ஏவலரிடம் கொடுத்துவிட்டு
இன்று முதல் நாம் லூக்கா நற்செய்தியிலிருந்து வாசிக்கவிருக்கிறோம். இயேசு தன் பணியை நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்திலிருந்து தொடங்குகிறார். 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா!' என ஆச்சரியப்படுகின்ற மக்கள்திரள், கொஞ்ச நேரத்தில், இயேசுவின் மேல் சீற்றம் கொண்டு அவரைக் கொன்றுவிட முடிவெடுக்கின்றனர்.
'தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன!' எனப் பதிவு செய்கிறார் லூக்கா.
எல்லாருடைய கண்களும் நம்மைப் பார்த்தல் நம்மில் இருவகை உணர்வுகளை ஏற்படுத்தும்: ஒன்று, பெருமிதம், இரண்டு, வெட்கம்.
எடுத்துக்காட்டாக, நான் ஒரு பள்ளியின் தலைமையாசிரியையாக இருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். ஆண்டு விழா அன்று, அல்லது ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வில், பள்ளி முழுவதும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் நிரம்பி வழிய, நாம் மைக் அருகில் சென்றவுடன், அனைவரின் கண்களும் நம்மேல் பதியும். அங்கே நமக்குப் பெருமித உணர்வு வரும். ஆனால், அதே வேளையில், நாம் ஏதாவது தவறு செய்தாலும், அல்லது வித்தியாசமாகச் செய்தாலும் எல்லாருடைய கண்களும் என்மேல் படும். அங்கே, எனக்குள் ஒருவகையான வெட்க உணர்வு வரும். இயேசுவுக்கு, தன் சொந்த ஊரில் இவ்விரு உணர்வுகளும் கலந்து எழ வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், சொந்த ஊருக்குச் செல்கின்ற எந்த அருள்பணியாளரும் இவ்விருவகை உணர்வுகளையும் பெறுவார்.
இயேசுவின் மேல் கண்கள் ஏன் பதிந்தன?
அவர் இறைவார்த்தையை வாசித்ததால் இருக்கலாம். அதாவது, அவர் எழுதப்படிக்கத் தெரிந்தவராக இருக்கிறார். அதனால் அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.
அல்லது, அவர் வாசித்த இறைவார்த்தைப் பகுதி வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம். திருச்சட்டம் அல்லது திருப்பாடலைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக, இறைவாக்குப் பகுதியைத் தெரிவு செய்கிறார். அல்லது அவருக்கு அது எதார்த்தமாகக் கொடுக்கப்படுகிறது.
இதைவிட முக்கியமான காரணம் ஒன்றை லூக்கா பதிவு செய்கிறார்:
'(வாசித்த) பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்'
இயேசுவின் இச்செயல் நம் கவனத்தையும் ஈர்க்கிறது.
யார் இந்த ஏவலர்?
இயேசு யாரிடமிருந்து ஏட்டை வாங்கினார் என்பதை லூக்கா பதிவுசெய்யவில்லை. ஏனெனில், அதை அவருக்கு வழங்கியவர் அங்குள்ள ரபி அல்லது போதகராகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ரபி மட்டுமே திருச்சட்டத்தை வலப்புறத்திலிருந்து எடுத்து வந்து கொடுக்க முடியும் என மோசேயின் சட்டம் சொல்கிறது (காண். இச 33:2).
ஏவலர் அச்சுருளைத் துடைத்து வைப்பவராக அல்லது அதற்கு மேல் துணி போர்த்தி வைப்பவராக, அல்லது அதை ஒழுங்குபடுத்துபவராக இருக்கலாம். மேலும், தொழுகைக்கூடத்தைத் திறப்பதும், தூய்மைப்படுத்துவதும், இருக்கைகளை ஒழுங்குபடுத்துவதுமே அவருடைய வேலையாக இருந்திருக்கலாம். ஆக, திருச்சட்டத்தை அவர் துடைப்பதற்கன்றி வேறு எதற்கும் தொட முடியாதவராக இருந்திருக்கலாம். ஆனால், அவரின் கைகளில் இயேசு ஏட்டுச்சுருளைக் கொடுக்கிறார். இயேசுவின் இந்தச் செயல் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் மக்கள் நடுவில் ஏற்படுத்தியிருக்கும்.
ஏனெனில், இயேசு மற்றவர்கள்போல் செயல்படவில்லை!
அல்லது அவர் பாரம்பரியத்தையும் மரபையும் மீறி விடுகிறார்!
'ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று இயேசு சொன்ன அடுத்த நிமிடமே, 'நற்செய்தியை' ஏவலரிடம் கொடுக்கிறார். ஏவலர் பணத்தில் ஏழையாக இருக்கத் தேவையில்லை. ஆனால், அதிகாரம் என்ற ஏழ்மையில் இருக்கிறார் அவர். அவரை ஆற்றல்படுத்துகிறார் இயேசு.
தான் பேசியதை உடனே வாழ்ந்து காட்டுகிறார் இயேசு.
இயேசுவின்மேல் பதிந்த கண்கள் கண்டிப்பாக அந்த ஏவலர்மேலும் பதிந்திருக்கும்.
ஏனெனில், அதுவரை அவரை ஒரு 'அதுவாக' மட்டுமே பார்த்திருந்தனர்.
கண்கள் பதிய வேண்டுமெனில், கண்கள் திறக்கப்பட வேண்டும்.
இரண்டு கேள்விகள்:
(அ) இன்று என் கண்கள் இயேசுவின் மேல் பதிகின்றனவா?
(ஆ) என்னருகில் இருக்கும் வலுவற்றவர்களை என்னால் ஆற்றல்படுத்த முடிகிறது?
வாழ்ந்து காட்டப்பட வேண்டிய ஒரு விஷயத்தைப்பதிவு செய்துள்ளார் தந்தை.நம் வழியில் வரும் எத்தனையோ பேர் நம் கண்களை உறுத்தும் அளவுக்குத் தேவையிலிருந்தாலும் “ ஐயோ! பாவம்!” என நினைப்பதைத்தவிர வேறு ஏதும் செய்ய இயலாத கையாளகாதவர்களாகத்தான் இருக்கிறோம் பல சமயங்களில். அவர்களை ‘அதுவாக’ வே பார்க்கிறோம்...இயேசுவின் உருவில் யாரேனும் வந்து அந்த ‘அதுவை’ ‘அவர்/ அவளாகக்” காட்டும் வரை..
ReplyDeleteஇன்று என்னருகில் இருக்கும் வலுவற்றவர்களை உலகுக்கு “ அவர்களாகக்” காட்டுவது மட்டுமின்றி, என்னாலான அளவில் நானும் அவர்களை ஆற்றுப்படுத்த முடியும் என்பதைத்தாண்டி “சகோதரனே!/ சகோதரியே! எழுந்திரு.! பேச்சோடு நின்றுவிடாமல் இயேசுவின் வார்த்தைகளை வாழ்ந்து காட்டு” என்ற உந்துதலைத்தரும் தந்தை பாராட்டுக்குரியவரே!