Sunday, August 2, 2020

நீச்சல் தெரியாதா?

இன்றைய (3 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 14:22-36)

நீச்சல் தெரியாதா?

இயேசு திபேரியக் கடல்மேல் நடந்து வரும் நிகழ்வில், பேதுருவும் கடல்மேல் நடக்க விரும்புவதை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார். கடல் என்பது யூதர்களைப் பொருத்தவரையில் தீமையின் அடையாளம். ஆக, பேதுருவுக்கும், அவரின் தலைமையில் வளர்ந்த தொடக்கத் திருஅவைக்கும் தீமையின்மேலும் அதிகாரம் இருந்தது எனக் காட்டுவதற்காகவும், பேதுருவுடனும் அவருடைய திருஅவையுடனும் இயேசுவும் உடனிருக்கிறார் என்பதைக் காட்டுவதற்காகவும் இந்நிகழ்வு இறையியல் நிகழ்வாக எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் ஆய்வர்கள். இந்த ஆய்வர்கள் இப்படித்தான் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

ஆனால், பாடத்தில் என்ன இருக்கிறது என்பதை நாம்தான் நமக்கேற்றவாறு பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு புள்ளி மற்ற புள்ளிகளோடு இணைய மறுக்கிறது. அந்தப் புள்ளியை மையமாக வைத்து இன்றைய நாளில் சிந்திப்போம்.

அது என்ன புள்ளி?

பேதுரு ஒரு மீனவர். திபேரியாக் கடல் என்றழைக்கப்பட்ட கலிலேயக் கடலின் கரையில் பிறந்து வளர்ந்தவர். ஆக, நீச்சல் அடிக்க அவருக்குக் கண்டிப்பாகத் தெரியும். ஏனெனில், ஏறக்குறைய நூறு மீட்டர் தொலைவு அவர் நீந்தியதாக யோவான் எழுதுகின்றார் (காண். யோவா 21:8).

நீச்சல் தெரிந்த ஒருவர் கடலில் எப்படி மூழ்க முடியும்? மேலும், திபேரியக் கடல் என்பது ஒரு யோர்தான் ஆற்றின் ஓர் ஏரி அவ்வளவுதான். அதிகபட்ச ஆழம் 141 மீட்டர்தான். அதுவும் வெகு சில இடங்களில் மட்டுமே. அங்கே காற்றின் வேகத்தைப் பொருத்து சிற்சில அலைகள் எழும்பும், வேகமாக அடங்கிவிடும். இப்போது மீண்டும் அதே கேள்வி, நீச்சல் தெரிந்த பேதுரு ஏன் மூழ்கினார்? அல்லது நீச்சல் தெரிந்த பேதுரு ஏன் நீந்தவில்லை?

இதற்கான கேள்வியை நான் அண்மையில் கண்ட இரண்டு காணொளிகளின் பின்புலத்தில் சிந்திப்போம்.

முதல் காணொளியின் தலைப்பு: 'இந்த ஒரு விதிமுறை உங்கள் வாழ்க்கையை மாற்றும்' (இதைக் காண கீழே உள்ள இணைப்பைத் தொடவும்). இதன் பதிவர் அருள்திரு குரு மித்ரேஷிவா அவர்கள். வாழ்க்கையை இரண்டு வகைகளில் வாழலாம்: (அ) விளையாட்டு என்று வாழ்வது, (ஆ) லீலா (நடனம்) என்று வாழ்வது. விளையாட்டு என்று வாழ்பவர்கள் தாங்கள் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று நினைத்து வாழ்வார்கள். தோல்வியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்கள் குடும்பம், நட்பு, வியாபாரம், படிப்பு, பயணம் என அனைத்தும் தங்களுக்கு வெற்றியாகவே முடியும் என்று நினைத்து விளையாடுவார்கள். விளைவு, நிறைய சோர்வும் ஏமாற்றமும் விரக்தியும் அடைவார்கள். லீலா என்று வாழ்பவர்கள் (லீலா என்பதும் ஒரு வகை விளையாட்டுதான்), விளையாட்டை விளையாட்டு என்ற நோக்கத்திற்காக மட்டும் விளையாடுவார்கள். இவர்கள் வெற்றியை விரும்பமாட்டார்கள். ஆக, தோல்வி வந்தாலும் துவண்டுவிட மாட்டார்கள். தங்கள் இயல்பில், தங்களுடைய தர்மத்தில், தங்களுடைய உண்மையில் எது தங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறதோ அதைச் செய்வார்கள். ஒரு மாமரம் முதல் வகையில் இருந்தது என்றால், தன் கனிகளை யாரும் உண்ணவில்லை என்றால், தன்மேல் யாரும் கல் எறிந்தால் அது கோபித்துக்கொள்ளும். ஆனால், அதுவே இரண்டாம் வகையில், தன் இயல்பான கனியை மட்டும் கொடுத்துவிட்டு அமைதி காக்கும். அடுத்தவர்கள் தன்னை உண்டாலும் மகிழாது. வெட்டினாலும் வருந்தாது. தன் தர்மத்தில் கனி கொடுத்துவிட்டு, தன் தர்மத்தில் அது விறகாகிவிடும்.

இரண்டாம் காணொளியின் தலைப்பு: 'உன் வாழ்க்கையை வீணாக்குவது' (இதைக் காண கீழே உள்ள இணைப்பைத் தொடவும்). இதன் கருத்துரையாளர் வணக்கத்துக்குரிய மேனாள் பேராயர் ஃபுல்டன் ஷீன் அவர்கள். உன் வாழ்க்கையை நீ வீணாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தாவீதின் இறுதிக்காலத்தில் ஒரு நிகழ்வு நடக்கிறது. தாவீது தான் பிறந்த ஊரான பெத்லகேம் வருகின்றார். சொந்த ஊருக்கு அவர் வரும்போது அந்த ஊரைப் பெலிஸ்தியர்கள் முற்றுகையிட்டுள்ளனர். முற்றுகையிட்ட அவர்கள் நகருக்குத் தண்ணீர் வழங்கும் கிணற்றைப் பூட்டி அங்கே காவல் காக்கின்றனர். தாவீதுக்கு தாகம் எடுக்கிறது. யாராவது எனக்குத் தண்ணீர் கொண்டுவருவீர்களா எனப் படைவீரரிடம் கேட்கின்றார். யோசப்பாசெபத்து, எலயாசர், மற்றும் சம்பா என்னும் மூன்று வீரர்களும் சென்று, பெத்லகேம் வாயிலிலிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து தாவீதிடம் கொடுக்கின்றனர். தன் உதடுகள் வரைக் குடுவையைக் கொன்று சென்ற தாவீது, அத்தண்ணீரை அப்படியே அவர்கள்முன் தரையில் ஊற்றுகின்றார்: 'தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் இரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எப்படி குடிக்க முடியும்?' (காண். 2 அர 23:17). தாவீது தண்ணீரை வீணாக்குகின்றார். இரண்டாவது நிகழ்வு, இயேசுவுக்காக நறுமணத் தைலக் குப்பியை உடைத்த தையல் பற்றியது. அவள் தான் சேமித்து வைத்திருந்த தன் தைலத்தைச் சொட்டு சொட்டாக அல்ல. உடைத்து அப்படியே அவரின் காலடிகளில் ஊற்றுகிறாள் (காண். லூக் 7:36-50, யோவா 12:1-8). தையல், தைலத்தை வீணாக்குகின்றாள். மூன்றாவது நிகழ்வு. இன்றைய நற்செய்தி வாசகம். பேதுரு, தன் இயேசுவால் தன் போதகரால் தூக்கிவிடப்பட வேண்டும் என்பதற்காக தனக்குத் தெரிந்தாலும் நீச்சல் அடிக்காமல், மூழ்கிப் போக முயல்கின்றார். தன் திறனை வீணாக்குகின்றார்.

பேதுரு மூழ்கியது நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். தனக்கு தெரிந்த தன் நீச்சல் திறனை அல்லது கலையைத் தன் போதகரும் ஆண்டவருமான இயேசுவுக்காக வீணாக்குகின்றார். அவர் தன் திறனைப் பயன்படுத்தியிருந்தால் அவர் வெற்றிக்காக விளையாடுபவர் போல இருந்திருப்பார். ஆனால், அவர் லீலா போல விளையாட ஆரம்பிக்கிறார். தன்னை கடல்மேல் நடந்து வா என்று சொன்னவன்தான் தன்னை இப்போது மூழ்கடிக்கிறான் என்பதும், தன்னை மூழ்கடிக்கும் அவனே தன்னைக் காப்பவன் என்றும் அவருக்குத் தெரியும். எல்லாவற்றிலும், இறைவனின் கரத்தை, லீலையைக் கண்டு, இரசிக்க ஆரம்பிக்கின்றார் பேதுரு.

இதையே இயேசு, 'தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர். தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்' (காண். லூக் 17:33).

தாவீது, தன் படைவீரர்களுக்காக தன் குவளைத் தண்ணீரை வீணாக்குகின்றார்.

தையல், இயேசுவுக்காக தன் நறுமணத் தைலத்தை வீணாக்குகின்றார்.

பேதுரு, தன் போதகருக்காக தன் நீச்சல் திறனை வீணாக்குகின்றார்.

இரண்டு கேள்விகள்:

(அ) நான் இன்று என் அறையில் பயன்படுத்தாமல், பாதுகாத்து வரும் ஓர் ஆடை, அல்லது நறுமணத் தைலம், அல்லது ஏதோ ஒன்றை அடுத்தவருக்காக வீணாக்க முடியுமா?

(ஆ) என் ஆண்டவருக்காக நான் இன்று என் திறன்களை, வாழ்வை, ஆற்றலை, பொருளை, உழைப்பை வீணாக்கத் தயாரா?

வெற்றி-தோல்வி என விளையாடுபவர்கள் சேகரித்துக் கொள்வார்கள்.

லீலா (நடனம்) என விளையாடுபவர்கள் வீணாக்குவார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தெரியும்: கொடுத்தவனும் அவனே! வீணடிக்கச் சொல்பவனும் அவனே! என்று. கடவுள்மேல் நடக்கும் அவர்களுக்கு, கடல்மேல் நடப்பதும் எளிது, மூழ்குவதும் எளிது.

To See the Aforementioned Videos Kindly Click Here:

Guru Mithreshiva, One Rule Changes Life (Tamil)

Fulton Sheen, Wasting Your Life (English)





3 comments:

  1. இரு காணொளிகளையுமே கண்டேன். மகாபாரதப்போரைக் கிருஷ்ணா தர்மத்தை நிலைநாட்ட விளையாண்ட விளையாட்டாகவே கூறுகிறார் சம்பந்தப்பட்டவர்.ஒரு கிரிக்கெட்டை, வியாபாரத்தை விளையாட்டாகப்பார்க்கலாம்.ஆனால் வாழ்க்கையை விளையாட்டாகப் பார்க்க இயலுமா? இந்த வாழ்க்கையில் தோற்றால் பரவாயில்லை.அடுத்த வாழ்க்கை ஜெயிக்கலாம் என நினைக்க இயலுமா? இதை ‘விளையாட்டு’ எனவும்,மற்றதை ‘லீலா’ எனவும் விவரிக்கிறார் தந்தை..நாம் நம் மாணாக்கருக்கு, எதிலும் ஜெயிக்க வேண்டுமெனும் வெறியோடு விளையாட வேண்டும் என்று சொல்கிறோம். ( லீலா) இது முன்னுக்குப் பின் முரண் இல்லையா? இதை விவிலியத்தோடு ஒப்பிட்டு “லீலாவைச்சேர்ந்தவர்கள் வீணாக்குகிறார்கள்” என்பது கொஞ்சம் இடித்தாலும் தந்தையின் பின்பகுதி அதற்கு நன்றாகவே விளக்கம் தருகிறது.ஏனெனில் அவர்களுக்குத்தெரியும்....” கொடுத்தவனும் அவனே! வீண்டிக்கச்சொல்பவனும் அவனே!” என்று.தாவீது தன் படைவீர்ர்களுக்குத் தண்ணீரைக் கொடுத்ததும்,தையல் இயேசுவுக்காக நறுமணத்தைலத்தை செலவழித்ததும், பேதுரு தன் போதவருக்காகத் தன் நீச்சல் திறனை விட்டுக்கொடுத்ததும் ‘வீண்’ என்றால் நானும் கூட ஆண்டவருக்காக என்னிடமுள்ள அனைத்தையும் வீணாக்கத் தயார். இப்படி ஒரு கோணத்தில் என்னை யோசிக்க வைத்த தந்தையைப் பாராட்டுகிறேன்.

    ஏதோ எதிர்மறையாக விஷயங்களை ஆரம்பித்துப் பின் அத்தனையையும் நேர்மறை விஷயங்களாக மாற்றும் தந்தையின் வித்தையை இரசிக்கிறேன்.இப்பொழுதெல்லாம் தந்தையின் எழுத்துக்கள் என்னைப்போல ஒரு சாமானியனின் புரிதலுக்கு மேம்பட்டதாகவே உள்ளது.ஏதோ ‘பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்தது’ போல் சுற்றி நடக்கும் அத்தனையுமே எதிர்மறை உணர்வுகளைத் தூண்டுகையில் தந்தையின் பதிவுகள் எனக்கு( கண்டிப்பாக என்னைப்போல் நிறையப்பேர் இருப்பார்கள்.) ஒரு நேர்மறை உணர்வையும்,விவிலியத்தில் இன்னும் கொஞ்சம் புரிதலையும் தருவது நிஜம். தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete