Tuesday, August 11, 2020

உங்கள் உறவு தொடரும்

இன்றைய (12 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 18:15-20)

உங்கள் உறவு தொடரும்

குடும்ப அல்லது குழும வாழ்வில் உறவுச் சிக்கல்கள் எழுவது இயல்பு. ஏனெனில், நம் உறவுநிலைகளில், நம் உடல் மட்டுமல்ல, மாறாக, உள்ளமும் உராய்வதால் சில நேரங்களில் காயங்கள் உருவாகின்றன. கிறிஸ்தவக் குழுமம் உறவுச் சிக்கல்களற்ற குழுமமாக இருக்க வேண்டும் என இயேசு நினைக்கவில்லை. ஆனால், உறவுச் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளும் வழிகளை அது அறிந்திருக்க வேண்டும் என நினைத்தார்.

ஒருவர் மற்றவருக்கு எதிராகப் பாவம் செய்யும்போது ஏற்படுகின்ற குழுமச் சிக்கலைத் தீர்ப்பது பற்றி இன்றைய நற்செய்தியில் இயேசு அறிவுறுத்துகின்றார். நான் எனக்கு அடுத்திருப்பவருக்கு எதிராகச் செய்யும் பாவம் எதுவாக இருக்கும்? கோபம் கொள்தல், பொய்ச் சான்று சொல்தல், அவமதித்தல், பொறாமை கொள்தல், புறங்கூறுதல், நம்பிக்கை துரோகம் செய்தல், புண்படுத்துதல், கேலி செய்தல், தாழ்வாக நடத்துதல் போன்றவை.

இங்கே இயேசு ஒரு புரட்சி செய்கின்றார். என்ன புரட்சி? 

'நீங்கள் அடுத்தவர்களுக்கு எதிராகக் குற்றம் செய்தால்' என்பது அல்ல. மாறாக, 'அடுத்தவர்கள் உங்களுக்கு எதிராக மேற்காணும் குற்றங்களைச் செய்தால் நீங்கள் அவரிடம் செல்லுங்கள்' என்கிறார் இயேசு. அதாவது, என்னிடம் யாராவது கோபப்பட்டால், அவர் அல்ல, மாறாக, நானே அவரைத் தேடிச் செல்ல வேண்டும். எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவரைத் தேடி நான் செல்ல வேண்டும்.

எப்படிச் செல்ல வேண்டும்?

மூன்று படிநிலைகளை வரையறுக்கின்றார் இயேசு.

முதலில், அவரும் நானும் தனித்திருக்கும்போது அவரிடம் நான் அவரிழைத்த குற்றம் பற்றிப் பேச வேண்டும். இதைச் செய்ய எனக்கு நிறையத் துணிச்சலும் திறந்த உள்ளமும் வேண்டும்.

இரண்டாவதாக, என்னுடன் இரண்டு அல்லது மூன்று பேரைச் சேர்த்துக்கொண்டு செல்ல வேண்டும். அவரை மிரட்டுவதற்காக அல்ல. மாறாக, நீதியான முறையில் எங்கள் பேச்சு நடக்கிறது என்பதை மேற்பார்வையிட.

மூன்றாவதாக, திருச்சபையிடம் அல்லது குழுமத்திடம் சொல்ல வேண்டும். 

இயேசுவின் அறிவுரை நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) அடுத்தவரின் குற்றத்திற்கும் நான் பொறுப்பேற்க வேண்டும். இப்படி இருப்பதுதான் கடவுள் மனநிலை. மாரியே புஸ்சோ என்னும் நாவலாசிரியர் எழுதிய, 'தெ காட்ஃபாதர்' என்னும் புதினம் புகழ்பெற்றது. இது திரைப்படமாகவும் வந்துள்ளது. 1940களில் அமெரிக்காவில் இருந்த மாஃபியா கும்பல் பற்றிய புதினம் இது. அதில் இப்படியான ஒரு பகுதி இருக்கிறது: 'சிலர் அனைத்தையும் தங்கள்சார்ந்ததாகவே எண்ணுவர். கடவுள் போல. ஒரு சிட்டுக்குருவியின் இறகு ஒன்று விழுந்தாலும் அதற்குத் தாங்களே பொறுப்பு என்பது போல செயலாற்றுவர். அப்படித்தான் செயலாற்றுவார் காட்ஃபாதர். அனைத்திற்கும் பொறுப்பேற்பவர்களுக்கு எந்த விபத்தும் நடப்பதில்லை.' ஆக, நான் அடுத்தவரின் தவறுக்கும் பொறுப்பேற்று அவரிடம் சென்று உரையாடலைத் தொடங்க வேண்டும்.

(ஆ) உறவு தொடரும். எந்த நிலையிலும் மனித உறவுகள் முறிவதை இயேசு விரும்பவில்லை. ஒருவர் மற்றவரை அன்பினால் வெற்றி கொள்தல் அவசியம். எப்படிப்பட்ட மனிதரோடும் உறவுநிலை தொடர வேண்டும் என்பதே இயேசுவின் அறிவுரை.

(இ) தனிமையிலிருந்து குழுவிற்கு. பல நேரங்களில் உறவுச் சிக்கல்கள் எழும்போது நாம் மற்றவர்களிடம் அல்லது பொதுவில் அந்த நபரைப் பற்றி தவறாகப் பேசிவிட்டு, கடைசியாக அவரை நேருக்கு நேர் எதிர்கொள்கிறோம். தலைகீழான இந்தச் செயல்பாடு உறவு விரிசலையே ஏற்படுத்தும். சிக்கல் தொடர்பான நபர் தவிர வேறு யாரிடமும் அவரைப் பற்றிப் பேசாதிருப்பது நலம். ஏனெனில், ஒருவர், தான் மற்றவர்களின் எதிர்மறையான பேசுபொருளாக ஆவதை ஒருபோதும் விரும்புவதில்லை. நாம் ஒவ்வொருவரும் மற்றவரின் தனியுரிமை மேல் அக்கறை கொள்ள வேண்டும். அடுத்தவரின் மாண்பிற்கும் மதிப்பிற்கும் தீங்கு நேருமாறு எதையும் பேசவோ, செய்யவோ கூடாது.


2 comments:

  1. ஒவ்வொரு மனிதனும் உயர்வாக நினைக்க வேண்டிய ‘உறவு’ குறித்த தகவல்.இந்த ‘உறவு’ எனும் பொக்கிஷத்தைக் காத்துக்கொள்ளும் வழிகளைச் சொல்ல வருகிறது இன்றையப்பதிவு.” ஒரு சிட்டுக்குருவியின் ஒரு சிறகு விழுந்தாலும் தானே பொறுப்பு என்று எண்ணும் காட்ஃபாதர் போல அனைத்திற்கும் பொறுப்பேற்பவர்களுக்கு எந்த விபத்தும் நடப்பதில்லை.” அருமை! ஆனால் அதற்கென்று ஒரு தைரியம் வேண்டுமே! மனித உறவுகளில் அன்பினால் மட்டுமே வெற்றிகொள்தல் சாத்தியம் என்பதும்,எப்பேர்ப்பட்ட மனிதரோடும் உறவுகொள்தல் அவசியம் என்பதும் இன்றையக் கருத்துப்பெட்டகம் நமக்கு முன் வைக்கும் தகவல்.உறவில் தவிர்க்க வேண்டிய முக்கியமான தகவல்....ஒருவரைப்பற்றி சபையில் புறங்கூறிவிட்டு தனிமையில் வருத்தம் தெரிவித்தல்.. சம்பந்தப்பட்டவரை கையறு நிலைக்கு இழுத்துச்செல்லும் விஷயம். நான் கல்லூரியில் படிக்கையில் ஒரு விஷயம் ஒரு விதியாகவே பார்க்கப்பட்டது. ஒரு நாலுபேர் சேரந்திருக்கையில் நாம் பகிரும் விஷயங்கள் அந்த நால்வரைப்பற்றியே இருக்கவேண்டுமே யன்றி அங்கு இல்லாத யாரைப்பற்றியும் அல்ல. உறவு மேம்பட இது நல்லதொரு யோசனையாகவே இருந்துள்ளது. நல்லதொரு விஷயத்தை நறுக்காகப் பதிவிட்ட தந்தைக்கு நன்றிகள்! சந்தடி சாக்கில் தந்தை U.S உடனான அவரின் உறவும் தொடரவேண்டுமென்கிறாரா? தெரியவில்லை. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. I love us.... Sorry Father! For my wrong interpretation of ‘us’. us doesn’t stand for United States but it is “நம்மை”. ‘ நான் நம்மை அன்பு செய்கிறேன்’. Great!

    ReplyDelete