Thursday, August 27, 2020

புனித அகுஸ்தினார்

இன்றைய (28 ஆகஸ்ட் 2020) திருநாள்

புனித அகுஸ்தினார்

இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக நான், இத்தாலியன் மற்றும் ஆங்கில மொழிகளிலிருந்து நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு மொழிபெயர்த்த, அகுஸ்தினாரின் Confessions என்னும் நூல் 'ஒப்புகைகள்' என்று கனிகிறது. இந்த நூலுக்கு அறிமுகவுரை வழங்கிய நம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களுக்கும், இந்த நூலை வெளியிடுகின்ற, தமிழ் இலக்கியக் கழக இயக்குநர் பாசமிகு அருள்திரு ஜோசப் ஆரோக்கியம், சே.ச. அவர்களுக்கும் நம் நன்றிகள். இந்தப் புத்தகத்தைப் பெற விரும்புபவர்கள் தமிழ் இலக்கியக் கழகத்தையோ (944 34 66 276), என்னையோ (948 948 21 21) தொடர்பு கொள்ளலாம்.

நான் அகுஸ்தினாரின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அவர் என்னைப் புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தார் - இதுதான் எனது ஒட்டுமொத்த மொழிபெயர்ப்பு அனுபவத்தின் சுருக்கம்.

பேரிக்காய்! தன் 12ஆம் வயதில் பேரிக்காய்களைத் திருடியது தன் பசிக்காக அல்ல, மாறாக, தன் ஆசைக்காக என அறிக்கையிடும் இனியவர் ஒருவர், பசிக்கும் ஆசைக்கும், தேவைக்கும் விருப்பத்திற்கும், நன்மைக்கும் இன்பத்திற்கும் இடையே தான் பட்ட இழுபறி நிலையை எண்ணிப் பார்த்து, கட்டிலின் இன்பத்திலிருந்து தன்னாளுகைக்கும், இறுமாப்புநிறை பார்வையிலிருந்து தன்னறிவுக்கும், உலகுசார் பேரார்வங்களிலிருந்து ஆன்மீகம்சார் அமைதிக்கும் புறப்பட்டுச் செல்லும் பயணத்தின் பதிவுகளே அகுஸ்தினாரின் ஒப்புகைகள்.

அகுஸ்தினாரை மற்றும் அகுஸ்தினாரைப் பற்றி நான் வாசித்தபோது என்னைக் கவர்ந்த 33 மகாவாக்கியங்களை உங்களோடு இன்றைய நாளில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

1. கெட்டவன் ஒருவனின் அநீதியால் நீ துன்புற்றால் அவனை நீ மன்னித்துவிடு. இல்லையெனில், நீயும் அவனும் சேர்த்து இரண்டு கெட்டவர்கள் உருவாகிவிடுவார்கள்.

2. நீ மௌனமாயிருந்தாலும், பேசினாலும், அடுத்தவரைத் திருத்தினாலும், மன்னித்தாலும் அன்பே உன்னில் வேரூன்றியிருக்கட்டும்! அந்த வேரிலிருந்து நன்மை மட்டுமே வளரும். அன்பு செய்! பின்னர், நீ விரும்புவதை எல்லாம் செய்.

3. எதிர்நோக்கின் அழகிய புதல்வியர் இருவர். கோபம் மற்றும் துணிவு என்பது அவர்களது பெயர்கள். பொருள்களின் இருப்பைப் பார்ப்பதால் எழும் கோபம். அவை அப்படியே இருக்கக் கூடாது என நினைப்பதற்குத் துணிவு.

4. பயம்தான் அன்பின் எதிரி.

5. நம் நண்பர்களின் சுமைகளைச் சுமக்க நாம் நீட்டும் உதவிக்கரத்தை விட நட்பின் ஆதாரம் வேறொன்றுமில்லை. 

6. ஒழுங்கற்ற மனத்திற்கான தண்டனை அதன் ஒழுங்கற்ற தன்மையே.

7. இரக்கம் காட்டுபவர் சுதந்திரமாக இருக்கிறார். தீயவராய் இருப்பவர் அரசராக இருந்தாலும் அடிமையாகவே இருக்கிறார்.

8. நம் உள்மனத்தின் பிரதிபலிப்பே நாம் காணும் இந்த உலகம்.

9. நாம் எந்த அளவிற்கு அன்பு செய்கிறோமோ அந்த அளவிற்கு நம் அழகு வளர்கிறது. ஏனெனில், அன்பு என்பது ஆன்மாவின் அழகு.

10. நீ எந்த அளவிற்கு மேலே செல்ல விரும்புகிறாயோ, அந்த அளவிற்கு தாழ்ச்சியில் நீ கீழே செல்ல வேண்டும்.

11. உண்மைக்கு யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. அது தன்னையே தற்காத்துக்கொள்ளும்.

12. பொறுமையே ஞானத்தின் தோழன்.

13. பிறழ்வுபட்ட விருப்பத்தின் விளைவு மிகுகாமம். காமத்திற்கு (இன்பத்திற்கு) அடிமையாவதால் பழக்கம் உருவாகிறது. பழக்கம் எதிர்க்கப்படாதபோது கட்டாயத் தேவையாக மாறுகிறது.

14. நாம் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு யாருடைய புகழ்ச்சியும் தேவையில்லை. ஏனெனில், அதைச் செய்வது நம் கடமை.

15. ஒரு மனிதரின் குணத்தைக் கண்டறிய, அவர் எதை விரும்புகிறார் என்று கவனித்துப்பார்.

16. நம்பு. அப்போதுதான், நீ புரிந்துகொள்வாய்!

17. நீ காணாததை நம்புவது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பரிசாக, நீ நம்புவதைக் காண்பாய்.

18. நீ எல்லாருக்கும் நன்மை செய்ய முடியாது. ஆகையால், உனக்கு அருகில் இருப்பவர்களுக்கு நன்மை செய்.

19. மக்களின் ஏக்கங்களையும் துன்பங்களையும் கேட்கும் காதுகள் அன்புக்கு உண்டு.

20. கடவுளிடம் அன்புகூர்வதே மிகப்பெரிய காதல். கடவுளே! உன்னை அறிவதே வாழ்க்கை. உனக்குப் பணிசெய்வதே என் சுதந்திரம். உன்னைப் புகழ்வதே என் ஆன்மாவின் மகிழ்ச்சி. உம் அருளால் என்னைச் சூழ்ந்து காத்தருளும் - இங்கும் எங்கும், இப்போதும் எப்போதும்!

21. கடவுள் நம் வீட்டில்தான் இருக்கிறார். நாம்தான் வீட்டை விட்டு வெளியே சுற்றித் திரிகிறோம்.

22. கை நிறையப் பொருள்கள் இருந்தால் அங்கே கடவுளைக் கைக்கொள்ள இடம் இருக்காது.

23. யாரும் செய்யவில்லை என்றாலும், சரி என்பது சரியே.

24. காணாமற்போன ஆன்மாவுக்கு எஞ்சுவது துன்பமே.

25. மனித உறவுகள் இன்பப் பிணைப்பைத் தருகின்றன. ஆனால், அந்தப் பிணைப்புடன் இணைந்து வருவன பொறாமை, சந்தேகம், பயம், கோபம், மற்றும் சண்டை சச்சரவுகள்.

26. மலைகளின் உயரங்களைக் கண்டு வியக்கும் மானிடர்கள் தங்கள் இருத்தலைக் கண்டு வியப்பது இல்லை.

27. முழுவதுமான மறுப்பு சரியான நிதானத்தை விட எளிதானது.

28. தலைமுதல் கால் வரை 'அல்லேலூயா' என வாழ்பவனே கிறிஸ்தவன்.

29. எங்கே உன் இன்பம் இருக்கிறதோ, அங்கே உன் புதையல் இருக்கும். எங்கே உன் புதையல் இருக்கிறதோ, அங்கே உன் இதயம் இருக்கும். எங்கே உன் இதயம் இருக்கிறதோ, அங்கே உன் மகிழ்ச்சி இருக்கும்.

30. நான் விரும்பும் ஒன்று தானாக வரும் வரை நான் இருந்த நிலையில் நிறைவோடு இருக்க முடிவு செய்தேன். 

31. உடல்சார் துன்பமே மிகப் பெரிய தீமை.

32. வனப்புள்ள, மகிழ்ச்சியூட்டும் எந்தப் பொருள்களிலும் ஒருவிதமான அழகு இருக்கிறது – பொன், வெள்ளி, மற்றும் அது போன்றவற்றில் இருப்பது போல. உடல் இவ்விதமான பொருள்களைத் தொடும்போது, பொருள்களின் மதிப்பு இன்னும் கூடுகிறது. 

33. இறைவா! எம் தலைவரே! உமக்காகவே நீர் எங்களைப் படைத்ததால், உம்மில் அமைதி காணும் வரை எம் இதயம் அமைதி கொள்வதில்லை!

திருநாள் வாழ்த்துக்களும் செபங்களும்!

3 comments:

  1. இன்று தாய் புனித மோனிக்கா.நாளைத்தனயன் புனித அகுஸ்தினார். தாய்க்கும் சேய்க்கும் சேர்த்தே புனிதத்துவம்! யாருக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை? புனித அகுஸ்தினார் திருஅவையின் தூண் எனில் அதைத்தாங்கும் அஸ்திவாரம் அன்னை மோனிக்கா. கண்களில் ஈரத்துடன் ஒரு தாய் செய்யும் இறைவேண்டல் இறைவனிடமிருந்து எதையும் சாதிக்கவல்லது என்பதற்கு இந்தத் தாயும் சேயும் எடுத்துக்காட்டு. நன்கு சிவந்த,பழுத்த ஒரு கூடைக்கனிகளில் எது நல்லது என எப்படிச் சுட்டுவது? ஆனாலும் அந்த 29 கொஞ்சம் விசேஷமே! வாழ்வின் நித்தியமே மகிழ்ச்சிதானே!

    ReplyDelete
  2. தொடர்ச்சி

    இந்ந நன்னாளில் தந்தையைப் பற்றி எழுதவில்லையெனில் நான் என் கடமையிலிருந்து தவறியவளாவேன். தந்தையை நானறிந்த நாளிலிருந்து புனித அகுஸ்தினாரின் மீது அவர் கொண்டிருந்த பற்றும்,அவரின் ஆங்கில நூலான “ “Confessions” ஐத் தமிழாக்கம் செய்ய வேண்டுமெனும் அவரது தாகமும் நான்றிந்ததே. நம் கைளில் தவழப்போகும் அவரின் தமிழாக்கம் “ ஒப்புகைகள்” தந்தையின் மாபெரும் சாதனை! அவருக்கு என் வாழ்த்துக்களும்! பாராட்டும்! என் கைகளில் தவழவிருக்கும் அந்த நூலுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன். மீண்டும் வாழ்த்துக்கள்!
    தந்தைக்கும்,அனைவருக்கும் புனித அகுஸ்தினாரின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. Father, Is your phone number correct?

    ReplyDelete