Tuesday, August 18, 2020

வேலைக்கு அமர்த்தவில்லை

இன்றைய (19 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 20:1-16)

வேலைக்கு அமர்த்தவில்லை

திருச்சி இரயில் சந்திப்பிலிருந்து கிராப்பட்டிக்குச் செல்லும் பாதையில், பாலத்திற்கு அடியில், தினமும் காலையில் 6 மணி முதல் 9 மணி வரை ஒரே கூட்டமாக இருக்கும். பக்கத்து ஊர்களிலிருக்கும் பலர் தங்கள் கையில் உணவுப் பையோடு யாராவது தங்களைக் கூலி வேலைக்கு அமர்த்த மாட்டார்களா என்று காத்திருப்பர். மதியம் 12 மணி, மாலை 3 மணி, மாலை 5 மணி எனச் சென்றாலும் ஒரு சிலர் வேலை வேண்டி நிற்பதை அங்கே பார்க்க முடியும். வேலை முடிந்த அவர்கள் பெரும்பாலும் சாலையில் நின்றுகொண்டு, ஏதாவது லாரி அல்லது வேன் ஒன்றில் பயண அனுமதி கேட்டுத் தங்கள் இல்லங்கள் திரும்புவர். இரவு 9 மணிக்கும் வீடு திரும்பாமல் பலர் நிற்பர். அவர்கள் யாருடைய தயவிலாவது தங்கள் இல்லம் திரும்பி, இரவு உணவு உண்டு, கொஞ்ச நேரம் தூங்கி மறுபடியும் அடுத்த நாள் காலையில் எழுந்து இதே போல கால்கடுக்க நிற்க வேண்டும்.

பரிதாபமான வாழ்க்கை நிலை அவர்களுடையது!

ஏறக்குறைய இதே வாழ்க்கை நிலையைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். திராட்சைத் தோட்டக்காரர்கள் எடுத்துக்காட்டில் காலை 6 மணி, 9 மணி, மதியம் 12 மணி, 3 மணி, மாலை 5 மணி என ஐந்து பொழுதுகளில் ஆள்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வருகிறார்கள். வந்தவர்கள் அனைவரும் ஒரு தெனாரியம் வீதம் கூலி பெறுகின்றனர்.

பல பேருக்கு பல நெருடல்களை ஏற்படுத்துகின்ற வாசகம் இது.

'எங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்னும் வார்த்தைகளை மட்டும் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

சின்ன வயசுல பாம்புக் கட்டம் விளையாடியிருக்கிறீர்களா? 1 முதல் 99 வரை உள்ள கட்டங்களில், சில கட்டங்களில் ஏணிகள், சில கட்டங்களில் பாம்புகள் என சிறிய, பெரிய அளவுகளில் இருக்கும். நாம் தாயக்கட்டை அல்லது சோளிகளை அல்லது புளியங்கொட்டைகளை வீசி நகர நகர, சில நேரங்களில் ஏணிகளில் உயர்வோம், சில நேரங்களில் பாம்பு கடி பட்டு கீழே வருவோம். 98 வது எண்ணில் ஒரு பாம்புத் தலை இருக்கும். அந்தப் பாம்பு கொத்தியது என்றால், கீழே 3ஆம் எண்ணுக்கு நாம் வந்துவிடுவோம். அதே போல 5ஆம் எண்ணில் ஓர் ஏணி இருக்கும். அதில் ஏறினால் நாம் 96வது கட்டத்திற்கு உயர்ந்திடுவோம்.

இந்தக் கட்டங்களில் விளையாடும் நமக்கு, இத்தனை எண்தான் விழும் என்று நம்மால் கணிக்க முடியுமா? கைகளை மடக்கி ஏமாற்றி விளையாண்டால் ஒரு வேளை கணிக்கலாம். ஏணியில் ஏறிக்கொண்டே ஒருவன் இருக்கிறான். மற்றவன் பாம்புக் கடிபட்டு கீழே உள்ள கட்டங்களில் இருக்கிறான். ஏணியில் ஏறியவன் பாம்புக் கடிபட்டவனைப் பார்த்து, 'நீ தோற்றுவிட்டாய்!' என்று சொல்ல முடியுமா?

'முடியாது'

'சொல்லக் கூடாது' என்றே நான் சொல்வேன். 

ஒருவன் ஏணியில் ஏறுவதும், இன்னொருவன் பாம்புக் கடி படுவதும் இயல்பாக விளையாட்டில் நடக்கக் கூடியது. அங்கே எதுவும் தகுதியைப் பொருத்து நடப்பதில்லை. ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்றால், இன்னொருவர் உயர்ந்த பதவிக்கு வர முடியவில்லை என்றால், உயர்ந்த பதவியில் இருப்பவர் மற்றவரை விடத் தகுதி வாய்ந்தவர் என்பது பொருள் அல்ல. அவர் கட்டத்தில் ஏணி இருந்தது, இவர் கட்டத்தில் பாம்பு இருந்தது, அவ்வளவுதான்.

இன்று நான் என் அறையில் அமர்ந்து இதை கணிணியில் தட்டச்சு செய்கிறேன். என் அறைக்கு வெளியே இன்னொருவர் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார். அவரை விட நான் மேலானவனா? இல்லை. அவரை விட எனக்குத் தகுதி கூடுதலா? இல்லை. இருவரும் வாழ்வின் பாம்புக்கட்டத்தில் அவரவருடைய எண்களில் இருக்கிறோம். அவ்வளவுதான்! நான் பெருமை கொள்ளவோ, அவர் சிறுமை கொள்ளவோ இடமே இல்லை.

ஆனால், பல நேரங்களில் ஏணிகளில் நாம் உயரும்போது, வாழ்வில் வெற்றிபெறும்போது, உயர் பதவிகளை அடையும் போது, 'இது என்னால் நடந்தது! இதற்கு நான் தகுதி வாய்ந்தவன்!' எனக் கருதி இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறோம். 

இது தவறு எனக் காட்டுகிறார் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் நிலக்கிழார்.

ஆறு மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர் தன் தகுதியால் தனக்கு வேலை கிடைத்தது என நினைத்துப் பெருமிதம் கொள்கிறார். 

மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவரை யாரும் அதுவரை வேலைக்கு அமர்த்தவில்லை. அவரும் காத்துக்கொண்டேதான் இருந்தார். எந்த விதத்திலும் அவருடைய தகுதி குறையவில்லை. 

காலையில் வேலைக்கு வந்தவர் ஏணியில் வந்தார். மாலையில் வேலைக்கு வந்தவர் பாம்பு கொத்திக் காத்துக் கிடந்தார்.

இங்கேதான், தோட்டக்காரர் கட்டங்களைப் புரட்டிப் போடுகின்றார். பாம்புகளை அழித்து விட்டு ஏணிகள் என்றும், ஏணிகளை அழித்துவிட்டு பாம்புகள் என்றும் வரைகின்றார். பாம்புகளால் கடிபட்டவர்கள் மகிழ்கின்றனர். ஏணிகளில் ஏறியவர்கள் முணுமுணுக்கிறார்கள். கட்டங்கள் புரட்டிப் போடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. கட்டங்கள் என்றென்றும் அப்படியே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், ஏணிகளில் ஏறியது தங்களது தகுதியால் என அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பாவம் அவர்கள்! அறியாமையில் இருக்கிறார்கள்!

இரண்டு கேள்விகள் எனக்கு:

(அ) என் இருத்தலை நான் என் தகுதியின் பலன் எனக் கருதி பெருமை கொள்வதை விடுத்து, என் இருத்தல் இயல்பாக நடக்கிறது என்ற வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா?

(ஆ) யாரும் வேலைக்கு அமர்த்தாத, யாரும் கண்டுகொள்ளாத, யாரும் உயர்பதவி அளிக்காத மற்றவர்களைப் பார்க்கும்போது, என் மனநிலை இரக்கம் சார்ந்ததாக இருக்கிறதா? அல்லது அவர்கள் சோம்பேறிகள், தகுதியற்றவர்கள் என நான் அவர்களைப் பழிக்கிறேனா?

பழித்தல் தவறு. பெருமிதம் கொள்தல் தவறு.

எது சரி?

அடுத்தவர் என்னைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு நல்லவனாய் இருத்தலே சிறப்பு.


1 comment:

  1. கண்டிப்பாக பல பேருக்கு நெருடல் ஏற்படுத்துகிற வாசகம் தான் இது. ஒவ்வொரு முறையும் இதில் கண்கூடாகத்தெரியும் அநியாயத்தைத் தட்டிக்கேட்டால் ஏதோ அந்த சமயத்திற்கு என்னதையோ சொல்லி வாயடைத்துவிடுவர் நம் அருட்பணியாளர்கள்.இன்றும் கூடத் தந்தை அந்த வாசகத்தைப் பாம்பு- ஏணி தாயக்கட்டதுடன் இணைத்துப் பேசியிருப்பது ஏதோ புரிந்த மாதிரியும் உள்ளது..புரியாத மாதிரியும் உள்ளது.ஆனால் இன்றையப் பதிவைப்படித்தவுடன் என் மனத்தைத்தொட்டது இன்றைய வாசகமல்ல... தந்தையின் observation power. கண்டிப்பாக அவர் சமீபத்தில் இவ்விளையாட்டை விளையாடியிருப்பாரெனத் தோன்றவில்லை.என்றோ விளையாடிய ஒரு விளையாட்டை இன்றைய வாசகத்துடன் கோர்த்து அதை ஒரு வாழ்க்கைப்பாடமாக மாற்றியிருப்பது பெருமைக்குரிய விஷயம்.
    “காலையில் வந்தவர் பெருமைக்குரியவரும் அல்ல; மாலையில் வந்தவர் கண்டிக்கப்பட வேண்டியவரும் அல்ல. காலையில் வந்தவர் ஏணியில் வந்தார்; மாலையில் வந்தவர் பாம்பு கொத்திக்கத்துக் கிடந்தார்”.அவரவருக்கு அமைவது.இதில் யார் யாரைக்குறை சொல்வது... இல்லை பாராட்டுவது? .( அவன் குருடனாயப்பிறந்தது அவன் செய்த பாவமா? கூடவே இந்த வரியும் நினைவுக்கு வந்து போகிறது) சிலர் பிறவியிலேயே பெருமைக்குரியவராகவும்,இன்னும் சிலர் பிறப்பிற்குப்பின் பெருமையைத் தேடிக்கொள்பவர்களாகவும் இருப்பது அவரவர் பிறவிப்பயன். அடுத்தவர் நம்மைப்பார்த்துப் பொறாமைப்படுமளவுக்கு நாம் நல்லவர்களாய் இருக்க எல்லோருக்குமே ஆசைதான்.ஆனால் அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமே!.அப்படி ஒன்றைப்பெற்றவன் அதை அடுத்தவருடன் பகிரமுன்வந்தால் அது பெருமைக்குரிய விஷயமே!
    தன்னைச்சுற்றி நடக்கும் வெகு சாதாரணமான நிகழ்வுகளைக்கூடத் தன் மைக்ரோஸ்கோப்பிக் கண்களால் படமெடுத்து, அதை அப்படியே தன் கம்ப்யூட்டர் மூளையில் பதியவைத்து, தேவைப்படும்போது அவற்றைப்பிறருக்கு ப்ரின்டட் காப்பிகள் எடுத்துத்தரும் ஒரு நூலகமான தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!

    ReplyDelete