Monday, August 31, 2020

வாயை மூடு

இன்றைய (1 செப்டம்பர் 2020) நற்செய்தி (லூக் 4:31-37)

வாயை மூடு

தொலைக்காட்சியில் 'சென்டர் ஃப்ரெஷ்' என்ற சவ்வு மிட்டாய்க்கு வரும் விளம்பரத்தில், 'வாய்க்கு போடும் பூட்டு' என்ற வரிகள் வருவதுண்டு.

வாய்க்குப் பூட்டுப் போடுதல் நலமே என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இயேசு நாசரேத்திலிருந்து கப்பர்நாகூம் வருகின்றார். அவருடைய முதல் அறிகுறி தீய ஆவியை விரட்டுவதாக இருக்கிறது. 

இந்த நிகழ்வில், 'பேச்சும்' 'அமைதியும்' மாறி மாறி வருகிறது.

இயேசுவைப் பார்க்கின்ற தீய ஆவி, 'நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' எனப் பேசுகிறது.

அதைக் கேட்ட இயேசு பேசுகிறார். 'பேசாதே!' எனப் பேசுகின்றார்.

தீய ஆவி வெளியேறுகிறது.

அங்கிருந்த எல்லாரும், 'எப்படிப் பேசுகிறார் பாருங்கள்!' என்று பேசுகின்றனர்.

பின்னர், இயேசுவைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவுகின்றது.

இந்த நிகழ்வில் இயேசு தீய ஆவியின்மேல் அதிகாரம் கொண்டவராக விளங்கினார் என்பது தெளிவாகிறது.

'வெளியே போ!' என்றவுடன் தீய ஆவி வெளியேறுகிறது.

ஏன் இயேசு தீய ஆவியை வெளியேற்ற வேண்டும்?

தீய ஆவி சரியாகத்தானே பேசியது: 'நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.'

இயேசுவின் சொந்த ஊரார்கூட இப்படிப் பேசவில்லையே?

இதில் ஒன்று தெளிவாகிறது. அதாவது, பேய்கூட நம்பிக்கை அறிக்கை செய்கிறது. அல்லது நம்பிக்கை அறிக்கை செய்தாலும் ஒருவர் பேயாக இருக்க முடியும்.

இயேசு தன்னைப் பற்றிய அடையாளம் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம் என்பதால் பேயைக் கடிந்து கொள்கிறாரா அல்லது பேயின் அறிக்கை வெற்று அறிக்கை என்பதால் அதைக் கடிந்துகொள்கிறாரா என்பது தெரியவில்லை.

இந்த நிகழ்வை நம் வாழ்க்கைக்கான பாடம் என்ற அடிப்படையில் பார்த்தால் மூன்று விடயங்கள் புரிகின்றன:

(அ) நான் எவ்வளவு பெரிய உண்மையை அறிந்திருந்தாலும், நான் யார் என்பதைப் பொருத்தே அந்த உண்மைக்கு வலிமை இருக்கிறது. இயேசு கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்ற உண்மை பேய்க்குத் தெரிந்திருந்தது. ஆனால், அது பேய் என்பதால் அது சொன்ன உண்மைக்கு வலிமை இல்லை. ஏனெனில், 'என்ன அழகாகப் பேசுகிறது!' என்று பேயை யாரும் வியந்து பாராட்டவில்லை.

(ஆ) எனக்கு மிகப்பெரிய உண்மை தெரிந்திருந்தாலும், தேவையற்ற இடத்தில் அதை நான் பேசினால் நான் வெளியேற்றப்படுவேன். அல்லது அவமதிக்கப்படுவேன். மொத்தத்தில், நான் வாயை மூடக் கற்றுக்கொள்வது மிக அவசியம். பேய் தன் வாயை மூடியிருந்தால் அது ஒருவேளை தப்பித்திருக்கும்.

(இ) வார்த்தைக்கு அதிகாரம் உண்டு என்பதால், நான் வார்த்தையை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது. 'நான் பல நேரங்களில் என் வார்த்தையை நினைத்து வருந்தியிருக்கிறேனே தவிர, என் மௌனத்தை நினைத்து ஒருபோதும் வருந்தியதில்லை' என்கிறார் அறிஞர் ஒருவர். 

வாயை மூடுதல் ஒரு கலை.

அந்தக் கலையை நாமே கற்றுக்கொள்ளாத போது, வாழ்க்கை, நம் தலையில் குட்டு வைத்துக் கற்றுக்கொடுக்கிறது.

2 comments:

  1. பல சமயங்களில் பேசப்படும் விஷயங்களை விட,அதை யார் பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த வார்த்தைகளின் வலிமை கூடுகிறது அல்லது குறைகிறது. இந்த நிலையில் தான் பார்க்கிறோம் இன்றைய வாசகத்தின் இயேசுவையும்,தீய ஆவியையும். என் கூட நிற்கும் ஆட்களையும், என் வாயினின்று புறப்பட்டுவரும் சொற்களையும் வைத்தே நான் எப்படிப்பட்டவள் என்பதை இந்த சமூகத்திற்கு நான் உணர்த்துகிறேன்.கிராமங்களில் ஒரு பழமொழி... “கொட்டிய நெல்லை அள்ளி விடலாம்; ஆனால் கொட்டிய சொல்லை அள்ள முடியுமா?” என்று. “பேய்கூட நம்பிக்கை அறிக்கை செய்யலாம்;, நம்பிக்கை அறிக்கை செய்பவர்களும் கூடப் பேயாக இருக்கலாம்” தந்தையின் வரிகள் நிதர்சனம்.” வாயை மூடுதல் ஒரு கலை.” உண்மைதான்.இதைத் தெரிந்துகொண்டால் நாம் கொட்டிய வார்த்தைகளுக்காக நாம் நம்மையே நொந்துகொள்வதையும், வாழ்க்கை நம் தலையில் குட்டு வைத்துக் கற்றுக்கொடுப்பதையும் தவிர்க்கலாம். நாம் வாயைத் திறந்த நேரங்களுக்காக யாரும் வருந்தாமல் பார்த்துக்கொள்வோம் என்ற உண்மையை ஏந்திவரும் ஒரு பதிவு.தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete