இன்றைய (8 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 17:14-20)
ஏன் இயலவில்லை?
'அந்தப் பேயை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?'
- இப்படித்தான் இயேசுவிடம் கேட்கிறார்கள் சீடர்கள்.
பேய் பிடித்திருந்த சிறுவன் நலமாகும் நிகழ்வை மாற்கு நற்செய்தியாளர் மிக நீளமாக எழுதியிருந்தாலும், ஒத்தமைவு நற்செய்தி நூல்கள் மூன்றிலும் இந்நிகழ்வு பதியப்பட்டுள்ளது.
சீடர்களின் மேற்காணும் கேள்வி நமக்கு நிறைய வாழ்வியல் பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.
'ஏன் எங்களால் இயலவில்லை?'
(அ) தான் செய்கின்ற செயலில் தோல்வியுறும் ஒருவர் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். 'ஏன் உம்மால் முடிகிறது?' என்று அவர்கள் இயேசுவைப் பார்த்துக் கேட்டிந்தால் அது தவறு. அப்படிக் கேட்கப்படுகின்ற கேள்வியில் ஒப்பீடும், பொறாமையும், போட்டி இருக்கும். மாறாக, சீடர்கள் தங்களையே தன்னாய்வு செய்து பார்க்கின்றார்கள். ஆக, என் வாழ்வில் நான் தோல்வியைச் சந்திக்கும் தருணங்களில் நான் என்னை ஆய்வு செய்ய வேண்டுமே தவிர, வெற்றிபெற்ற மற்றவர்களோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து நேர விரயம் செய்யவோ, சோர்ந்து போகவோ கூடாது.
(ஆ) தாங்களும் செய்ய வேண்டும் என்ன ஆர்வம். தங்களிடமிருக்கும் குறையைக் கண்டுகொண்ட அவர்கள், அதை நிவர்த்தி செய்வதற்கான வழியைத் தேடுகின்றனர். ஆக, தோல்வியை ஏற்றுக்கொண்ட நான், அந்தத் தோல்வியை நான் வெற்றியாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற தேடல் கொண்டிருக்க வேண்டும்.
(இ) இயேசுவிடம் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் மனப்பக்குவம். இதுதான் அவர்களுடைய குழந்தை உள்ளம். இதுதான் சீடர்கள் கொண்டிருந்த தாழ்ச்சி. இயேசு தன் தந்தையைப் புகழும்போது, 'விண்ணரசின் மறைபொருள்களை குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' எனப் புகழ்கின்றார். திருத்தூதர்களே குழந்தைகள். தங்களுக்குத் தெரியாததை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளத் தயார்நிலையில் இருக்கின்றனர். தாழ்ச்சி உள்ளவர்கள் மட்டுமே தயார்நிலையில் இருப்பர்.
இயேசுவும்,
'நம்பிக்கை, இறைவேண்டல், நோன்பு' என்னும் மூன்று வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றார்.
நாம் இன்று கேட்க வேண்டிய ஒரு கேள்வி:
'என்னால் ஏன் ஆண்டவரே இயலவில்லை?' - என்று நான் எத்தனை முறை ஆண்டவர் முன் சரணடைந்துள்ளேன்?
என்னால் ஏன் ஆண்டவரே செபிக்க முடியவில்லை?
என்னால் ஏன் நம்பிக்கை கொள்ள இயலவில்லை?
என்னால் ஏன் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை?
என்னால் ஏன் பொறுமையோடு இருக்க முடியவில்லை?
என்னால் ஏன் மன்னிக்க முடியவில்லை?
என்னால் ஏன் படிக்க இயலவில்லை?
என்னால் ஏன் வாழ்வில் முன்னேற இயலவில்லை?
இப்படி
என்னால் ஏன் இயலவில்லை? என்று அவரிடம் கேட்டால், அவர் விடையுடன் காத்திருக்கின்றார்.
'இதுகூடத் தெரியாதா!' என அவர் நம்மைப் பார்த்து ஏளனம் செய்வதில்லை. கேலி பேசுவதில்லை. மாறாகக், கற்றுக்கொடுக்கின்றார். ஏனெனில், மனித நிலையின் வலுவின்மையையும் நொறுங்குநிலையையும் அறிந்தவர் அவர்.
என்னே ஒரு அழகான வாழ்க்கைப்பாடம்! பல நேரங்களில் கவனித்துப்பார்த்தால் நாம் பெற்ற வெற்றிகளைவிடத் தோல்விகளே நமக்கு வாழ்க்கையை செவ்வனே வாழக்கற்றுத்தருகின்றன. இல்லை..இல்லை...இல்லைஎன என்னை அண்டிவருபவரின் கேள்விகளுக்கு ‘ உன்னாலும் முடியும்!’ என்ற இயேசுவாக நான் மாற ஒரு வாழ்க்கைப்பாடம்.வலுவின்மையில் என்னிடம் வருபவர்களைப் பார்த்து கேலி,கிண்டல் செய்யாது அவர்களின் வலுவைக்கூட்ட என்னை நான் தயார்செய்தல் வேண்டும் எனச் சொல்லும் ஒரு பாடம்... ஏனெனில் மனித நிலையின் வலுவின்மையையும,நொறுங்குநிலையையும் அறிந்த ஒருவரே என்னை வழி நடத்துகிறார். ஆண்டவரே! நீர் செய்யும் அத்தனை விஷயங்களையும் இல்லை எனினும் ஓரிரு விஷயங்களையேனும் வாழ்ந்துகாட்டக் கற்றுத்தாரும்.
ReplyDelete“ஏன் தங்களின் கோணத்தில் என்னால் வாழ்க்கையைப் பார்க்க இயலவில்லை?” எனத்தந்தையைப் பார்த்துக்கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.வாழ்த்துக்கள்!