனோடு அரசும்,ஊடகங்களும் சேர்ந்து பொய்யான தகவல்களத்தந்து நம் மனத்தைக் கலங்கடிக்கும் பொழுதுகளில் இன்றைய அறிவுறைகளை நம் மனம் ஏற்று நடந்தால் நம்மைக் கொரோனா என்ன காலன் கூட நெருங்கப் பயம் கொள்வான்.காலமறிந்து....தேவையறிந்து வந்த ஒரு பதிவு! தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!


    ReplyDelete