Monday, August 10, 2020

தவறிய ஆடு


இன்றைய (11 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 18:1-5,10-14)

தவறிய ஆடு

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில், இயேசு, காணாமல்போன ஆட்டைத் தேடும் ஆயன் உருவகம் வழியாக, தான் அனைவரையும் கூட்டிச்சேர்க்க வந்துள்ளதை எடுத்துரைக்கின்றார். 

ஆயன், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்கின்றார். அதைக் கண்டுபிடிக்கின்றார். தன் தோளில் போட்டுக்கொண்டு திரும்புகின்றார். மொத்தத்தில், மகிழ்கின்றார்.

ஆயனின் கண்களில் கணிதம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஒன்று, தொண்ணூற்றொன்பதை விடப் பெரியதாகத் தெரிகின்றது.

காணாமல் போன ஆடு, ஆயனின் சோர்வுக்குக் காரணமாகிறது. ஆயனிடம் பரிதவிப்பை உண்டாக்குகிறது. ஆயனை கவலைகொள்ளச் செய்கிறது. ஆனால், ஆயனுக்கு ஆட்டின்மேல் கோபம் இல்லை. ஆட்டைக் கண்டவுடன் அவனுடைய களைப்பு, கவலை, பதைபதைப்பு அனைத்தும் மறைந்துவிடுகின்றன.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைச் சொல்கிறது:

(அ) 'நிறைய நடந்துவிட்ட ஆட்டிற்கு தோள் தேவை.' 

வழி தவறிய ஆடு மற்ற ஆடுகளை விட அதிக தூரம் நடக்கிறது. அதற்குக் கால் வலிக்கும். இன்னும் அதை நடக்க வைப்பது நலமன்று. ஆகையால்தான், ஆயன் அதைத் தன் தோள்களில் சுமக்கின்றான். இன்று நம் வாழ்வில், நிறைய துன்பங்களை அனுபவிப்பவர்கள் தங்களுக்கென்று தோள் ஒன்றை நாடுகிறார்கள். அவர்களுக்கு நம் தோள்கள் தேவை.

(ஆ) 'பரவாயில்லை. மீண்டும் தொடங்கலாம்.'

காணாமல்போவதும் பரவாயில்லை, வாழ்க்கையை மீண்டும் தொடங்கலாம் என்ற நம்பிக்கையையும், எதிர்நோக்கையும் ஆயன் ஆட்டிற்கு அளிக்கின்றான். நம் வாழ்வில் எதுவுமே முடிவு அல்ல. ஒவ்வொரு முடிவும் இன்னொன்றின் தொடக்கமாகவே இருக்கிறது. ஆக, நம் வாழ்வில் நாம் எடுத்த தவறான முடிவுகள் குறித்தோ, நம்மைப் புரட்டிவிட்ட கற்களைக் குறித்தோ, அந்தப் பிறழ்வுகளால் நாம் பெற்ற காயங்களைக் குறித்தோ நாம் கவலைப்படத் தேவையில்லை. தொடர்ந்து முன்னேற நம்மால் முடியும். மீண்டும் 99 ஆடுகளுடன் நம்மால் சேர்ந்துகொள்ள முடியும்.

(இ) 'என் வாழ்வில் காணாமற்போன உணர்வு எது?'

தீபக் சோப்ரா அவர்களின் 'நிறைவு பற்றிய 21 நாள் தியான வரிசையில்', 'நிறைவு' என்பது இயல்பாகவே நம்மிடம் இருக்கிறது என்றும், நாமாகத்தான் குறைவு உணர்வு என்னும் எதிர்மறை நிலையில் வாழ்கிறோம் என்றும் சொல்லப்படுகிறது. ஓர் ஆடு காணாமல் போனாலும், மலை என்று பார்க்கும்போது, மலையில் மொத்தம் 100 ஆடுகள் இருக்கவே செய்தன. அவை இருந்த தூரம்தான் வேறு. என்னில் காணாமல் போன ஒன்று என்னிடமே உள்ளது. நான் ஒருபோதும் குறைவுநிலை அடைய முடியாது. என்னைவிட்டு விலகி நிற்கும், அல்லது என்னை என்னிடமிருந்து அந்நியப்படுத்தும் அக்குறைவை நான் கண்டுகொண்டால் நிறைவு சாத்தியம்.


2 comments:

  1. “ தவறிய ஆடு” இல்லை “ காணாமல் போன ஆடு”. எத்தனை முறை கேட்டாலும்,யார்வழியாகக் கேட்டாலும் ஒவ்வொரு முறையும் வேறு,வேறு பரிதலைத்தரும் ஒரு உவமை. ஒரே நேர்மறை உணர்வுகளுடன் ஒரு எனர்ஜி ட்ரின்க்காக கொடுத்துள்ளார் தந்தை.நம் வாழ்வில் நாம் சந்திக்கும்,பல சுமைகளைச் சுமந்து சோர்ந்து போனவர்களுக்கு நம் தோள்களைஅவர்களின் சுமையை இறக்கிவைக்கும் சுமை தாங்கியாகவும், நம் அன்புக்குரியவர்கள் பிறழ்ந்த நேரங்களைக்கணக்கு வைக்காமல், அவர்கள் வாழ்வில் பீறி எழுந்து மற்ற 99 ஆடுகளுடன் சேர்ந்திட அவர்களுக்கு உதவும் வழிகாட்டிகளாகவும்( கைகாட்டிகள்) இருக்க அழைப்பு விடுக்கிறது இன்றையப்பதிவு. முதல்இரு விஷயங்கள் நம் அயலானுக்காக நாம் செய்ய வேண்டியதாகவும்,அந்த மூன்றாவது யோசனை நமக்கே நாம் செய்துகொள்வதாகவும் தோன்றுகிறது. என் கண்களை விட்டு மறைந்து போன ஒன்றிற்காகப் புலம்புவதை விடுத்து ,தூரமே எனினும் என் கண்களின் பார்வையைக்குளிர வைக்கும் மற்ற விஷயங்களுக்காக நிறைவடைய வேண்டுமென்பதே அது.
    ஆயனின் கண்களில் கணக்கு வித்தியாசமாகத் தெரிந்திடினும் எதையோ ஒன்றைத் தொலைத்தவர்களின் வாழ்க்கை டயரி எனும் புத்தகத்தில் அவர்களுக்காக நாம் ஒரு “வரவுக்கணக்கை” எழுதினால் நம் கணக்கு சரியாகும்.நாமும் கூட நல்ல ஆயன்களே! தவறிய எந்த ஆட்டையும் நம்மாலும் கூட்டிச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கைத் துளிர்களுக்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!


    சொல்வது நம

    ReplyDelete
  2. என் வாழ்வில் காணாமற்போன உணர்வு எது?'

    ஓர் ஆடு காணாமல் போனாலும், மலை என்று பார்க்கும்போது, மலையில் மொத்தம் 100 ஆடுகள் இருக்கவே செய்தன. அவை இருந்த தூரம்தான் வேறு. என்னில் காணாமல் போன ஒன்று என்னிடமே உள்ளது. நான் ஒருபோதும் குறைவுநிலை அடைய முடியாது. என்னைவிட்டு விலகி நிற்கும், அல்லது என்னை என்னிடமிருந்து அந்நியப்படுத்தும் அக்குறைவை நான் கண்டுகொண்டால் நிறைவு சாத்தியம்.👌

    ReplyDelete