ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு
I. எசாயா 56:1,6-7 II. உரோமையர் 11:13-15,29-32 III. மத்தேயு 15:21-28
அறிவு வெல்லும்!
மாரியோ புட்ஸோ எழுதிய மிக அழகிய புதினம் 'தெ காட்ஃபாதர்.' ஆங்கிலத்தில் மூன்று பகுதிகளாக இது திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. 'பத்ரோனே' என்ற இத்தாலிய பதத்தின் ஆங்கிலம்தான் 'காட்ஃபாதர்.' தமிழில், 'ஞானத்தந்தை'. சில ஊர்களில் 'தொட்டப்பா' என அழைக்கிறார்கள். அதாவது, திருமுழுக்கின்போதும், உறுதிப்பூசுதலின் போதும் குழந்தையின் தோளைத் தொடுகின்ற அப்பா. 'மனிதர்கள் மிகவும் கட்டுப்பாடற்றவர்கள். ஆகையால்தான், இவ்வுலகில் கடவுள் அவர்களை வளர்க்க, ஒரு தந்தையையும், ஒரு ஞானத்தந்தையையும் அனுப்புகிறார்' என்று இத்தாலி நாட்டில் வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. ஞானத்தந்தை-பிள்ளை உறவு மிகவும் மேன்மையானதாக இத்தாலி நாட்டில் போற்றப்படும். அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலியர்களின் ஒட்டுமொத்த, 'ஞானத்தந்தையாக' உருவெடுக்கும் 'டான் கொரேலெயோனே' என்னும் கதாநாயகனைக் கொண்ட புதினமே இது. இதில் எனக்குப் பிடித்த வரிகளில் ஒன்று, 'மனிதர்களை எப்போதும் அறிவுசார் முறையில் பேசிச் சமரசம் செய்ய முடியும்.' அல்லது 'அறிவுசார் முறையில் பேசி நாம் எதையும் சாதிக்கலாம்.' இவ்வார்த்தைகளை அவர் அடிக்கடிச் சொல்வார். இதில் அடங்கியிருக்கும் செய்தி என்னவென்றால், வெறும் உணர்ச்சிகளால் அல்லது உணர்வுக் கிளர்ச்சிகளால் செய்ய முடியாததை அல்லது சாதிக்க முடியாததை, அறிவுசார் முறையில் சாதிக்கலாம். என்மேல் ஒருவர் கோபம் கொண்டு என்னைப் பார்த்துக் கத்துகிறார் என வைத்துக்கொள்வோம். அவர், தன் அறிவைப் பயன்படுத்தாமல், என்மேல் கோபம் என்ற உணர்வைப் பயன்படுத்துகின்றார். இப்போது, நானும் அவருக்கு எதிராக, கோபம் அல்லது தற்காப்பு என்னும் உணர்வைப் பயன்படுத்தினால், அங்கே இரண்டு உணர்ச்சிகளின் வெடிப்பு நிகழுமே தவிர, எந்த நேர்முக மாற்றமும் இராது. ஆனால், நான் பதிலுக்கு அவர்மேல் கோபம் கொள்ளாமல், சற்று அமைதியாக இருந்து, 'இவர் ஏன் இதைச் சொன்னார்? இவரின் கோபத்திற்குக் காரணம் என்ன? இவ்வளவு கோபம் கொள்ளும் அளவுக்கு என் செயல் அவர்மேல் ஏற்படுத்திய தாக்கம் என்ன?' என நான் அறிவுசார் முறையில் யோசிக்கத் தொடங்கினால், நான் என் உணர்வுகளைக் என் கட்டுக்குள் வைப்பதோடு, அடுத்தவரின் கோபத்தையும் என்னால் சரி செய்ய முடியும்.
'அறிவுசார் முறையில் பேசி எதையும் சாதிக்கலாம்!' என இன்று நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஓர் இனியவர், பேய் பிடித்த இளவல் ஒருத்தியின் தாய்.
இயேசு, கானானியப் பெண்ணை அல்லது அவளுடைய மகளை, 'நாய்' அல்லது 'நாய்க்குட்டி' என அழைக்கும் பகுதியை (நற்செய்தி வாசகம், காண். மத் 15:21-28) வாசிக்கும்போதெல்லாம் என்னில் சில நெருடல்கள் எழுவது உண்டு:
1. அந்தப் பெண்ணை அல்லது அவளுடைய மகளை, இயேசு மட்டும், 'நாய்' என அழைக்கவில்லை. இயேசு ஒரு முறை அழைக்கிறார். நற்செய்தியாளர் அதைத் தன் எழுதுகோல் கொண்டு எழுதும்போது, அந்தப் பெண்ணை, 'நாய்' என அழைக்கிறார். நீங்களும், நானும் அந்தப் பாடத்தை வாசிக்கும் போதெல்லாம், அந்தப் பெண்ணை நம் மனத்தில் அல்லது சொற்களில், 'நாய்' என்றே அழைக்கின்றோம். அன்று தொடங்கி, இன்று வரை, பாவம் அந்தப் பெண்! தனக்கு முன்பின் தெரியாத பலரால், 'நாய்' என்றே அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.
2. இயேசு தன் சமகாலத்து யூத மேட்டிமை உள்ளம் கொண்டவராகவே வளர்கின்றார். இதற்கு எதிராகச் சிலர் சொல்வதுண்டு: அப்படியெல்லாம் இல்லை! இயேசு தான் எல்லாருக்குமானவர் என்று அவருக்குத் தெரியும். அந்தப் பெண்ணைச் சோதிப்பதற்காகத்தான் அவ்வாறு சொன்னார் என்று. அப்படி அவர் சோதிக்கிறார் என்றால், தன்னிடம் வந்த நூற்றுவர் தலைவனிடம் சொல்லியிருக்கலாமே! அவனும் புறவினத்தான் தானே! ஏன் அவனுடைய இல்லத்திற்கு, அவன் அழைக்காமலேயே செல்ல விரும்புகின்றார்? அதற்குப் பதிலாக, 'கண்ட நாய் வீட்டுக்கெல்லாம் வர முடியாது!' என்று சொல்லியிருக்கலாமே! இயேசுவுக்கு பயம் இருந்திருக்கும். ஏனெனில், அவன் நூற்றுவர் தலைவன். அப்படி இயேசு அவனிடம் சொல்லியிருந்தால், இயேசுவும் அவருடன் உடனிருந்தவர்களும் அடுத்த நாள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. இந்த அபலைப் பெண்ணிடம் மட்டும் இயேசு ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? பாவம் அந்தப் பெண்! புறவினத்துப் பெண்! பேய் பிடித்த குழந்தையின் தாய்!
3. இயேசு மிகக் குறுகிய மனப்பான்மை கொண்டவராக அல்லது சமயோசித புத்தி இல்லாதவராக இங்கே இருக்கிறார். அதாவது, விளைவு தெரியாமல் பேசுகிறார். இந்நற்செய்தி வாசகத்தின்படி இயேசு நடந்து செல்லும் பகுதி, தீர், சீதோன் பகுதி. முழுக்க முழுக்க புறவினத்தார் வாழும் பகுதி. அந்தப் பெண்ணை, 'நாய்' என்று அழைத்தவுடன், அவள் ஊருக்குள் சென்று, 'டேய்... எல்லாரும் வாங்கடா! நம்ம சாதிக்காரனுகள அல்லது நம்ம இனத்துக்காரனுகள, இங்க ஒருத்தன் 'நாய்னு' சொல்லிட்டான். இந்த ஊரை விட்டு அவனுக தாண்டுறதுக்குள்ள அவனுகள ஒரு வழி பண்ணிடுவோம்!' என்று ஊருக்குள் சென்று, ஆட்களைக் கூட்டி வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? இயேசுவும் அவருடைய சீடர்களும் தப்பி ஓடியிருப்பார்களா? அல்லது 'தெரியாம சொல்லிட்டோம்' என்று மன்னிப்பு கோரியிருப்பார்களா?
4. 'அவள் கத்திக்கொண்டு வருகிறாள்' - இப்படித்தான் அந்தப் பெண்ணை இயேசுவிடம் அறிமுகம் செய்கிறார்கள் சீடர்கள். சீடர்களும் யூத மேட்டிமை உணர்வு கொண்டவர்களாகவே இருக்கின்றனர். ஒருத்தியின் புலம்பல், கையறுநிலை, தேவையில் இருக்கும் நிலை இன்னொருவருக்கு வெறும், கத்தலாகவும், கூச்சலாகவும் கேட்கிறது. இயேசு தன் சீடர்களுக்குச் சரியாகப் பாடம் கற்பிக்கவில்லை என நினைக்கிறேன். அனைவரையும் மதிக்கவும், குறிப்பாக, தேவையில் இருப்பவர்களின் மனம் நோகாமல் பேசவும் கற்றுக்கொடுத்திருக்கலாம். அல்லது, தன் தலைவனைப் போலவே தாங்களும் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சீடர்கள் அப்படிக் கேட்டிருக்கலாம்.
5. இயேசு, உணர்ச்சிகளுக்கு அடிமையானவராக இருக்கிறார். தன்னிடம் உதவி கேட்டு வருகின்ற பெண்ணிடம், அவர் 'ஆம்' என்றால் ஆம் எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, தன்னுடைய இனவெறுப்பை அவளிடம் கொட்டுகின்றார். ஆக, இன்னொருவரைப் பார்த்தவுடன் என்னுடைய உணர்வுகள் மேலோங்கி வருகின்றது என்றால், அது சால்பு அல்ல.
6. நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று! அது எப்படி ஸாரே? நான் என் ஊருக்குச் செல்கிறேன். செல்லும் வழியில், அருள்மிகு ஆண்டாள் கோயில் இருக்கிறது. என் வாழ்வின் பிரச்சினைகளை ஆண்டாள் தீர்த்து வைப்பாள் என நினைத்து நான் உள்ளே சென்று அர்ச்சனை செய்யும் வரிசையில் நிற்கிறேன். அர்ச்சனை தட்டை ஏந்திக்கொண்டு அனைவருக்கும் திருநீறு கொடுத்துக்கொண்டே வருகிறார் அர்ச்சகர் என்னும் ஓர் அவாள். அவாள் என் கழுத்தில் உள்ள சிலுவையைப் பார்த்துவிட்டு என்னிடம், 'கிறிஸ்தவ ...களுக்கெல்லாம் நாங்கள் திருநீறு கொடுப்பதில்லை. இது வைணவர்களுக்கு மட்டும்தான்!' எனச் சொல்வதாக வைத்துக்கொள்வோம். உடனே நானும், 'ஐயோ! அப்படியன்று ஐயனே! நீங்கள் கொடுக்கும் திருநீற்றைத்தானே நாங்கள் திருநீற்றுப் புதன் (சாம்பல் புதன்) அன்று பூசிக்கொள்கிறோம்' என்று பதில் சொல்கிறேன். அவாளும், 'தம்பி! உன் நம்பிக்கை பெரிது! நீ விரும்பியபடியே நடக்கும்!' என்று சொல்லி அனுப்புகிறார். இந்த நிகழ்வு எத்துணை மடைமையானது இல்லையா? இது மடைமை என்றால் நற்செய்தி வாசகத்தில் நிகழ்வதும் மடைமை தானே!
இந்த நிகழ்வில், மேற்காணும் நெருடல்களோடு பார்க்கும்போது, நம் நாட்டில் உள்ள வந்தேறி பார்ப்பனர்களுக்கும், இயேசுவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இவர்கள், பிரம்மணின் உடலிலிருந்து படைக்கப்படாதவர்களைப் பஞ்சமர்கள் என்றும், காலிலிருந்து படைக்கப்பட்டவர்களை சூத்திரர்கள் என்றும் அழைக்கிறார்கள். இயேசுவும், தன் யூத இனத்தைச் சாராத மற்றவர்களை 'நாய்' அல்லது 'நாய்க் குட்டி' என்று அழைக்கின்றார். இந்த ஆறு நெருடல்களையும், ஒரே கேள்வியில் சொல்வதென்றால், நம்ம ஊரில் ஒரு சொலவடை உண்டு: 'உன்கிட்ட குச்சி இருக்கிறது என்பதற்காக, எல்லாரையும் நீ குரங்குன்னு நினைப்பியா?' - இப்படித்தான் இயேசுவிடம் கேட்கத் தோன்றுகிறது.
நிற்க.
ஒரு குழுவினர் தங்களையே பிறப்பின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும், நிறத்தின், மொழியின், இனத்தின், சாதியின், மதத்தின் அடிப்படையிலும் தங்களை மேலானவர்கள் என நினைத்து, அவர்கள் சாராதவர்களைக் கீழானவர்கள் என்னும் கருதுபோக்கு இன்று வரை தொடர்கிறது. அது இன்னும் தொடரும். ஏனெனில், ஒருவர் மற்றவரைப் பிரித்துப் பார்ப்பதையும், தன்னை மேலானதோடு ஒட்டிக்கொள்வதையுமே மனித மனம் விரும்புகிறது.
பெயரில்லாத இந்தப் பேதை நமக்கு மட்டுமல்ல, நம் ஆண்டவராகிய இயேசுவுக்கே பாடம் கற்பிக்கின்றாள்.
தன் மேட்டிமை உணர்வாலும், தன் இனத்தின் மேலுள்ள பற்றாலும் பார்வையற்றவராக நின்ற இயேசுவின் கண்களைத் திறக்கிறாள். இந்த நிகழ்வின் படி, இயேசுவுக்கும் அவருடைய சீடர்களுக்கும்தான், 'மேட்டிமை உணர்வு' என்னும் பேய் பிடித்திருப்பதுபோலத் தெரிகிறது. அந்தப் பேயை அவள் தனது நம்பிக்கையால் அல்ல, மாறாக, தனது அறிவால் விரட்டுகின்றாள். அறிவு வெல்லும் எனக் காட்டுகின்றாள் இந்தப் பெண்.
இயேசுவின் பதில்மொழி அந்தப் பெண்ணுக்கு மூன்று நிலைகளில் இருக்கிறது:
முதலில், மௌனம் காக்கின்றார்.
இரண்டாவதாக, தன் பணி தன் இனத்து மக்களுக்கு மட்டுமே என வரையறுக்கின்றார்.
மூன்றாவதாக, அப்பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டி, அவள் விரும்பியவாறே நடக்கும் எனச் சொல்லி அனுப்பிவிடுகின்றார். அந்நேரமே பிணி நீங்குவதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.
இயேசு கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறார். தூரம், பக்கம், உடனிருப்பு என நெருங்கி வருகின்றார்.
அந்தப் பெண், இயேசுவைப் போல வளரத் தேவையில்லை. அவள் ஒரே இடத்தில் நிற்கிறாள். அவள் கடவுள்போல. அவள் என்றும் ஒன்றுபோலவே இருப்பாள். அவள் மாறவில்லை. அவள் மாறத்தேவையில்லை.
முதலில், இவர் 'தாவீதின் மகன்' என இயேசுவை அறிவுப்பூர்வமாக ஏற்று அறிக்கையிடுகின்றாள்.
இரண்டாவதாக, சீடர்கள் கடிந்துகொண்டபோது, பின்வாங்காமல், அல்லது அவர்களோடு கோபம் கொள்ளாமல், தன் கத்தலில் உறுதியாக இருக்கின்றாள். அது ஓர் அறிவுப்பூர்வமான மனவுறுதி.
மூன்றாவதாக, 'மேசையும் தரையும் வேறு, பிள்ளையும் நாயும் வேறு, ஆனால் மேலிருக்கும் ரொட்டியும் கீழிருக்கும் ரொட்டியும் ஒன்று' என்று அறிவுப்பூர்வமாக விடையளிக்கின்றாள்.
அறிவால் அழைத்து, அறிவால் நிலைத்து நின்று, அறிவால் பதிலிறுப்பு செய்து தான் விரும்பியதைப் பெற்றுக்கொள்கின்றாள் பெண்.
இந்த நிகழ்வில் நான் கற்கும் பாடங்கள் எவை?
அ. அறிவு வெல்லும்! இன்றைய கொரோனா காலத்தில், 'எங்களைப் பிடித்திருக்கும் பேய் நீங்கட்டும்!' என்று கடவுளிடம் மேலோட்டமான நம்பிக்கை கொண்டிருப்பதற்குப் பதிலாக, 'எம்மில் இருப்பது உம் சாயல்தானே! நாங்கள் அழிந்தால் நீருமல்லவா எங்களோடு சேர்ந்து அழிகின்றீர்! எங்களைக் காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை. உம் சாயலையாவது நீர் காப்பாற்றிக்கொள்ளலாமே!' என்று அறிவுசார் சமசரம் கடவுளோடு அவசியம். அறிவுசார் விதத்தில், நாம் அவரின் சாயலைக் கறைப்படுத்திய நிலையை எண்ணிப் பார்த்து, அறிவுசார் விதத்தில் அதைத் தூய்மையாக்குதல் நலம்.
ஆ. தேடலில் தெளிவு! அந்தப் பெண்ணின் தேடல் தெளிவாக இருந்தது. தேவை தெளிவாக இருந்தால்தான் தேடல் தெளிவாக இருக்க முடியும். தேடல் தெளிவாக இருந்தால் அதை அடைவது நிச்சயம் எனக் கற்பிக்கிறாள் அந்தப் பெண். தன் குழந்தைக்கு நலம் கிடைக்க வேண்டும் என்பது அவளுடைய தேவையாக இருந்தது. அந்தத் தேவையைத் தன் தேடலாக மாற்றிக்கொள்கின்றாள். அந்தத் தேடல் நிறைவேறும் வரை மனவுறுதியோடு தொடர்ந்து போராடுகிறாள். இன்று என் மனவுறுதி குறைவதற்குக் காரணம் என் தேவையும், தேடலும் தெளிவாக இல்லாமல் இருப்பதுதான்.
இ. உணர்வுசார் கிளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்தல்! இன்று நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நம் உணர்வுகளைத் தூண்டி எழுப்பி, நம் சிந்தனையை, அறிவை மழுங்கடிக்கின்றன. ராமர் கோயில், கந்த சஷ்டி கவசம், கறுப்பர் கூட்டம் போன்றவை நம் மத உணர்வையும், இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதம்-இந்தித் திணிப்பு போன்றவை நம் மொழி உணர்வையும், கார்கில், பாகிஸ்தான், சீனா, சுதந்திர தினம் போன்றவை நம் தேசிய உணர்வையும் தூண்டிவிடுகின்றன. கொஞ்சம் அமர்ந்து, அறிவுக்கு உட்படுத்தினால், எந்த மதமும் மேலானதும் அல்ல, எந்த மொழியும் உயர்ந்ததும் அல்ல, எந்த நாடும் சிறப்பானதும் அல்ல. எல்லாம் மதங்கள். எல்லாம் மொழிகள். எல்லாரும் மனிதர்கள். அவ்வளவுதான்! வெறும் உணர்ச்சிகளையும், உணர்வுக் கிளர்ச்சிகளையும் வைத்து கிறிஸ்தவமும் வரலாற்றில் பல தவறுகளைச் செய்திருக்கின்றது. இன்றுவரை நம் ஆழ்மனத்தில் இருக்கும் கிறிஸ்தவ மேட்டிமை உணர்வு மற்ற கடவுளர்களை, 'பேய்கள்' என அழைக்கிறது. கிறிஸ்தவத்திற்குள் உள்ள சாதியக் கட்டமைப்பில், நம் சாதி தரும் மேட்டிமை உணர்வு, ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்குபெறுபவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறது.
என் விருப்பம் எல்லாம்... அந்தப் பெண், அந்தக் கானானியப் பெண், மீண்டும் நம் நடுவில் வந்து, கத்த வேண்டும் என்பதே!
அவள் தன் கதறலையே இறைவனுக்கு உகந்த புகழ்ச்சியாக மாற்றினாள் (காண். திபா 67). இயேசுவின் ஓட்டத்தை நிறுத்தி, அவரை உலுக்கிய அவள், இன்று நம்மையும் நிறுத்தி உலுக்கட்டும்!