Wednesday, August 12, 2020

மன்னித்தல் என்னும் பளு

இன்றைய (13 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 18:21 - 19:1)

மன்னித்தல் என்னும் பளு

நேற்றைய நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து, குழும வாழ்விற்கான அடுத்த பண்பாக இயேசு முன்வைப்பது 'மன்னிப்பு.' 

'எழுபது தடவை ஏழு முறை மன்னிக்க வேண்டும்' என அறிவுறுத்துகின்ற இயேசு, தொடர்ந்து, 'எப்படி மன்னிப்பது?' என்பதை ஓர் உவமை வழியாக எடுத்துரைக்கின்றார்.

'ஓர் அரசனும் பணியாளனும்' என்னும் எடுத்துக்காட்டில், 'அரசன் மன்னிப்பது எளிது. ஏனெனில், அது அவனுடைய பணம் அல்ல. ஆனால், பணியாளன் மன்னிப்பது கடினம். ஏனெனில், அது அவனது பணம்' எனக் கடந்த முறை எழுதியிருந்தது நினைவிருக்கிறது. மேலும், அரசன் மன்னித்த பணம் அதிகம், பணியாள் மன்னிக்க மறுத்த பணம் மிகக் குறைவு என்பதும் நாம் அறிந்ததே.

பணியாளனால் ஏன் தன் சக பணியாளனை மன்னிக்க இயலவில்லை? அல்லது அரசனால் தன் பணியாளனை எப்படி மன்னிக்க முடிந்தது?

கொஞ்ச நாள்களாக நான் அறிந்த ஒன்று என்னவென்றால், 'நான் ஒருவரோடு அதிகமாக நெருக்கமாக இருக்கும்போது, அவரை அதிகமாகப் புரிந்துகொள்ளும்போதும், அல்லது அவரின் நோக்கங்கள் எனக்குத் தெளிவாகிற போதும் என்னால் அவரை மன்னிப்பது கடினம்.'

அல்லது, 'அதிகமாகப் புரிந்துகொண்டால் என்னால் குறைவாகவே மன்னிக்க முடியும்!' '(The more you understand, the less you forgive!')

இதை எடுத்துக்காட்டுக்கள் வழியாக விளக்குகிறேன்:

ஒன்று. நான் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து வங்கியில் என்னுடைய கணக்கில் செலுத்தச் சொல்கிறேன். அவர் சென்ற சில நிமிடங்களில், 'ஃபாதர், வர்ற வழியில நான் வண்டியில இருந்த கீழே விழுந்துட்டேன். என்னைத் தூக்கிவிட சிலர் வந்தார்கள். எழுந்து பார்த்தால் நீங்கள் கொடுத்த பணத்தைக் காணவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்!' என ஃபோன் செய்கிறார். நானும், 'ஐயோ! பாவம்! உங்களுக்கு ஒன்னும் ஆகலயே!' என்று சொல்லி ஃபோனை வைத்துவிடுகிறேன். அவரை நான் மன்னித்தும் விடுகிறேன். ஆனால், ஓரிரு வாரங்கள் கழித்து, மற்றவர்கள் வழியாக நான் வேறொன்றைக் கேள்விப்படுகிறேன். அவர் சாலையில் விழுந்ததாகச் சொன்னது, பணம் காணாமல் போனது எல்லாம் பொய் என உணர்கிறேன். அவர் எனக்கு ஏன் இப்படிச் செய்தார்? நான் அவருக்கு நல்லது தானே செய்தேன்? பணத் தேவை என்றால் என்னிடம் அவர் கேட்டிருக்கலாமே? என நான் அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது, அவரின் செயலுக்கான நோக்கங்களை அறியத் தொடங்கும்போது என்னால் அவரை மன்னிக்க இயலாமல் போய்விடுகிறது. அல்லது மன்னித்தல் ஒரு கடினமான அல்லது பளுவான செயலாகிவிடுகிறது.

இரண்டு. நான் நடந்து போகிறேன். சைக்கிளில் வந்த ஒருவர் என்மேல் மோதிவிடுகிறார். நான் எழுந்து தூசி எல்லாம் துடைத்துவிட்டு, 'ஐயோ! பரவாயில்லை! யாராவது வேண்டுமென்று மோதுவார்களா? இது ஒரு சிறிய விபத்துதான்! நீங்கள் போங்க!' என அவரை அனுப்பினால், என்னால் அவரை மன்னிக்க முடியும். ஆனால், வந்தவர் குடித்திருந்தாரா? என்ன நோக்கத்திற்காக என்னை இடித்தார்? யார் என்மேல் அவரை இடிக்கச் சொன்னார்கள்? என நான் அவரைப் புரிந்துகொள்ளத் தொடங்கினால், என்னால் அவரை மன்னிக்க இயலாது.

ஆனால், நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ, நம்மை அறியாமலேயே நாம் அடுத்தவர்களைப் புரிந்துகொண்டே இருக்கிறோம். புரிதல் கூடக்கூட மன்னிப்பும் தூரமாகிவிடுகிறது. 

இயேசுவின் எடுத்துக்காட்டில் உள்ள அரசனுக்குத் தன் பணியாளனைப் புரிந்திருக்க வேண்டிய தேவையில்லை. ஆகையால் அவன் எளிதாகப் பணியாளனை மன்னித்துவிட்டான்.

ஆனால், பணியாளன் தன் சக பணியாளனைப் பார்க்கிறான். பணத்தைத் தன்னிடம் வாங்கிக்கொண்ட அவன், கடனைச் செலுத்துவதற்குப் பதிலாக, நன்றாகக் குடிக்கவும், குடும்பத்தோடு பிக்னிக் செல்லவும், விருந்துண்ணவும், பளபளப்பான ஆடைகள் வாங்கவும் செய்வதைப் பார்க்கும்போது, பணம் கொடுத்தவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் தன் பணியாளனுடன் கொண்டிருக்கும் நெருக்கம், அவனை மன்னிக்க இயலாதவனாக ஆக்கிவிடுகிறது. ஆகையால், அவனது கழுத்தைப் பிடிக்கிறான்.

நம் வாழ்விலும் பார்க்கலாம்.

யாருக்கோ நடந்தால், 'சரி! தெரியாம செய்துவிட்டான்! மன்னிச்சுடுங்க!' என்று சொல்வோம்.

ஆனால், என் குடும்பத்தில், என் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், நண்பர்கள், அருள்பணிநிலை உறவில் யாராவது தவறு செய்தால், நம்மால் எளிதாக மன்னிக்க இயலவில்லை. ஏனெனில், இங்கே நெருக்கம் அதிகம். நெருக்கம் அதிகம் என்பதால் உரசல் அதிகம். உரசல் அதிகம் என்பதால் காயம் அதிகம். காயம் அதிகம் என்பதால் வலி அதிகம். வலி அதிகம் என்பதால் கோபமும் அதிகம்.

ஆக, நான் மற்றவரை மன்னிக்க வேண்டுமென்றால், என் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அறிதல் கூடக்கூட, புரிதல் கூடக்கூட மன்னித்தல் கடினமாகும்.

அல்லது, கண்களை மூடிக்கொண்டு, நான் மன்னிப்பு பெற்ற அனுபவத்தை எண்ணிப்பார்த்து, தாராளமாக அடுத்தவரை மன்னிக்க வேண்டும்.


1 comment:

  1. “அதிகமாகப் புரிந்து கொண்டால் குறைவாகவே மன்னிக்க முடியும்!”... என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஆனால் இறுதி வரிகளை சில திருத்தங்களோடு ஏற்றுக்கொள்கிறேன்.
    நான் மற்றவரை மன்னிக்க வேண்டுமென்றால், என் கண்களை மூடிக்கொள்ள வேண்டும். அறிதல் கூடக்கூட,புரிதல் கூடக்கூட மன்னித்தல் “எளிதாகும்.”
    கண்களை மூடிக்கொண்டு,நான் மன்னிப்பு பெற்ற அனுபவத்தை எண்ணிப்பார்த்து,தாராளமாக அடுத்தவரை முதலில் மன்னிக்க வேண்டும்.பின் நாம் “மன்னித்ததையும் சேர்த்தே மறக்க
    வேண்டும்.”இது என் புரிதல்.
    ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம்.அனுபவத்திற்கேற்ற புரிதல்.அதையொட்டியே அவரவர் கற்றுக்கொள்ளும் பாடம்.
    “ பளு” வாகவே இருப்பினும் “ மன்னித்தல்” எனும் “இறைகுணத்தை” மனித குணமாக்கப் பாடம் சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete