Thursday, August 20, 2020

உலர்ந்த எலும்புகள்

இன்றைய (21 ஆகஸ்ட் 2020) முதல் வாசகம் (37:1-14)

உலர்ந்த எலும்புகள்

இன்றைய முதல் வாசகத்தில், 'எலும்புக்கூடு பள்ளத்தாக்கு' காட்சியை எசேக்கியேல் காண்கின்றார். உலர்ந்த எலும்புகளுக்கு உருக்கொடுத்து, அவற்றுக்கு உயிரும் கொடுக்கிறார் ஆண்டவராகிய கடவுள். பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்த மக்கள் மீண்டும் புத்துயிர் பெறுவர் என்பதன் அடையாளமாகவே இது இருக்கிறது.

இக்காட்சியில் வரும் முதல் உரையாடல் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

'எலும்புகள் மிக உலர்வாய் இருந்தன.

அவர் என்னிடம், 'மானிடா! இந்த எலும்புகள் உயிர் பெறமுடியுமா?' என்று கேட்டார்.

நான், 'தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!' என்று மறுமொழி அளித்தேன்.'

மனித வரையறைகளை நன்கு உணர்ந்தவராக இருக்கிறார் என்றார் எசேக்கியேல்.

'முடியுமா?' என்ற கேள்விக்கு, 'ஆம்' அல்லது 'இல்லை' என விடையளிக்காமல், 'நடப்பது அனைத்தும் அவருக்குத் தெரியும்,' 'செய்வதனைத்தையும் அறிந்தவர் ஆண்டவர்' என்ற நிலையில், 'உமக்குத் தெரியுமே' எனப் பதிலளிக்கின்றார்.

இறைவாக்கினரின் இந்தப் பதிலில், அவர் ஆண்டவர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையும், எதிர்நோக்கும், அதே வேளையில் அவரின் தாழ்ச்சியும் வெளிப்படுகிறது.

நம் ஆராய்ச்சிக்கு உட்படாதவற்றின்மேல் அல்லது நம் அறிவுக்கு எட்டாத பலவற்றைக் குறித்து நாம் கவலைகொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். 

வாழ்வில் இக்கட்டான கேள்விகளை நாம் எதிர்கொள்ளும்போதும், சூழல்கள் நமக்கு எதிராக நிற்கும்போதும்,

'தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!' என்று சரணாகதி அடைதல் சால்பு.


2 comments:

  1. வாழ்வில் இக்கட்டான கேள்விகளை நாம் எதிர்கொள்ளும்போதும், சூழல்கள் நமக்கு எதிராக நிற்கும் போதும்
    “ தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே!” என்று சரணாகதி அடைதல் சால்பு.
    சிறிய குப்பியேயானாலும் அதில் அடைத்துத் தந்த நறுமணத்தைலத்திற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete