Friday, August 14, 2020

விண்ணேற்பும் விடுதலையும்

இன்றைய (15 ஆகஸ்ட் 2020) திருநாள்

விண்ணேற்பும் விடுதலையும்

இன்று நம் தாய்த்திருநாட்டின் 74வது விடுதலைப் பெருவிழாவையும், தம் அன்னை கன்னி மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவையும் கொண்டாடி மகிழ்கிறோம்.

கொரோனாப் பெருந்தொற்று காலத்தில், விடுதலை என்பதன் அவசியத்தை நாம் மிகவே உணர்கிறோம். இதே தொற்றைப் பயன்படுத்தி, மக்களை எப்படி அடிமைப்படுத்தலாம் என்பதை நம் அரசு செய்கிறது. ஏறக்குறைய 200 ஆண்டுகள் நாம் இங்கிலாந்து அரசின் பிடியில் இருந்தோம். விடுதலை பெற்றோம். நம் ஆட்சியாளர்கள் விரும்பினால், இந்தக் கொரோனாவைப் பயன்படுத்தி, இன்னும் 200 ஆண்டுகள் நம்மை அடிமையாக வைத்திருக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக, கார்கில் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் ஒலிபரப்பான திருச்சி பண்பலையில், கார்கில் போரில் பங்கேற்றவர்களோடு ஒரு நேர்காணல். அந்த நேர்காணலில் செய்தியாளர் மற்றவரிடம், 'நீங்க பாகிஸ்தான் காரர்களை நேருக்கு நேர் சந்தித்து போரிட்டார்களா? அவர்கள் எப்படி இருந்தார்கள்?' எனக் கேட்கிறார். என்ன ஒரு இனவெறுப்பு பாருங்கள்! பாகிஸ்தான்காரர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாமே. அவர்கள் எப்படி இருப்பார்கள்? கேள்வி கேட்ட நபரைப் போலத்தான் இருப்பார்கள். ஒரே நாடாக இருந்துவிட்டு, பின் நாமே பிரிந்துவிட்டு, அவர்களை எதிரி என்று சொல்லி, தேசியம் என்ற போலி மாயையை உடுத்திக்கொள்கிறோம். பிரித்தானிய அரசிடமிருந்து நாம் விடுதலை வாங்கவில்லை. நாம் எப்போதும் விடுதலை பெற்றே இருக்கிறோம். அல்லது இன்று அன்று இருந்த விடுதலைக் காற்று இன்று இல்லை.

இன்றைய தகவல்தொழில்நுட்ப உலகில் எனக்குத் தான்மை என்பதே கிடையாது. இணையத்தைப் பொருத்தவரையில் நான் ஒரு டேட்டா. அரசியலைப் பொருத்தவரையில் நான் ஓர் ஓட்டுவங்கி. வணிகத்தைப் பொருத்தவரையில் நான் ஒரு நுகர்வோன். சமயத்தைப் பொருத்தவரையில் நான் ஒரு பற்றாளன். நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்தக் கோவில்சாமியைக் கும்பிட வேண்டும், என்ன மொழியில் படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், என்ன சம்பளம் வாங்க வேண்டும், அதில் எவ்வளவு அரசுக்குக் கொடுக்க வேண்டும் என எதுவுமே நான் முடிவுசெய்ய முடியாதபோது நான் விடுதலை பெற்றவன் என்று எப்படிச் சொல்ல முடியும்?

முடியும்! என்கிறார் மரியா.

எப்படி?

'தெ காட்ஃபாதர்' நாவலில் இன்னொரு அழகான வரியும் உண்டு: 'ஒரு பத்தாயிரம் முட்டாள்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி, அரசியலுக்கு வந்து ஆட்சி செய்யும் ஒரு முட்டாளிடம் நான் என் எதிர்காலத்தைக் கொடுத்துவிட மாட்டேன். என் வாழ்வை நானே வடிவமைத்துக்கொள்வேன்.' - இப்படியாக கதாநாயகன் தன் மகனிடம் சொல்வான். 

தன் வாழ்வைத் தன் கையில் எடுத்து வாழ்ந்தவர் மரியா.

நம் அனைவருக்கும் ஒரே ஒரு விதிதான், ஒரே ஒரு வாழ்க்கைதான். அதை நாம் கண்டுபிடித்து வாழத் தொடங்கினால், யாரையும் எதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.

'அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்'

- இவ்வார்த்தைகள் மரியாளின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகின்றன. நான் இப்படி இருந்தேன், கடவுள் என்னை இப்படி மாற்றினார், நான் இன்னும் இப்படி இருப்பேன் என நினைத்து தன் வாழ்க்கைப் பாதையில் தொடர்ந்து செல்கின்றார். ஓடிக்கொண்டே இருக்கிறார் ஒரு பெண்மானாக. அந்த ஓட்டத்தின் நிறைவே அவருடைய விண்ணேற்பு.

இன்று,

நான் இணையத்தை மறுக்க முடியும். அரசியலை மறுக்க முடியும். நுகர்வதைக் குறைக்க முடியும். நம்பிக்கையை எனதாக்கிக் கொள்ள முடியும். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இந்த உணர்வுதான் விடுதலை உணர்வு. இந்த உணர்வு வந்துவிட்டால், மண்ணுலகிலேயே நாம் விண்ணேற்பு அனுபவம் பெறலாம்.

1 comment:

  1. இன்றைய நாளின் அரசியலையும்,அரசாட்சி செய்பவர்களையும் விமரித்த அதே வேகத்தில் அத்தனைக்கும் மாற்றான நம் அன்னை மரியாளின் “ அவர் தம் தாழ்மையின் நிலையைக்கண்ணோக்கினார்.இதுமுதல் எல்லாத்தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்” எனும் வரிகளில் அவரின் தொலை நோக்குப்பார்வையை எடுத்து வைக்கிறார் தந்தை.அவரின் வாழ்க்கை ஓட்டம் இறைவனின் சித்தத்திற்கு இணைந்தே உள்ளது.ஓடிக்கொண்டே இருந்த இந்தப்பெண்மானின் இறுதிதான் “ விண்ணேற்பு” எனில் நமக்கும் கூட அது சாத்தியம் என்கிறார் தந்தை.அது எப்படி? நம்மைச்சுற்றி நம்மைக்குழப்பும் அத்தனையையும் புறந்தள்ளி,என்னை...என் உணர்வுகளை நான் மட்டுமே கட்டுப்படுத்தும் ஒரு நிலைக்கு நான் வந்துவிட்டால் அந்த விண்ணேற்பு அனுபவத்தை நாமும் மண்ணுலகிலேயே அனுபவிக்கலாம் எனும் நம்பிக்கை மிகுந்த தந்தையின் வார்த்தைகளுக்கு நன்றிகள்!

    தந்தைக்கும் மற்றும் அனைவருக்கும் கன்னிமரியாளின் விண்ணேற்புப்பெருவிழா மற்றும் தாய்த்திருநாட்டின் விடுதலைப்பெருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete