Monday, August 3, 2020

புனித ஜான் மரிய வியான்னி

இன்றைய (4 ஆகஸ்ட் 2020) திருநாள்

புனித ஜான் மரிய வியான்னி

இன்று மறைமாவட்ட அருள்பணியாளர்களின், பங்குப் பணி செய்கின்ற அருள்பணியாளர்களின், எல்லா அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நமக்கு வேற அப்பா-அம்மா கிடைச்சிருக்கக் கூடாதா என்று சின்ன வயசில பலர் ஏங்குவது போல, மறைமாவட்ட அருள்பணியாளர்களாகிய எங்களுக்கு வேறு பாதுகாவலர் கிடைத்திருக்கக் கூடாதா என்று சில நேரங்களில் நான் எண்ணியதுண்டு.

ஜான் மரிய வியான்னி (John Mary Vianney)

காண்பதற்கு ஈர்ப்பான உருவம் அவருக்கு இல்லை.

காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் அவர் எழுதவில்லை.

அகுஸ்தினார், அக்வினாஸ் போல இறையியல் கருத்துருக்களை வழங்கவில்லை.

இஞ்ஞாசியார் போல பெரிய சபையை நிறுவி மறைப்பணி செய்யவில்லை.

சவேரியார் போல நிறைய நாடுகளுக்குப் பயணம் செய்து நற்செய்தி அறிவித்ததில்லை.

செபஸ்தியார், அருளானந்தர் போல மறைக்காக இரத்தம் சிந்தவில்லை.

இலத்தீன் மொழியை அவரால் படிக்க முடியவில்லை. அவருடைய அறிவுக்கூர்மை மிகவும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால்தான், இன்று ஆங்கில அகராதியில், 'Vianney Syndrome' என்ற சொல்லாட்சியே உருவாகிவிட்டது. அதாவது, சாதாரண மனிதர் போல இருந்தாலும், அறிவுக்கூர்மை குறைவாக உள்ளவர்களின் அறிவுநிலையை அகராதி இப்படி அழைக்கிறது.

தன்னை மற்றவர்கள் கழுதை என அழைத்ததாகவும், 'ஆனால், இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்று அவர் தன் சக மாணவர்களிடம் சொன்னதாகவும், அவருடைய சமகாலத்து ஆசிரியர் ஒருவர் எழுதுகிறார்.

மனிதர்களின் பார்வையில் குதிரைகளும், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் மேன்மையாகத் தெரிந்த அக்காலத்திலும், தெரிகின்ற இக்காலத்திலும், 'கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவையாக இருந்தது!' என்று புரிந்தவர், வாழ்ந்தவர், புனிதராக உயர்ந்தவர்.

இவரிடம் நான் கற்கும் ஆறு பாடங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:

1. காதுகளை மூடிக்கொள்தல்

வண்டு கதை ஒன்று சொல்வார்கள். இயற்பியலில் காற்றியக்கவியலில் (aerodynamics) ஒரு கோட்பாடு உண்டு. இறக்கைகள் உந்தித் தள்ளும் காற்றின் நிறைக்குக் குறைவான நிறை கொண்ட எந்த உயிரினமும் பறக்க முடியாது. ஆனால், இதற்கு ஒரு விதிவிலக்கு வண்டு. ஏன் வண்டுகளால் பறக்க முடிகின்றன? அவற்றுக்கு இயற்பியல் தெரியாது அவ்வளவுதான். 'உன்னால் முடியாது என்று உன்னிடம் யாராவது சொன்னால், நீ உடனடியாகக் காதுகளை மூடிக்கொள். அவர்கள் தங்களால் முடியாததை மற்றவர்களால் முடியாது என்று சொல்லி உனக்கு முட்டுக்கட்டை போடுவார்கள். நீ அதன்மேல் ஏறிச் செல்ல வேண்டும்' என்று Christ Gardner தன் மகன் Christopher-க்கு, The Pursuit of Happyness ('Happiness' is spelt with 'y' here) என்னும் திரைப்படத்தில் அறிவுரை கூறுவார். தன்னைப் பற்றிய எல்லா எதிர்மறையான செய்திகளுக்கும் காதுகளை மூடிக்கொண்டார். தன்னை அழைத்த இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவருக்குத் தன் இதயத்தைத் திறந்தார் வியான்னி.

2. அருள்பணியாளர் அடையாளம் போதும்

'நான் ஓர் அருள்பணியாளர், அது போதும் எனக்கு!' - இதுதான் வியான்னியின் வாழ்வின் இலக்கு, நோக்கம், செயல்பாடு என இருந்தது. இன்று அருள்பணியாளர்-ஆசிரியர், அருள்பணியாளர்-வழக்கறிஞர், அருள்பணியாளர்-சமூகக் காவலர், அருள்பணியாளர்-மருத்துவர், அருள்பணியாளர்-எழுத்தாளர் என நிறைய இரட்டை அடையாளங்களை நாம் தேடுகிறோம். அருள்பணியாளர் என்பதே ஓர் அடையாளம்தான். அந்த அடையாளத்தை முழுமையாக வாழ்ந்தால் - செபித்தால், திருப்பலி நிறைவேற்றினால், மக்களைச் சந்தித்தால், அவர்களின் குறைகளை நிறைவு செய்தால், தன் உடல்நலனை நன்றாகக் கவனித்துக்கொண்டால் - அதுவே போதும். இரட்டை அடையாளங்களால் பல நேரங்களில், 'இரு மானை விரட்டுபவர் ஒரு மானையும் பிடியார்' என்ற நிலையில்தான் முடிகிறது என்பதை நான் என் வாழ்விலேயே கண்டுவருகிறேன். அதிக சோர்வும், ஏமாற்றமும் ஏற்பட்டு, காற்றைப் பிடிக்கப் பாடுபடுவதுபோல ஆகிவிடுகிறது. ஆனால், தன் ஒற்றை அடையாளத்தை நிறைவாக ஏற்று, அதை முழுமையாக வாழ்ந்தார் வியான்னி.

3. சிறுநுகர் (minimalist) எண்ணம், சிறுநுகர் வாழ்வு

இவருடைய தாழ்ச்சி இவருடைய சிறுநுகர் எண்ணத்தில் வெளிப்பட்டது. இவருடைய எளிமை அவருடைய சிறுநுகர் வாழ்வில் வெளிப்பட்டது. நான் எளிமையை இப்படித்தான் பார்க்கிறேன். அதாவது, என் நுகர்தலைக் குறைத்தலே எளிமை. நுகர்தலை அதிகரிக்க, அதிகரிக்க,பொருள்களை அதிகரிக்க, அதிகரிக்க, நான் எனக்கும் கடவுளுக்கும், எனக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள தூரத்தைக் கூட்டிக்கொண்டே போகிறேன். என்னைப் பற்றியே நிறைய எண்ண, எண்ண, இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறேன். குறைவான எண்ணங்கள், குறைவான எதிர்பார்ப்புகள், குறைவான பொருள்கள், நிறைவான வாழ்வு எனத் தன்னையே கட்டமைத்துக் கொண்டார் வியான்னி.

4. தெளிவான மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு (Clear Pastoral Program)

வியான்னியின் மேய்ப்புப் பணிக் கட்டமைப்பு மூன்றே விடயங்களை மட்டுமே கொண்டிருந்தது: திருப்பலி நிறைவேற்றுதல், பாவசங்கீர்த்தனம் கேட்டல், மறைக்கல்வி கற்பித்தல். அவருடைய சமகாலத்தில் இதுதான் மக்களின் தேவையாக இருந்தது. தேவைகளை உணர்ந்து, தெளிவாகத் தன்னைக் கட்டமைத்துக்கொண்டார் வியான்னி. ஆனால், இன்று நம் பங்குகளில் நிறைய மேய்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன: திருப்பலி நிறைவேற்றுதல், மறைக்கல்வி எடுத்தல், அருள்சாதனங்களை வழங்குதல், இல்லங்கள் சந்திப்பு, இயக்கங்கள், பக்தசபைகள், குழுக்கள், சந்திப்புக்கள், திருப்பயணங்கள், சிறப்பு தியானங்கள், பக்தி முயற்சிகள், பிறரன்புச் செயல்கள். இன்று நிறைய தேவைகள் இருக்கின்றன. ஆனால், தெளிவுகள் இல்லை.

5. நிலைப்புத்தன்மை (stability)

தன் அருள்பணி வாழ்வு முழுவதுமே வியான்னி ஒரே ஒரு பணித்தளத்தில் - ஆர்ஸ் நகரில் - மட்டுமே பணியாற்றினார். பங்கு அருள்பணியாளர்களை மாற்றுவதற்கு யார் கற்றுக்கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆயர்கள் பெரும்பாலும் இடம் மாறுவதில்லை. திருத்தந்தையர்கள் இடம் மாறுவதில்லை - அவர்கள் ஓய்வு பெற்றாலும்!  இறக்கும் வரை அவர்கள் ஒரே இடத்தில் இருக்கின்றனர். அப்படி இருக்க, அருள்பணியாளர்கள் மட்டும் ஏன் இடம் மாற வேண்டும்? பற்றின்மைக்கான ஒரு பயிற்சி இது என்கிறது திருஅவைச் சட்டமும் போதனையும். ஆனால், மேய்ப்புப் பணியை இது மிகவே பாதிக்கிறது. வங்கிகளில் மேனேஜர் மாறுவது போல, பங்குகளில் அருள்பணியாளர் மாறுவது நடக்கிறது. அப்படி என்றால், அருள்பணியாளர்கள் தங்கள் மக்களை வெறும் 'கஸ்டமர்' என்றுதான் பார்ப்பார்களே தவிர, 'என் மக்கள்' என்று அவர்களைப் பார்க்க மாட்டார்கள். அருள்பணியாளர் என்பவர் மேய்ப்பர். அவர் மேனேஜர் அல்ல. நிலைப்புத்தன்மைதான் நான் கால்களை ஓரிடத்தில் ஊன்றி, மக்களைத் தெரிந்து கொண்டு, அவர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்றி, சில நேரங்களில் அவர்களோடு அல்லது அவர்களுக்காக இறக்க முடியும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பூனைக்குட்டிகளைத் தூக்கிகொண்டுச் செல்லும் தாய்ப்பூனை போல அருள்பணியாளர்கள் இருந்தால் அருள்பணியில் தொய்வு ஏற்படும். தன் ஆர்ஸ் நகரம் தன்னை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதன் தட்பவெட்பநிலை தன் உடலுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், தன் சொந்த ஊரைவிட தான் தூரமாக இருந்தாலும், தன் மக்களுக்காக இறுதிவரை அதே இடத்தில் நிலைப்புத்தன்மை கொள்கிறார் வியான்னி.

6. மாற்றம் கண்முன்னே நடக்கும்

'விதை விதைச்சவுடனே பழம் சாப்பிட முடியுமோ?' என்பது எதார்த்தமான சொல்லாடல். ஆனால், சாப்பிட முடியும் என்று காட்டியவர் வியான்னி. மது, கேளிக்கை, பொழுதுபோக்கு என்ற மூன்று பிறழ்வுகள் கோலோச்சிய இடத்தை, தன் செபத்தாலும், உடனிருப்பாலும், எளிய வாழ்வாலும் புரட்டிப் போட்டார் வியான்னி. யாருமே செல்ல அஞ்சிய ஓர் இடத்திற்கு, இரயில்களில் மக்கள் குவிந்தனர். தன் கண் முன்னே மாற்றத்தைக் கண்டார் வியான்னி. நம் கண்முன்னே மாற்றத்தைக் காண இயலாதபோதுதான் அருள்பணி வாழ்வில் சோர்வு வருகிறது. மாற்றம் நம் கண்முன்னே சாத்தியம் என உணர்த்துகிறார் வியான்னி.

இம்மாபெரும் மனிதரை மறைமாவட்ட அருள்பணியாளர்களிய நாங்கள் பாதுகாவலராகப் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறோம்.

இவரின் முன்மாதிரி எங்களைத் தூண்டி எழுப்புவதாக! இவரின் மன்றாட்டு எங்களுக்காகப் பரிந்து பேசுவதாக!

2 comments:

  1. Amen.

    புனித ஜான் மரிய வியானி, எங்களையும், வழிநடத்துவாராக🙏

    நன்றி.

    ReplyDelete
  2. “ஜான் மரிய வியான்னி”.... ஆங்கில அகராதியில் ‘ Vianney Syndrome’ என்ற ஒரு வார்த்தை இவரை முன் வைத்தே உருவாகும் அளவுக்கு இவர் புத்திக்கூர்மையில்
    குறையுடையவராக இருந்திருப்பினும் “ இந்தக் கழுதை மட்டுமே ஆண்டவருக்குத் தேவை” என்று புரிந்தவர்...வாழ்ந்தவர்...புனிதராக உயர்ந்தவர்... இந்தப் புனிதரை வர்ணிக்க வேறென்ன வார்த்தைகள் தேவை? என நம்மை நினைக்க வைக்கும் அளவுக்கு இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் தந்தை.தங்கள் வாழ்வில் மாற்றம் காண இயலாமல் சோர்வு வரும் நேரங்களில், மாற்றம் தங்கள் கண் முன்னே சாத்தியம் என்பதை அனைத்து அருட்பணியாளர்களும் உணர ஆண்டவன் துணைபுரிவாராக! இவரைப் பாதுகாவலராகப் பெற்ற அனைத்து அருட்பணியாளர்களும் அவரின் வழி நடக்க வாழ்த்துகிறேன்! அனைத்து அருட்பணியாளர்களுக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!

    ஒரு மடு அளவுக்கு புனித ஜான் மரிய வியான்னியை இறக்கிப்பேசுவது போல் பேசிப் பின் மலையளவு அவரை உயர்த்திவிட்ட தந்தைக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete