Sunday, June 9, 2019

இரக்கம் நிறைந்த கடவுள்

இன்றைய (10 ஜூன் 2019) முதல் வாசகம் (2 கொரி 1:1-7)

இரக்கம் நிறைந்த கடவுள்

இன்றிலிருந்து சில நாள்களுக்கு நாம் முதல் வாசகமாக கொரிந்தியருக்கு பவுல் எழுதிய இரண்டாம் திருமடலிலிருந்து வாசிக்கின்றோம்.

இந்த மடல் பவுலின் இக்கட்டான காலகட்டத்தில் எழுதப்பட்டது. மக்கள் தன்னுடைய பணியை ஏற்றுக்கொள்ளாத நிலை, வெறுமை, தனிமை, சோர்வு, விரக்தி, மக்கள் பவுலுடைய நம்பிக்கைiயுயும், நாணயத்தையும் கேள்விக்குட்படுத்திய நிலை என்னும் பின்புலத்தில், யாருக்கெல்லாம் இவ்வுணர்வுகள் அன்றாட வாழ்க்கை அனுபவங்களாக இருக்கின்றனவோ, இவர்கள் எல்லாருக்கும் இந்த மடலின் வார்த்தைகள் மிக அழகாகப் பொருந்தும்.

எடுத்துக்காட்டாக, பங்குத் தளத்தில் இருக்கின்ற அருள்பணியாளர் ஒருவருக்கு எதிராக மக்கள் முணுமுணுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர் பின்வரும் பகுதியில் தனக்கான ஆறுதலைத் தேடலாம்:

'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக்கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்' (2 கொரி 6:8-10)

பவுலால் எப்படி இப்படி எழுத முடிகிறது?

இதற்குக் காரணம் கடவுளைப் பற்றிய அவருடைய புரிதல்தான். நாம் கடவுளை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் மற்றவர்களையும் மற்றவற்றையும் பார்க்கிறோம். கடவுளை நாம் தண்டிப்பவராக, நீதித்தீர்ப்பளிப்பவராகப் பார்த்தால், அடுத்தவரையும் நாம் தீர்ப்பிடுவோம், தண்டிப்போம்.

பவுல் கடவுளை எப்படி பார்க்கிறார்?

'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று. அவரைப் போற்றுவோம்!'

கத்தோலிக்க அடக்கச் சடங்கில் இறந்தவர் உடலின் முன் நின்று அருள்பணியாளர் சொல்லும் முதல் வார்த்தைகளும் இவையே. ஆக, நம்முடைய உடல் இறைவனின் இரக்கத்தின்முன் ஒப்படைக்கப்படுகிறதே தவிர, அவருடைய தீர்ப்பின்முன் அல்ல.

ஆக, கடவுளை இரக்கம் நிறைந்தவராகவும், அவரை ஆறுதல் அளிப்பவராகவும் நாம் பார்த்தால், இன்று எல்லாரையும் இரக்கக் கண்களோடு பார்க்க ஆரம்பித்து அனைவருக்கும் ஆறுதல் மொழி பகர்வோம்.

பவுலோடு நாம் செய்யும் இறைவார்த்தைப் பயணத்தில் பவுலின் புரிதல் நம் புரிதலாகட்டும். இந்த உலகில் இன்று நமக்குத் தேவை அறிவும், அழகும், பணமும், பதவியும், படிப்பும் அல்ல. நிறைய இரக்கமும், நிறைய ஆறுதலும்தான் தேவை.

2 comments:

  1. வெறுமை,விரக்தி,தனிமை,சோர்வு...இவை அருட்பணியாளர்களை மட்டுமல்ல.... யாரை வேண்டுமானாலும் சிதறடிக்கலாம்.அந்நேரங்களில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையும், இரக்கத்திற்கும்,ஆறுதலுக்கும் ஊற்றுமான அவரை ஏறெடுத்துப்பார்ப்பது ஒன்றே நாம் ஆறுதல் தேடும் ஒரே வழி. “பவுலோடு நாம் செய்யும் இறைவார்த்தைப் பயணத்தில் பவுலின் புரிதல் நம் புரிதலுமாகட்டும்.” எனும் தந்தையின் வரிகளுக்கு “ அப்படியே ஆகட்டும்” என்பது நம் பதிலாகட்டும். எந்த விதத்திலும் நமக்குத் துணை நிற்காத அறிவு,அழகு,பணம்,பதவி,படிப்பு .....இவற்றைத் தேடி ஓடுவதை விட, இரக்கத்தையும்,ஆறுதலையும் தேவையிலிருப்போருக்கு அள்ளி வழங்குவோம்.” இரக்கமுடையோர் பேறுபெற்றோர்.ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்”... எனும் மலைப்பொழிவின் வரிகள் நமக்கு என்றும் துணை நிற்கும். அள்ளித்தர வேண்டாம்; ஏன் கிள்ளிக்கூடத் தரவேண்டாம்.ஆனால் மேலேயுள்ள படத்திலிருப்பது போல் கையறுநிலையிலிருப்போருக்கு நம் கரங்களை நீட்டுவோம்.அழகானதொரு பதிவின் சொந்தக்காரத்தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!!!

    ReplyDelete