Friday, August 28, 2020

இன்றைய (29 ஆகஸ்ட் 2020) திருநாள்

இன்றைய (29 ஆகஸ்ட் 2020) திருநாள்

திருமுழுக்கு யோவானின் பாடுகள்

இன்று திருமுழுக்கு யோவானின் பாடுகளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவானின் தலை வெட்டப்படும் நிகழ்வு நமக்கு அறிமுகமான நிகழ்வே. இந்நிகழ்வில் வரும் யோவான் மற்றும் ஏரோது என்னும் கதைமாந்தர்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

யோவான் ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறார்: (ஏரோதிடம்), 'உன் சகோதரன் மனைவியை நீ வைத்திருப்பது முறை அல்ல!'

எது முறை, எது முறையல்ல என்பதை அரசன்தான் தீர்மானிக்கிறான் என்பதை அறியாதவரா யோவான்? தனக்கு முறையானதைத் தானே தீர்மானிப்பதாக நினைக்கின்ற ஏரோது, யோவானைச் சிறையில் அடைக்கின்றார்.

ஏரோது ஒரு பாவப்பட்ட மனிதராகத் தெரிகின்றார். அவர் இருமணம் கொண்டவராக இருக்கின்றார். இருமனம் கொண்டிருப்பதன் ஆபத்தை அவர் நமக்கு உணர்த்துகிறார்.

(1) தன் மனைவியையும், தன் சகோதரன் மனைவியையும் தன்னோடு வைத்துக்கொள்கிறார் - திருமணத்தில் இருமனம்.

(2) யோவானைக் குறித்து ஏரோது அஞ்சிகிறார், ஆனால், சிறையில் அடைக்கிறார் - இறைவாக்கினரை ஏற்றுக்கொள்வதில் இருமனம்.

(3) யோவானின் வார்த்தைகளால் குழப்பம் அடைகிறார், ஆனால், மனமுவந்து செவிசாய்க்கிறார் - நல்ல சொல் கேட்பதில் இருமனம்.

(4) 'உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்,' என்றும், 'நீ என்னிடம் எது கேட்டாலும்' என்றும் இரு முறை வாக்குறுதி கொடுக்கின்றார் - உச்சகட்ட மகிழ்ச்சியில் உருவாகும் இருமனம்.

(5) ஏரோதியாவுக்கும், அவளுடைய மகளுக்கும் இடையே நிற்கிறார் ஏரோது - தன் கை தன் கழுத்தையே நெரிக்கும் இருமனம்.

(6) யோவானின் தலை கேட்கப்பட்டதில் தனக்கு வருத்தம் ஒரு புறம், விருந்தினர்களை மகிழ்விக்க நினைத்த உணர்வு மறு புறம் - அடுத்தவருக்காக தன் உணர்வையும் இழக்கும் இருமனம்.

இருமனம் கொண்டிருத்தலை விவிலியம் மகிவும் கண்டிக்கிறது:

'எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால்தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!' (1 அர 18:21)

'உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும். இவ்வாறு, நீ குளிர்ச்சியாகவோ, சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கி விடுவேன்' (திவெ 3:15-18)

நம் வாழ்வில் நாம் இருமனம் கொண்டிருக்கும் ஒவ்வொரு பொழுதும் பாடுகளை அனுபவிக்கவே செய்கிறோம். இப்பாடுகளை விட ஒருமனம் கொண்டிருப்பதால் வரும் பாடுகள் மேல் - திருமுழுக்கு யோவானின் பாடுகள் போல்!


1 comment:

  1. “உன் செயல்களை நான்றிவேன்.நீ குளிர்ச்சியாகவும் இல்லை , சூடாகவும் இல்லை.குளிர்ச்சியாகவோ,சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்.இவ்வாறு,நீ குளிர்ச்சியாகவோ,சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக்கக்கி விடுவேன்.” ஏன்,எதற்கு,எப்படி என்றே தெரியவில்லை.எனக்கு ஓரளவு விபரம் தெரிந்த நாளிருந்து என்னை அடிக்கடிப் புரட்டிப்போட்ட வரிகள் இவை.முக்கியமாக இதுவா- அதுவா,செய்வதா- வேண்டாமா,இப்போதேவா- பிறகா போன்ற சந்தேகங்கள் என்னில் வலுத்த போதெல்லாம் என்னில் தலைதூக்கிய வரிகள்...என்னை யோசிக்க வைத்த வரிகள். இன்றையப் பதிவில் இவ்வரிகளைப் பார்த்தவுடன் ஏதோ எனக்கு வேண்டப்பட்டவர்களைப் பார்த்த உணர்வு. ஆம்! சூடு.... இல்லை குளிர்.வெதுவெதுப்பிற்கு இடமில்லை என்கிறது இன்றையப்பதிவு.அதை விட்டு ஆற்றில் ஒரு கால்...சேற்றில் ஒரு கால் என வருகையில் மனத்தில் வருவது முதலில் தவிப்பு.பின் குற்ற உணர்வு.ஒன்றையே தெரிவு செய்யவும்,அதில் நன்றையே தெளிந்து காணவும் அழைப்பு விடுக்கும் வாசகம்.செவிமடுப்போம்.எனக்குப் பிடித்த....பழகிப்போன வரிகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete