முன்மாதிரி காட்ட
கொரோனா காலத்து லாக்டவுன் கொரோனாவை விடக் கொடுமையாக இருக்க ஒரு காரணம், நம் உழைப்பு தேங்கிப்போவதுதான். 'மனிதன் ஓர் உழைப்பாளி அல்லது வேலைக்காரன்' என மனிதனை வரையறுக்கிறார் கார்ல் மார்க்ஸ். உழைப்பு நமக்கு ஒரு தண்டனை அல்ல. மாறாக, ஒரு கொடை. இந்த உழைப்பின் வழியாக நாம் மற்றவர்களை உருவாக்குமுன் நம்மை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். எளிதான வாழ்வியல் எடுத்துக்காட்டு. செய்வதற்கு நிறைய இருக்கிறது, ஆனால், சோம்பலாக இருக்கிறது, அல்லது மனம் சோர்வாக இருக்கிறது என நாம் நினைக்கும் நேரத்தில், தொலைக்காட்சி பார்க்கின்றோம், காணொளிகள் பார்க்கின்றோம், நிறைய வலைப்பக்கங்களை வாசிக்கின்றோம், காணொளி விளையாட்டுகள் விளையாடுகிறோம். இறுதியில் மிஞ்சுவது சோர்வே. ஆனால், சட்டென்று எழுந்து நம் அலமாரியைச் சுத்தம் செய்தால், நம் துணிகளை அடுக்கி வைத்தால், பாத்திரங்களைக் கழுவினால், அறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினால், துணிகளைத் துவைக்க ஆரம்பித்தால் நம்மை அறியாமல் ஓர் உற்சாகம் நம்மைப் பற்றிக்கொள்வதோடு, எல்லாம் சரியான இடத்தில் அமைவதுபோல இருக்க ஆரம்பிக்கிறது. ஆகையால்தான், பவுலோ கோயலோ, 'உன் அறையைச் சுத்தம் செய், உன் மனம் சுத்தமாகும்' என்கிறார்.
தெசலோனிக்கா நகரில் வாழ்ந்த தொடக்ககால கிறிஸ்தவர்கள் நடுவே மனச்சோர்வு எழுகிறது. காரணம், உடனடியாக நிகழவிருந்த இரண்டாம் வருகை. உலகம் அழியப் போகிறது என்று சொல்லிக் கொண்டு சோம்பித் திரிகின்றனர். இதை நாம் பள்ளிகளில் பார்க்கலாம். மூன்று நாள் தொடர்ந்து விடுமுறை வருகிறது என்றால், அதற்கு முந்தைய நாள் மதியத்திலிருந்து பள்ளியில் கற்றலும் நடக்காது, கற்பித்தலும் நடக்காது. அப்படிப்பட்ட ஒரு சோம்பலைத்தான் கடிந்துகொள்கிறார் பவுல்.
எப்படி?
முதலாவதாக, உழைப்பின் கனிகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.
உழைத்தால் என்ன நடக்கும்?
(அ) உழைத்தல் சோம்பலை முறித்துவிடும்.
(ஆ) உழைத்தல், இலவசங்களை நோக்கி நம் மனத்தைத் திருப்பாது.
(இ) உழைப்பவர் யாருக்கும் சுமையாக இருக்க மாட்டார். தன் ரொட்டியைத் தானே உற்பத்தியாக்குவார்.
(ஈ) உழைப்பவர் தன் ஊதியத்தைக் கொண்டு அடுத்தவரின் நலம் விரும்புவார், நற்செயல் செய்வார்.
திருத்தூதர் என்ற நிலையில் தாங்கள் நிறைய உரிமைகள் பெற்றிருந்தாலும், மேற்காணும் கனிகளைத் தன் உழைப்பின் வழியாக அறுவடை செய்கின்றார் பவுல். அதையே மற்றவர்களும் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார்.
இரண்டாவதாக, தன் வாழ்க்கை முறையை அவர்களுக்கு முன்மாதிரியாக வைக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 23:27-32), தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் வெளிவேடத்தை அல்லது துர்மாதிரியான வாழ்க்கை முறையைக் கடிந்துகொள்கின்றார். தலைமைத்துவத்தில் முன்மாதிரி மிகவும் அவசியம். நான் இருப்பதைப் போலவே எனக்குக் கீழ் இருப்பவரும் செயல்படத் தொடங்குவார் என்பதால், என் இருத்தலில் நான் அக்கறை காட்டுவது அவசியம். ஆக, உழைப்பவர் தன் சக உழைப்பாளருக்கு முன்மாதிரி காட்டுகின்றார்.
மூன்றாவதாக, 'ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக!' என அவர்களுக்கு ஆசி மொழிகிறார் பவுல். இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன: ஒன்று, உழைப்பு ஒருபோதும் நம்மைப் பரபரப்புக்கு உள்ளாக்கி, நம் மன அமைதியை நம்மிடமிருந்து பறித்துவிட நாம் இடம்தரக் கூடாது. இதையே, சபை உரையாளரும், 'உழைப்பு இரு கை இருப்பதை விட, மன அமைதி ஒரு கையளவு இருப்பது மேல்' என அறிவுறுத்துகிறார். இரண்டு, உழைப்பின் கனிகளை வழங்குபவர் ஆண்டவரே. நகருக்கு நாம் காவல் காக்கலாம், ஆனால், நகரைக் காப்பவர் கடவுளே. நாம் செங்கல் வைத்துக் கட்டலாம், ஆனால், வீடு நிறைவுபெறுவது ஆண்டவராலேயே. இதையே திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில் காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்!' (காண். திபா 127:1) என எச்சரிக்கின்றார். நம் உழைப்பின் கனிகள் யாவும் ஆண்டவரிடமிருந்து வருகின்றன என நாம் உணர்ந்தால், உழைப்பில் வரும் போட்டியுணர்வைத் தவிர்க்க முடியும்.
“ உழைப்பே உயர்வு!”... “ உழைக்காதவன் உண்ணலாகாது” போன்ற பழமொழிகள் நம் பள்ளிப்பருவத்திலிருந்தே நாம்கேட்டு வருபவைதான். இன்றையப்பதிவில் தந்தை விவிலிய வாசகங்களின் துணைகொண்டு “என் உழைப்பு என்னைமட்டும் வாழவைக்கவில்லை; அது மற்றவர்களையும் வாழவைக்கும் ஒரு விஷயம்” என்பதை பலமுகங்களாகத் தருகிறார். ஒரு குடும்பத்தலைவனின் உழைப்பு அந்தக் குடும்பத்தின் அத்தனை பேரையும் செழிப்பாய் வைத்திருக்க உதவுகிறது என்பது எத்தனை பெரியவிஷயம்! “தலைமைத்துவத்தில் இருப்பவர்களின் உழைப்பை முன்மாதிரியாகக்கொண்டு அவரின் கீழ் உள்ளவர்களும் உழைக்கத்தொடங்குவர்” எனும் இன்றைய வாசகத்தின் வரிகள் தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே பொருந்தும்.
ReplyDelete“ உன் அறையைச் சுத்தம் செய்; உன் மனம் சுத்தமாகும்” எனும் பவுலோ கோயலோவின் வரிகளும்,ஆண்டவரின் உடனிருப்பும் சேரும்பொழுதுதான் நம் உழைப்பு பயனுள்ளதாகும் என்பதைக்குறிக்கும் “ ஆண்டவரே வீட்டைக்கட்டவில்லையெனில் அதைக்கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; ஆண்டவரே நகரைக்காக்கவில்லையெனில் காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்!” எனும் திருப்பாடலின் வரிகளும் உழைப்பின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.
நாம் உணவருந்துமுன் நமது முன்னால் இருக்கும் உணவைப் பார்த்து “இன்று இந்த உணவிற்காக நானும் ஒரு வழியில் என் பங்களிப்பைத் தந்துள்ளேன்”.... என்று நினைக்க முடிந்தால் நாம் தான் உலகிலேயே பணக்காரர்கள் எனும் எண்ணம் நம்மைப்பெருமைப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
உழைப்பு குறித்து ஒரு “உழைப்பின் இலக்கணமே” தந்த வரிகள் என்பதால் இன்றையப்பதிவின் அத்தனை வரிகளும் பெருமைக்குரியவை.தந்தைக்கு வாழ்த்துக்கள்!
ஆ
ReplyDelete