Thursday, August 13, 2020

திருமணம்

இன்றைய (14 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 19:3-12)

திருமணம்

இன்றைய நற்செய்தி வாசகத்தின் மையமாக இருக்கின்ற வார்த்தை, 'திருமணம்.' இந்த வார்த்தை மூன்று பரிமாணங்களில் எடுத்தாளப்படுகிறது:

(அ) மண உறவு

(ஆ) மண முறிவு

(இ) மணத்துறவு

மண உறவைப் பற்றி நேரிடையாக பதிவு எதுவும் இல்லை என்றாலும், மண உறவு இல்லாமல், 'முறிவு' இருக்க வாய்ப்பில்லை என்பதால், மண உறவும் குறிக்கப்படுவதாகவே நாம் எடுத்துக்கொள்வோம். இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் திருமணம் என்பது வெறும் நிகழ்வு அல்லது கொண்டாட்டம் அல்ல. மாறாக, அது ஒரு குறியீடு அல்லது உருவகம். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள உடன்படிக்கை உறவை, ஆண்டவராகிய கடவுள் திருமண உறவுக்கு ஒப்பிடுகின்றார். ஆக, திருமணத்தில் இணையும் ஒவ்வொருவரும் அதே உறவுநிலையை இம்மண்ணிப் பிரதிபலிக்கின்றார். 

மேலும், திருமண உறவு என்பது படைப்பின் தொடக்கத்திலேயே, கடவுள் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தபோது உருவானது. 'மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல' என்று சொல்லி அவனுக்கு ஏற்ற 'உதவியாளரைப்' படைக்கின்றார் கடவுள். இவ்வாறாக, திருமண உறவு கடவுளின் படைப்புத் திட்டத்தில் ஒன்றாக இருக்கிறது.

ஆனால், காலப்போக்கில் திருமண வாழ்வில் நிறையப் பிறழ்வுகள் வர ஆரம்பிக்கின்றன. முதன்மையான பிறழ்வாக இருப்பது 'பெண்ணின் பிரமாணிக்கமின்மை.' 'ஆணின் பிரமாணிக்கமின்மை' பற்றி விவிலியம் பேசவில்லை. திருமண இணைப்பில் இருக்கும் ஒரு பெண், இன்னொரு ஆணுடன் உறவு கொண்டால் அதற்கு மணவிலக்குச் சான்றிதழ் கொடுத்து, அவரை விலக்கிவிட மோசேயின் சட்டம் அனுமதி தந்தது. இயேசு, இன்னும் ஒரு படி சென்று, அப்படி அந்தப் பெண் விலக்கிவிடப்பட்டால், ஆணும் இன்னொரு பெண்ணுடன் சேர நேர்கிறது. ஆக, அதுவும் பிரமாணிக்கமின்மை என்று புரட்சி செய்கின்றார். இவ்வாறாக, திருமணப் பிணைப்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உரியது எனச் சொல்கிறார் இயேசு.

இதைக் கேட்ட சீடர்கள் இடறல்படுகிறார்கள். 

'கணவர் மனைவியர் உறவுநிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது!' என்கிறார்கள் சீடர்கள்.

இந்த வார்த்தைகளை இவர்களது மனைவியர் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? சோறு கிடைத்திருக்காது!

வீடு கட்டினால், வரி செலுத்த வேண்டும், மராமத்து பார்க்க வேண்டும், அங்கே இங்கே பூச வேண்டும், வந்தது போவதைப் பார்க்க வேண்டும் என நிறைய வேலைகள் இருக்கத்தான் செய்யும். அதை விட்டுவிட்டு, 'வீட்டில் குடியிருப்பதில் இவ்வளவு பிரச்சினை என்றால், வீடு இல்லாமல் ரோட்டில் திரிவதே நல்லது!' என்று சொல்வது போல இருக்கிறது சீடர்களின் வார்த்தைகள்.

திருமண உறவுநிலையில் பிரச்சினைகள் இருப்பதுபோல, மணத்துறவிலும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. மணத்துறவு மேற்கொள்பவர்களைவிட திருமணம் முடித்தவர்கள் உணர்வு முதிர்ச்சி உடையவர்களாக இருப்பதாகவும், நீண்ட ஆயுள் வாழ்பவர்களாகவும், நோய்த் தொற்று அபாயம் குறைவானவர்களாகவும் இருக்கிறார்கள் என்கின்றன உளவியல் ஆய்வுகள்.

இயேசுவும், சீடர்களின் கருத்தை ஆமோதிப்பதாக, 'அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள இயலாது' என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் கடவுளின் படைப்புத்திட்டத்தைக் கேலி செய்வதாக உள்ளன. திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்றால், கடவுள், ஆதாமை அப்படியே விட்டிருக்கலாமே? ஏன் ஏவாளைப் படைக்கின்றார்? அல்லது இருவரையும் படைத்தாலும், இருவரும் இரு உயிரிகள் என்று தனிமைப்படுத்தியிருக்கலாமே!

சில நேரங்களில் கடவுளர்கள் தங்களுக்குள்ளே இப்படித்தான் முரண்படுகிறார்கள்.

தொடர்ந்து, இயேசு மூவகை மணத்துறவு பற்றிப் பேசுகின்றார்: (அ) பிறப்பினால் வரும் மணத்துறவு. இங்கே மணத்துறவு என்பது இயலாமையால் வருகிறது. எடுத்துக்காட்டாக, என்னுடைய மரபணுப் பிறழ்வால் என் பாலியல் உறுப்புக்கள் சிதைவுறும்போது நான் பிறப்பால் மணத்துறவு ஏற்கிறேன். (ஆ) மருத்துவக் காரணங்களுக்காக மணத்துறவு. எடுத்துக்காட்டாக, எனக்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் நான் என் ஆண்மையை இழக்கிறேன். அல்லது ஒரு பெண் தவறான சிகிச்சையால் தன் கருவுறும் தன்மையை இழக்கின்றாள். இது பிறரால் ஏற்படுத்தப்படும் மணத்துறவு. (இ) விண்ணரசின் பொருட்டு மணத்துறவு ஏற்பது. தங்கள் வாழ்க்கை இலக்கை அடைய விரும்புவர்கள், கவனச் சிதறல்களைக் குறைத்துக்கொள்வது. திருமணம் முடித்தல் என்பது கவனச் சிதறல் என்றும், திருமணம் முடிப்பவர்கள் இலக்கை அடைவதில்லை என்றும் பொருள் அல்ல.

இயேசுவின் இவ்வார்த்தைகள், திருஅவையில், 'மணமுடித்தவர்' மற்றும் 'மணத்துறவு கொண்டவர்' என்று பிரிவை உருவாக்கி, முன்னவர்களைத் தாழ்வானவர்கள் என்றும், பின்னவர்களை உயர்வானவர்கள் என்றும் கொண்டாட வழிவகுத்துவிட்டன. இந்த மனப்பாங்கு மாற வேண்டும்.

மண உறவும், மணத் துறவும் இரு வேறு அழைத்தல்களே!

இரண்டிலும் முறிவு வரலாம்.

இரண்டிலும் முறிவு வரக் காரணம் பிரமாணிக்கமின்மையே.

ஆனால், முன்னதில் ஏற்படும் மணமுறிவு சரி செய்யப்பட்டுவிடும். ஏனெனில், அது மனிதர்களுக்கு இடையே நடப்பது. ஆனால், பின்னதில் ஏற்படும் முறிவு ஆபத்தானது. ஏனெனில், அது மனிதருக்கும் கடவுளுக்கும் இடையே நடப்பது. முன்னதில் பிரமாணிக்கமின்மை மன்னிக்கப்படலாம். ஆனால், பின்னதன் பிரமாணிக்கமின்மை எந்தச் சீட்டுக் கொடுத்தாலும் மன்னிக்க இயலாதது.

மேலும், மணத்துறவு என்பது வெறும் உடல்சார்ந்த பொருள் அல்ல. மணத்துறவு ஏற்கிறேன் என நான் சொல்லிவிட்டு, உறவுகளை என் மனத்தில் சுமக்கத் தொடங்கினால் அதுவும் பிறழ்வு.

இறுதியாக, மணத்துறவின் ஒரு சாதகம் என்ன?

இன்றைய நாளில் நாம் கொண்டாடும் மாக்ஸிமிலியன் மரிய கோல்பே, நாசி வதை முகாமில், கொல்லப்படுவதற்குக் குறிக்கப்பட்ட, தன் சக கைதிக்குப் பதிலாக, தன்னையே கொல்லப்படுவதற்காகக் கையளிக்கின்றார். மணத்துறவு கொண்ட அவர், மணஉறவு கொண்ட தன் சக கைதிக்காகத் தன் உயிரை இழக்கின்றார். மணத்துறவின் மேன்மை இதுவே.

இழப்பதும் இனிதே என அறிந்துகொள்வதற்கான, முதற்பயிற்சியே மணத்துறவு. 

2 comments:

  1. மண உறவு,மணத்துறவு குறித்த பல விஷயங்களை மிகவும் கவனமாக அணுகியுள்ளார் தந்தை.சிறிதே பிறழ்ந்திடினும் அப்படி,இப்படி என்றாகிவிடும். ஒரு நூல் பிடித்தாற்போன்று அணுகவேண்டிய தலைப்பிற்கு நன்றாகவே நியாயம் செய்துள்ளார்.பாராட்டுக்கள்! மண உறவும்,மணத்துறவும் இருவேறு அழைத்தல்களே! முடிவும் அருமை! ஆனால், இறுதியில் மணத்துறவு கொண்ட மாக்ஸிமிலியன் கோல்பே,மண உறவு கொண்ட தன் சகக் கைதிக்காகத் தன் உயிரை இழக்கும் நிகழ்வைக்கூறி “ என்னதான் மண உறவும்,மணத்துறவும் இருவேறு அழைத்தல்களே என்று முழங்கினாலும் “ மணத்துறவு சிறிது மேன்மையானதே!” என்று சொல்லாமல் சொல்கிறார்.தன் கட்சிக்கு வலு சேர்க்கிறார்.மணத்துறவோ..மண உறவோ இரண்டையும் அதனதன் போக்கில் போகவிட்டால் இரண்டும் இருவேறு அழைத்தல்களே என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.எதைப்பற்றி எழுதிடினும் தந்தையின் எழுத்துக்களில் முன் நிற்பது ஒரு தெளிந்த நீரோடை போன்ற அவரது “சிந்தனைத்தெளிவே!” வாழத்துகிறேன்!.... இறையருள் அவரில் நிரம்பி வழிய!!!

    ReplyDelete
  2. “ இழப்பதும் இனிதே என அறிந்துகொள்வதற்கான,முதற்பயிற்சியே மணத்துறவு.”.... யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete