புனித மோனிக்கா
புனித அகுஸ்தினாரின் தாயாகிய புனித மோனிக்காவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். இவர் தன் மகன் அகுஸ்தினாரின் மகனுக்காகக் கண்ணீர் சிந்தினார் என்று மட்டுமே பல நேரங்களில் நாம் கேள்விப்பட்டுள்ளோம். இறைவன் முன்னும், தன் சமகாலத்து மக்கள் முன்னும் தன் உள்ளக்கிடக்கைகளை, 'ஒப்புகைகள்' என்னும் நூலில் அறிக்கையிடும் புனித அகுஸ்தினார், தன்னையும் தன் தாயையும் இணைக்கும் பகுதிகளில் எல்லாம் பின்வரும் இறைவார்த்தையைப் பயன்படுத்துகின்றார்: 'ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன். நான் உம் பணியாள். உம் அடியாளின் மகன். என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்' (காண். திபா 116:16).
தன் தாயை, 'இறைவனின் அடியவள்' என்றே அகுஸ்தினார் அறிமுகம் செய்கின்றார்.
'ஒப்புகைகள்' நூலில் அகுஸ்தினார் தனது தாயைப் பற்றி எழுதும் சில குறிப்புகளிலிருந்து மோனிக்கா என்னும் ஆளுமை எப்படிப்பட்டவர் என்று இன்று நாம் அறிந்துகொள்வோம்:
1. நம்பிக்கையாளர் மோனிக்கா
'ஆக, என் தாய் மற்றும் என் இல்லத்தார் அனைவரைப் போல – என் தந்தையைத் தவிர – நானும் ஒரு நம்பிக்கையாளராகவே இருந்தேன். என் தந்தை நம்பிக்கையைத் தழுவவில்லை என்றாலும் நான் என் தாயின் பக்திமுயற்சிகளைப் பின்பற்றுவதற்கோ, இவ்வாறாகக் கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வதற்கோ அவர் குறுக்கே நிற்கவில்லை... அவரைவிட இவள் நல்லவளாக இருந்தாலும் அவருக்கே இவள் அடிபணிந்து இருந்தாள் ... எந்நேரமும் அவள் உம் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் கருத்தாயிருந்தாள்.' (புத்தகம் 1, பிரிவு 11)
2. மகனின் இலக்குத் தேர்வில் உடன் நின்ற மோனிக்கா
'என் தாய் நான் எல்லாரையும் போல இலக்கியக் கல்வி பயின்றால் அது எனக்கு எத்தீங்கும் இழைக்காது என்றும், உம்மை நோக்கிய பாதையில் அது என்னை நிலைநிறுத்தும் என்றும் நினைத்தாள். என் பெற்றோர்களின் குணம் பற்றி நினைத்துப் பார்க்கும்போது என்னில் எழும் ஊகம் இது.' (புத்தகம் 2, பிரிவு 3)
3. கண்ணீர்த் துளி மோனிக்கா
'நீர் மேலிருந்து உம் கைகளை நீட்டி ஆழத்தின் இருளிலிருந்து 'என் ஆன்மாவை மீட்டீர்' (காண். திபா 144:7). ஏனெனில், என் தாய், உம் பிரமாணிக்கமுள்ள அடியவள், எனக்காக உம் திருமுன் அழுதாள். தங்களின் இறந்த குழந்தைகளுக்காக அழும் தாய்மார்களைவிட அதிகம் அழுதாள். உம்மிடமிருந்து பெற்ற 'நம்பிக்கை மற்றும் ஆன்மீகத் தெரிவினால்' (காண். கலா 5:5), என்னைப் பற்றியிருந்த இறப்பை அவள் கண்டுணர்ந்திருந்தாள். நீரும் அவளுக்குச் செவிகொடுத்தீர், ஆண்டவரே! நீர் அவளுக்குச் செவிகொடுத்தீர்! அவள் செபித்த இடங்களில் எல்லாம் வடித்த கண்ணீர்த் துளிகளை நீர் இகழ்ச்சியுடன் நோக்கவில்லை. நீர் அவளின் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். இதனால், என்னை அவளோடு தங்க வைத்துக்கொள்ளவும், அவளோடு அமர்ந்து ஒரே மேசையில் உணவு அருந்தவும் என்னை அனுமதிக்குமாறு அவளுக்குக் கனவில் தூண்டுதல் தந்தீர். என் பிழையால் நான் செய்த தெய்வ நிந்தனைக்காக அவள் என்னை வெறுத்ததால், முதலில் அவள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் தான் ஒரு மரத்தாலான வரைகோலில் சாய்ந்திருப்பதாகக் காட்சி கண்டாள். அக்கனவில் இளைஞன் ஒருவன் வந்தான். அவன் மிகவும் அழகாகவும் புன்னகைபூத்த முகத்தோடும் நின்று துன்பத்தால் உடைந்து போயிருந்த (காண். புல 1:13) அவளின் சோகமான முகத்தைப் பார்த்தான். 'நீ ஏன் வாடியிருக்கிறாய்? கண்ணீர் வெள்ளத்தில் தத்தளிக்க காரணம் என்ன?' என்று அவன் அவளைக் கேட்டான். காட்சிகளில் வரும் இக்கேள்விகள் விடைகளைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல, விடைகளைத் தருவதற்காகவே கேட்கப்படுகின்றன. நரகம் போன்ற என் வாழ்க்கையை நினைத்து துயரப்பட்டு அங்கலாய்ப்பதாக அவள் சொன்னாள். 'இனி கவலை கொள்ள வேண்டாம்! கலக்கம் அடையவும் வேண்டாம்!' என்று அவளிடம் சொன்னவன், தொடர்ந்து அவள் எங்கே இருக்கிறாளோ அங்கேயே நானும் இருப்பதாகச் சொல்லி அதைக் கண்டுணருமாறு அவளுக்கு அறிவுறுத்தினான். அவள் பார்த்தபோது, அவளின் அருகில் அதே வரைகோலில் சாய்ந்தவாறு நான் நிற்பதைக் கண்டாள். உம் காதுகள் அவளின் இதயத்தின் அருகில் இருந்தாலொழிய இக்காட்சி அவளுக்கு எப்படி வரும்? நீர் நல்லவர். எல்லாம் வல்லவர். அனைவர்மேலும் அக்கறை காட்டுபவர். ஒவ்வொருவர்மீதும் தனித்தனியாக அக்கறை காட்டி அன்பு செய்பவர்.
... ஆண்டவரே! என் தாய்க்குக் கிடைத்த காட்சியையோ கனவையோ விட, விழிப்பான என் தாய் வழியாக நீர் எனக்குத் தந்த பதிலால் நான் வியந்து நிலைகுலைந்து போனேன் ... அதற்குப் பின் வந்த ஒன்பது ஆண்டுகள் நான் ஆழமான குழியின் சகதியிலும், பொய்யின் இருட்டிலும் புரண்டு கிடந்தேன். சில நேரங்களில் அதிலிருந்து எழ முயற்சி செய்தேன். ஆனால், எந்த அளவுக்கு எழ முயற்சி செய்தேனோ அந்த அளவுக்கு இன்னும் ஆழமாய் அமிழ்ந்து போனேன். புனிதமான, பக்தி நிறைந்த, சாந்தமான கைம்பெண்ணான அவள் - உம்மால் அன்பு செய்யப்படும் அவள் - எதிர்நோக்கால் உள்ளத்தில் அமைதி பெற்றாள். ஆனாலும், எனக்காகக் கண்ணீர் வடிப்பதிலும் இரங்கி அழுவதிலும் அவள் சோர்ந்து போகவில்லை. அவள் அழுவதை நிறுத்தவில்லை. அவளின் எல்லா இறைவேண்டல்களிலும் உம்முன் எனக்காக மாரடித்துப் புலம்பினாள். அவளின் விண்ணப்பங்கள் கேட்கப்பட்டன. இருந்தாலும் அந்த இருளில் நான் புரண்டுகொண்டிருக்கவும், அந்த இருளால் நான் விழுங்கப்படவும் என்னைத் தனியே விட்டுவிட்டீர்.' (புத்தகம் 3, பிரிவு 11)
4. பரிதவித்த தாய் மோனிக்கா
'கடவுளே, நான் ஏன் கார்த்தேஜைவிட்டு உரோமை சென்றேன் என்பதை நீர் அறிந்திருந்தீர். ஆனால், அதைப் பற்றி நீர் என்னிடமோ என் தாயிடமோ வெளிப்படுத்தவே இல்லை. என் பயணம் பற்றி வருத்தப்பட்ட என் தாய், கடல் வரை வந்து என்னை வழியனுப்பினாள். ஆனால், நான் திரும்பி வருமாறும், தானும் என்னுடன் வருவதாகவும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்ததாலும் நான் அவளை ஏமாற்றினேன். என் நண்பன் ஒருவன் இருக்கிறான் என்றும், பயணத்திற்குக் காற்று ஏற்றதாக மாறும் வரை நான் கடற்பயணம் செய்ய மாட்டேன் என்றும் சொல்லி நடித்தேன். என்னை மிகவும் அன்பு செய்த என் தாயிடம் நான் பொய் சொன்னேன். அவளைவிட்டு நான் வழுக்கி ஓடினேன். இதையும் நீர் மன்னித்தருளினீர். வெறுக்கத்தக்க அழுக்காய் இருந்த என்னைத் திருமுழுக்கில் உம் அருளின் தண்ணீரால் கழுவும் வண்ணம் என்னைக் கடலின் தண்ணீரிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தீர். திருமுழுக்குத் தண்ணீரே என்னைத் தூய்மையாக்குவதாகவும், என் தாயின் கண்களிலிருந்து வழிந்த ஆறுகளை வற்றச் செய்வதாகவும் இருந்தது. இக்கண்ணீரே அவளின் முகத்தின்முன் இருந்த மண்ணில் பாய்ந்தோடியது.
இருந்தாலும், நான் இல்லாமல் வீடு திரும்ப அவள் மறுத்ததால், அவளை மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் கப்பலுக்கு அருகில் இருந்த சிப்ரியானின் நினைவு ஆலயத்தில் தங்க வைத்தேன். ஆனால், அந்த இரவு மறைவாக நான் புறப்பட்டேன். அவள் வரவில்லை. அழுதுகொண்டும் செபித்துக்கொண்டும் ஆலயத்திலேயே தங்கிவிட்டாள். தனது கண்ணீர் வெள்ளத்தால் உம்மிடம் அவள் இரந்து வேண்டியதென்ன, என் கடவுளே? என் பயணத்தை நீர் தடுக்கும் அளவுக்கு அவள் உம்மிடம் என்ன கேட்டாள்? இருந்தாலும், உமது விமரிசையால் அவளது ஏக்கத்தின் சாரத்தை நீர் கண்ணுற்றீர் - அவள் விரும்பியது போல நீர் என்னை மாற்ற வேண்டும் என்று அவள் கேட்டதை நீர் உடனடியாகத் தரவில்லை என்றாலும்! காற்று அடித்து எங்களது கப்பலை நகர்த்தியது. கரை மெதுவாகக் கண்களிலிருந்து மறையத் தொடங்கியது. அதோ, விடிந்தபோது, அவள் துக்கத்தால் பைத்தியம் பிடித்தவள்போல் உம் காதுகளைத் தன் பேரழுகையால் நிரப்பினாள். ஆனால், அவளின் கூக்குரலுக்கு நீர் செவிகொடுக்கவில்லை. எனது பேரார்வங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எனது பேரார்வங்களையே பயன்படுத்தினீர். தனது இரத்தமும் சதையுமான எனக்காக அவள் ஏங்கிய ஏக்கத்தை துன்பம் என்னும் சாட்டையால் அடித்துச் சரி செய்தீர். எல்லாத் தாய்மார்களையும் போல - எல்லாத் தாய்மார்களையும்விட - என்னைத் தன்னருகே வைத்துக்கொள்ளவே அவள் விரும்பினாள். ஆனால், அவளிடமிருந்து நீர் என்னைப் பிரிப்பது அவளுக்கு மகிழ்வைக் கொண்டுவரும் மகனாக என்னை மாற்றுவதற்காகத்தான் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை. அவள் அதை அறியவும் இல்லை. ஆகையால், அவள் அழுது புலம்பினாள். அவளின் இந்தத் துன்பங்களில், 'வேதனையில் பெற்றெடுத்த தன் குழந்தையை' (காண். தொநூ 3:16) தேடிய ஏவாளின் நிழல் இருந்தது. 'நான் அவளை ஏமாற்றிவிட்டேன்,' 'நான் கல்மனம் படைத்த கொடூரன்' என்று என்னைப் பற்றி உம்முன் குற்றம் சுமத்திவிட்டு, உம்மிடம் திரும்பி எனக்காகச் செபித்தாள். தன் வீடு திரும்பினாள். அதே நேரம், நான் உரோமையை வந்தடைந்தேன்.' (புத்தகம் 5, பிரிவு 8)
5. மகளும், மனைவியும், மருமகளுமான மோனிக்கா
'ஆனால், உமது அடியாளைப் பற்றி எனது ஆன்மா அறிக்கையிடும் எதையும் நான் கடந்துபோக மாட்டேன். காலத்தின் வெளிச்சத்திற்குள் தன் உடல் வழியாக என்னைப் பிறக்க வைத்தவளும், தன் இதயத்தின் வழியாக நிரந்தரத்தின் வெளிச்சத்திற்குள் என்னைப் பிறக்க வைத்தவளும் அவளே. அவள் எனக்கு வழங்கிய கொடைகளைப் பற்றி அல்ல, நீர் அவளுக்கு வழங்கிய கொடைகளைப் பற்றியே பேசுகிறேன். அவள் தன்னையே உருவாக்கிக் கொள்ளவோ, வளர்த்தெடுக்கவோ இல்லை. நீர் அவளை உருவாக்கினீர். அவளது குணநலன் எப்படி இருக்கும் என்பதை அவளது தந்தையும் தாயும் அறிந்திலர். உமது அச்சத்தில் அவள் நெறிப்படுத்தப்பட்டாள். உமது கிறிஸ்துவால் அவள் உருவாக்கப்பட்டாள். உமது திருஅவையின் நேரிய உறுப்பினர் ஒருவரால் நம்பிக்கை தவழும் நல்வீட்டில் நன்மங்கையாய் வளர்ந்தாள் அவள். அவள் தனது தாயின் அக்கறையைப் பற்றி அல்ல, மாறாக, தன் வீட்டில் இருந்த முதிய தாதி ஒருத்தியைப் பற்றி – அவள் என் தாத்தாவையே தூக்கி வளர்த்தவள் - அவளது அக்கறை, கரிசனை, உடனிருப்பு, அவள் தனது முதுகில் தமக்கையைப் போலத் தன்னை ஏந்தி நடந்த பக்குவம் ஆகியவற்றைப் பற்றியே அதிகம் பேசியிருக்கிறாள். அவளது இந்த நீண்ட பணிக்காகவும், அவளது முதுமைக்காகவும், கிறிஸ்தவ இல்லம் ஒன்றில் வாழ்ந்த அவளது உயர்ந்த அறநெறி வாழ்வுக்காவும் அவளது தலைவர்களால் அவள் மிகவும் மதிக்கப்பெற்றாள். ஆகவே, தலைவர்களின் தவப் புதல்வியரை வளர்க்கும் பொறுப்பு அவளிடமே ஒப்படைக்கப்பட்டது. அப்பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றினாள். தேவைப்படின் மிகவும் கண்டிப்பாகவும் இருந்தாள். அவர்களை வளர்க்கும் விதத்தில் அவள் மிகவும் விவேகத்துடன் நடந்து கொண்டாள். அவர்களது பெற்றோர்களோடு அமர்ந்து அவர்கள் உணவு உண்ணும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவர்கள் தாகத்தால் பற்றி எரிந்தாலும், தண்ணீர் குடிக்கக் கூட அவர்களை அனுமதிக்கவில்லை. ஏனெனில், அது தவறான பழக்கமாக மாறிவிடும் என்று சொல்லித் தடுத்தாள். அவள் ஞானத்தோடு இந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னாள்: 'திராட்சை மது கைக்கெட்டும் தூரத்தில் இன்று உங்களுக்கு இல்லை என்பதற்காக நீங்கள் தண்ணீரைத் தேடித் தேடிக் குடிக்கிறீர்கள். ஆனால், நாளை திருமணம் முடிந்து, திராட்சை மதுச் சேமிப்பறையின் சாவி உங்கள் கைக்கு வரும்போது தண்ணீர் வெறுப்பாகத் தெரியும், மதுப்பழக்கம் தவிர்க்க முடியாததாகி விடும்!' இப்படிப்பட்ட விதிமுறைகள் வழியாகவும், கட்டளைகள் வழியாகவும் பிள்ளைகளின் இளவயதுப் பேராசையைக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர்களை நெறிப்படுத்தினாள். குழந்தைகளின் தாகத்தை நிதானத்திற்குள் கொண்டுவந்து அவர்கள் பிற்காலத்தில் தொடக்கூடாதவற்றின் மேல் ஆசைப்படாதபடி அவர்களைப் பயிற்றுவித்தாள்.
இருந்தாலும், உமது அடியாள் தன் மகனிடம் சொன்னது போல, திராட்சை மதுவின் மேல் உள்ள பலவீனம் அவளைப் பலமாகப் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அவள் சிறுமியாய் இருந்தபோது, திராட்சை மது வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து மதுவை எடுத்து வருமாறு அவளது பெற்றோர் அவளை அனுப்புவது வழக்கம். பீப்பாயின் மேல் உள்ள திறப்பு வழியாக ஒரு கோப்பையை உள்ளே செலுத்தி மதுவை எடுத்துப் பாட்டிலில் ஊற்ற வேண்டும். அவள் பாட்டிலில் ஊற்றுவதற்கு முன் தனது உதட்டின் நுனியில் கோப்பையை வைத்துக் கொஞ்சமாக உறிஞ்சுவாள். அதன் சுவை பிடிக்காததால் அவள் அதைவிட அதிகம் எடுப்பதில்லை. அவளை இப்படி உறிஞ்ச வைத்தது மதுவின்மேல் உள்ள ஆர்வம் அல்ல. மாறாக, இளவல்களிடம் இருக்கும் உபரியான உயிராற்றல். இது விளையாட்டுத்தனமான உணர்ச்சி வேகமாக அடிக்கடி மேலெழும்பி வருவதால் பெரியவர்கள் குழந்தைகளில் இதைப் பொதுவாக அடக்கிவைப்பர். துளித் துளியாக உறிஞ்ச ஆரம்பித்தவள் கொஞ்ச நாள்களில் கோப்பை கோப்பையாக மண்டத் தொடங்கினாள் - ஏனெனில், 'சிறியவற்றைப் புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சியடைவர்' (காண். சீஞா 19:1). அவளது விவேகமிக்க தாதி என்ன ஆனாள்? அவள் விதித்த தடை எங்கே போனது? இந்த மறைவான நோயிலிருந்து அவள் விடுபடத் அவளது வலிமை அவளுக்குப் போதவில்லை. என் தலைவரே! உமது நலம்தரும் அக்கறை எங்கள்மேல் நிழலாடி எங்களைத் தாங்கியது. தந்தையும், தாயும், தாதியும் இல்லாத இடத்தில் நீர் இருக்கிறீர். நீர் எங்களைப் படைத்தீர், நீர் எங்களை அழைக்கிறீர், மனித அதிகாரங்களைப் பயன்படுத்தி எங்களின் ஆன்ம நலம் காக்க அவர்களை அனுப்புகிறீர். நீர் அவளைக் குணமாக்கியது எப்படி? நீர் அவளது உடல்நலத்தை மீட்டெடுத்தது எப்படி? அவளைக் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் இன்னொரு இனியவளை அழைத்து வந்தீர். கடுமையாகவும், கூர்மையாகவும் உள்ள மருத்துவனின் கத்தி போல வந்த அவள் வழியாக ஒரே நறுக்கலில் அவளின் அழுகலை அகற்றீனர். வீட்டில் தனித்திருந்த ஒருநாள், அவள் தன் பணிப் பெண்ணோடு மதுச் சேமிப்பறைக்குச் செல்லும் வழியில் அவர்கள் இருவருக்கும் இடையில் மழலைச் சண்டை வந்தது. சண்டை சொற்போராக வலுக்க, பணிப்பெண் இவளைப் பார்த்து, 'போடி! குடிகாரி!' என்று சொல்லிவிட்டாள். அந்த இகழ்ச்சி அவளைக் காயப்படுத்தியது. உடனடியாக அவள் தனது இழிவான மதுப்பழக்கம் என்னும் அடிமைத்தனத்தை எண்ணி வெட்கப்பட்டுத் தன்னையே கடிந்து கொண்டாள். மதுப்பழக்கத்தை உடனடியாக நிறுத்தினாள். முகப்புகழ்ச்சி செய்யும் நண்பர்கள் நம்மைக் கெடுப்பது போல, சண்டையிடும் எதிரிகள் பல நேரங்களில் நம்மைத் திருத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் நோக்கத்தின்படி நீர் கைம்மாறு செய்கிறீர். பணிப்பெண் தனது கோபத்தில் தனது சிறிய எஜமானியைக் காயப்படுத்த விரும்பினாளே தவிர, குணப்படுத்த விரும்பவில்லை. ஆகையால்தான் அவர்கள் தனித்திருக்கும்போது அவள் அந்த வார்த்தையைச் சொன்னாள் - ஒன்று, அந்த நேரத்தில், இடத்தில் யாரும் இல்லாததால் அவர்கள் தனித்திருந்திருக்கலாம். அல்லது அவள் பயந்துபோய் இவ்வளவு நாள்கள் சொல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், நீரோ, என் தலைவரே! விண்ணையும் மண்ணையும் ஆள்பவரே! ஆழத்தின் ஓட்டங்களை உமக்கு ஏற்றாற்போல மடைதிருப்பி விடுகின்றீர். ஆண்டுகளின் ஓட்டத்தை அணியம் செய்கின்றீர். ஓர் ஆன்மாவின் கோபத்திலிருந்து கூட இன்னோர் ஆன்மாவுக்கு நலத்தைக் கொண்டு வர உம்மால் முடியும். தவறு செய்கின்றவர் ஒருவரைத் திருத்தும் எவரும் திருந்தியவருடைய மாற்றம் அவரைத் திருத்தியவரின் ஆற்றலால் வந்தது என்று சொல்ல முடியாதவாறு நீர் இப்படிச் செய்கிறீர்.' (புத்தகம் 9, பிரிவு 8)
'இப்படியாக நாணத்திலும் நிதானத்திலும் அவள் வளர்க்கப்பட்டாள். அவளது பெற்றோர் அவளை உமக்குக் கீழ்ப்படியச் செய்ததை விட, நீர் அவளை அவளது பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியச் செய்தீர். திருமண வயது வந்தபோது அவள் ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட, அவள் அவனைத் தலைவனாக ஏற்று அவனுக்குப் பணிபுரிந்தாள். அவள் அவனை உமக்காக வெற்றி கொள்ள முயன்றாள். அவளது மதிப்பீடுகளாலும் விழுமியங்களாலும் - அவற்றினால் நீர் அவளை அணிசெய்திருந்தீர் – உம்மைப் பற்றி அவனிடம் பேசினாள். இப்படியாக அவளது கணவன் அவளை அன்பு செய்யவும், மதிக்கவும், பாராட்டி வியக்கவும் விரும்பினாள். அவனது பிரமாணிக்கமின்மையை அவள் பொறுத்துக் கொண்டாள். அதுபற்றி அவள் அவனிடம் சண்டையிட்டதில்லை. உமது இரக்கம் அவன்மேல் வரும் என்றும், அவன் உம்மேல் நம்பிக்கை கொண்டால் கற்பில் நிலைத்திருப்பான் எனவும் அவள் எதிர்நோக்கினாள். மேலும், அவன் எந்த அளவுக்குக் கருணை உள்ளவனோ அந்த அளவுக்கு முன்கோபியாகவும் இருந்தான். கோபப்படுகின்ற கணவனைத் தன் சொல்லாலும் செயலாலும் எதிர்க்கக் கூடாது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவன் சாந்தமாகவும் அமைதியாகவும் ஆனபின், வாய்ப்பு சரியாக அமையும்போது, தன் செயலுக்கான காரணத்தை அவனிடம் விளக்குவாள். சாந்தமான கணவர்களுக்குத் திருமணமான பல பெண்கள் அவர்களால் துன்புறுத்தப்பட்டுத் தங்களது முகத்திலும் உடலிலும் காயம் பட்ட தழும்புகளைத் தாங்கித் தங்களது வாழ்வை நகர்த்துகிறார்கள். தங்களுக்கிடையேயான உரையாடலில் இவர்கள் அவளிடம் தங்களது கணவனின் இச்செயல்களை முறையிடுவார்கள். அவள் அவர்களோடு சிரிப்பது போலச் சிரித்துக் கொண்டு அவர்களுக்குச் சீரிய ஆலோசனை வழங்குவாள். அவர்களின் வாய்தான் அவர்களின் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பாள். திருமண வாக்குறுதிப் பத்திரம் வாசிக்கப்பட்டபோது நமக்கான அடிமைச் சாசனம் வாசிக்கப்பட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டும் என்பாள். ஏனெனில், அன்று முதல் மனைவியர் கணவர்களுக்கு அடிமைகள் ஆகின்றனர். இந்த நிலையை அவர்கள் அறிந்து அதற்கேற்றாற்போல வாழ வேண்டுமே தவிர தங்களது தலைவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கக் கூடாது என நினைத்தாள். இவள் பொறுத்துக் கொள்ளும் இவளுடைய கணவனின் முரட்டுக் குணத்தைக் கேள்வியுற்ற மனைவியர் இவளுடைய வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்தனர். ஆனால், பேட்ரிக் அவளை அடித்ததாகவோ, அவளது முகத்தில் தழும்பை ஏற்படுத்தியதாகவோ, அவளோடு ஒருநாள்கூட சண்டையிட்டதாகவோ இல்லை. இதற்கான காரணம் என்று பெண்கள் அவளிடம் ஆத்மார்த்த உரையாடலில் கேட்கும்போது, நான் மேற்சொன்ன வார்த்தைகளையே அவள் அவர்களுக்குச் சொல்வாள். அவளது அறிவுரையைக் கேட்டவர்கள் தங்கள் வாழ்வில் நலம் கண்டு அவளுக்கு நன்றிக்கடன் பட்டார்கள். அவளது அறிவுரையைக் கேளாதவர்கள் தங்கள் கணவர்களிடம் நன்றாக அடிபட்டார்கள்.' (புத்தகம் 9, பிரிவு 9)
அவளுடைய மாமியார்தான் அவளுக்கு முதல் எதிரி. பணிப்பெண்களின் கிசுகிசுப்பைக் கேட்ட அவள் தனது மருமகள்மேல் பகைமையையும் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டாள். ஆனால், தனது மதிப்புமிகு நடத்தையாலும், விடாமுயற்சியுள்ள பொறுமை மற்றும் கனிவாலும் மாமியாரையும் வென்றாள் அவள். விளைவு, அவளது மாமியார் வம்பளக்கின்ற பணிப்பெண்களைப் பற்றித் தனது மகனிடம் முறையிட்டாள். அவர்களைத் தண்டிக்கும்படி அவனிடம் சொன்னாள். ஏனெனில், அப்பெண்களாலேயே குடும்பத்தில் அமைதி சீர்குலைந்தது. அவனும் தனது தாயின் கோரிக்கைக்குச் செவிமடுத்தான். தன் குடும்பத்தின்மேல் தான் கொள்ள வேண்டிய அக்கறை பற்றித் தெளிவுற்ற அவன், குடும்ப அமைதியை நிலைநிறுத்தும் பொருட்டு, அப்பணிப்பெண்களைச் சாட்டையால் அடிக்குமாறு செய்தான். தனது மருமகளைப் பற்றி யாராவது அவதூறு பேசினால் இதே நிலைதான் என அவள் மற்றப் பெண்களை எச்சரித்தாள். அன்றிலிருந்து யாரும் மற்றவருக்கு எதிராக எந்த வார்த்தையும் பேசவில்லை. ஒருவர் மற்றவரின் நன்மையை நாடும் நிலையே குடும்பத்தில் இருந்தது.
'உமது அடியாளை நீர் மற்றுமொரு கொடையால் அணிசெய்தீர். என் கடவுளே! என் இரக்கமே! அவளது வயிற்றில் நீர் என்னை உருவாக்கினீர்! அந்தக் கொடை என்னவெனில், எப்போதெல்லாம் அவளால் முடியுமோ அப்போதெல்லாம் அவள் கருத்து முரண்பாடு கொண்ட அல்லது சண்டையிடுகின்ற மனிதர்களை இணைத்து வைத்து ஒப்புரவாக்கினாள்.' (புத்தகம் 9, பிரிவு 9)
6. இறைமடியில் மோனிக்கா
'... மேலும், ஜன்னலுக்கு அருகில் நடந்த எங்கள் உரையாடலின்போது, 'நான் இங்கே செய்ய என்ன இருக்கிறது?' எனக் கேட்டபோது, அவள் தனது வீட்டில் இறக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. மேலும், நான் பின்னர் கேள்வியுற்றேன், நாங்கள் ஓஸ்தியாவில் இருந்தபோது, எனது நண்பர்கள் சிலரிடம், தாய்க்குரிய இரகசியத்தோடு, தனக்கு இந்த உலக வாழ்வின் மேல் உள்ள வெறுப்பையும், இறப்பின் நன்மையையும் பற்றிப் பேசியிருக்கிறாள். நான் அப்போது அங்கு இல்லை. அவளது துணிச்சலைக் கண்ட என் நண்பர்கள் - இத்துணிச்சலை நீரே அவளுக்கு அளித்தீர் –அவளது சொந்த ஊரிலிருந்து தூரமாக உடலை விட்டுச் செல்வது பயமாக இல்லையா என்று அவளைக் கேட்க, அவள் உடனே பதில் தந்தாள்: 'கடவுளிடமிருந்து எதுவும் தூரமில்லை. உலகம் முடியும் போது எந்த இடத்திலிருந்து என்னை உயிர்ப்பிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியாமல் போகுமோ என்று பயப்படத் தேவையில்லை!' நோயுற்ற ஒன்பதாம் நாள், தனது ஐம்பத்து ஆறாவது வயதில், எனக்கு முப்பத்து மூன்று வயதானபோது, பக்தியும் அர்ப்பணமும் கொண்ட இந்த ஆன்மா உடலிலிருந்து விடுதலை பெற்றது.நான் அவளது கண்களை மூடினேன்.' (புத்தகம் 9, பிரிவு 11)
நாம் மோனிக்காவிடம் கற்றுக்கொள்வது என்ன?
பொறுமை. ஏனெனில் நம் கடவுள், 'நம்ம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமாக' (காண். எபே 3:20) இருக்கிறார்.
“ புனித மோனிக்கா”.... வாழ்க்கையின் திசைதெரியாது,வாழும் வழிதெரியாது, தனக்கு வாய்த்த கணவனின் மனம் புரியாது,பெற்ற மகனின் வழியை செம்மைப்படுத்த இயலாது தான் இருக்கும் இடத்தையும், போகவேண்டிய தூரத்தையுமே மறந்து போன ஒரு அபலைப்பெண். கண்ணீரை மட்டுமே தன்னைப் படைத்தவருக்காகவும்,பெற்ற மகனுக்காகவும்,உடன் வந்த கணவனுக்காகவும் சேர்த்து வைத்தவள். இறுதியில் தள்ளி நின்ற மகனே இவரை “ இறைவனின் அடியாள்” என்று குறிப்பிடும் அளவுக்கு அவரில் மனமாற்றத்தை ஏற்படுத்திவிட்டாள் அந்தக் கண்ணீர் காரிகை. செல்லவழியின்றி..வாழத்துணிவின்றி வாழும் அபலைகளுக்கு அதிலும் தாய்மார்களுக்குப் “பாதுகாவலி”. தந்தை இத்தனை ஸ்பஷ்டமாகத் தன் அழகுதமிழில் அவளுக்குப் புகழாரம் சூட்டிய பிறகு நான் ஏதேனும் பிதற்றினால் அது ‘கொல்லன் பட்டறையில் உட்கார்ந்த கொசுவின்’ கதையாகிவிடும்.ஆனாலும் அந்த இறுதிவரிகள்.....” பொறுமை.ஏனெனில் நம் கடவுள்,’நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும்,நாம் வேண்டுவதற்கும், நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமாக இருக்கிறார்.” இந்தப் பொறுமைதான் அனைத்துத்தாய்மாரையும் அழகு செய்ய வேண்டிய அணிகலன். அனைத்து தாய்மாருக்கும் புனித மோனிக்காவின் திருநாள் வாழ்த்துக்கள்! தனயன் தந்தை இயேசுவுக்கும் சேர்த்தே தான்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteமன்னிக்கவும்...தந்தை யேசு!
ReplyDelete