Wednesday, August 5, 2020

ஆண்டவரின் உருமாற்றம்

இன்றைய (6 ஆகஸ்ட் 2020) திருநாள்

ஆண்டவரின் உருமாற்றம்

இயேசுவின் உருமாற்றம் சீடர்களுக்கு உளமாற்றம் என்று இந்த நாளின் பொருளைப் புரிந்துகொள்ளலாம்.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மூன்று விடயங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

(அ) வாக்களிக்கப்பட்ட நாட்டில் மோசே

உருமாற்ற அல்லது தோற்றமாற்ற நிகழ்வில், மோசேயும் எலியாவும் தோன்றுகின்றனர். முதல் ஏற்பாட்டில், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய மோசேக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், அதே மோசே இன்று, தாபோர் மலையில், அதாவது வாக்களிக்கப்பட்ட நாட்டில் தோன்றுகிறார்.

(ஆ) மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர்

திருச்சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவோடு என்ன பேசிக்கொண்டிருந்தன என்பதை நற்செய்தியாளர்கள் பதிவு செய்யவில்லை. இயேசுவில் அவை நிறைவேறுவதாகப் பேசிக்கொண்டார்களா அல்லது எப்போது நிறைவேறும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை.

(இ) 'செவிசாயுங்கள்' என்ற கட்டளை கொடுக்கப்பட்டவுடன் சீடர்கள் அஞ்சுகிறார்கள்

இயேசுவின் முகம் ஒளிர்வதோ, அவருடைய ஆடை வெண்மையானதோ, மோசேயும் எலியாவும் தோன்றியதோ சீடர்களுக்கு அச்சம் தரவில்லை. 'தம்பிகளா! இதைக் கேளுங்கள்!' என்றவுடன் அவர்களை அச்சம் பற்றிக்கொள்கிறது.

இன்றைய நாள் தரும் செய்தி என்ன?

இயேசுவின் உருமாற்றத்தை காணும் சீடர்கள் உளமாற்றம் அடைகிறார்கள். எப்படி?

மோசேயுடனும், எலியாவுடனும் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவரை வெறும் மனிதர் என்றே அறிந்துகொள்கின்றனர் சீடர்கள்.

ஆனால், வானத்திலிருந்து குரல் கேட்டவுடன், முகங்குப்புற விழுகிறார்கள். முகங்குப்புற விழுதல் என்பது கடவுளுக்குச் செய்யப்படும் வழிபாட்டின் அல்லது வணக்கத்தின் குறியீடு.

இயேசுவை, மனிதர் என்ற நிலையிலிருந்து கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தும் புரிதல் இங்கேதான் நடந்தேறுகிறது.

மேலும், சீடர்கள் புத்திசாலிகள். உடடினயாக இந்த விடயத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.

இயேசுவின் இவ்விரண்டு தன்மைகளும் - மனிதம் மற்றும் இறைமை - இசைவாய்ப் பொருந்துகின்றன.

நம்மில் உள்ள இவ்விரண்டு தன்மைகளையும் நாம் அறிந்தால், மனிதத்திலிருந்து இறைமைக்குப் புறப்பட்டுச் சென்றால் - நமக்கும் உருமாற்றம் சாத்தியமே!

2 comments:

  1. வானத்திலிருந்து கேட்ட குரல் சீடர்களை முகம் குப்புற விழச்செய்தது, மனிதனைக் ‘கடவுள்’ எனும் நிலைக்கு உணர்த்தும் செயலெனில், நாம் ஆலயம் சென்று வானுறையும் இறைவனை வணங்கும் ஒவ்வொரு முறையும் “ இறைநிலைக்கு” உயர்த்தப்படுகிறோமா?இயேசுவிடமுள்ள மனிதம் மற்றும் இறைமை நம்மிடமும் உள்ளது என்பதை நாமறிந்தால், மனித்த்திலிருந்து இறைமைக்குப் புறப்பட்டுச் சென்றால்- நமக்கும் ‘உருமாற்றம்’ சாத்தியமே! மனிதனில் இறைமையைப் புகுத்த தனக்கே உரித்தான வார்த்தைகளால் வழிசொல்லும் தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  2. “ இயேசுவின் உருமாற்றம்” ஒவ்வொரு முறையும் கொண்டுவரும் ஒரு புதுச்செய்திக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete