Thursday, June 13, 2019

மண்பாண்டம்

இன்றைய (14 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:27-32)

மண்பாண்டம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, தன் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக, 'விபச்சாரம் செய்யாதே' என்ற பழைய கட்டளையைக் குறிப்பிட்டு, 'இச்சையுடன் நோக்குவதைத் தவிர்' என்று விபச்சார எண்ணத்தை வேரோடு அழிக்க அழைக்கின்றார். மேலும், மணவிலக்கு பற்றியும் பேசுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 4:7-15) அழகான உருவகம் ஒன்றை வாசிக்கின்றோம். தன்னுடைய திருப்பணியைப் பற்றி எழுதுகின்ற பவுல் எப்படி எழுதுகின்றார்?

'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்றே நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை. அது கடவுளுக்கே உரியது.'

'மண்பாண்டம்' என்றவுடன் நாம் பழைய காலத்தில் சோறு சமைக்கும் பானை என்றோ, தண்ணீர் சேமித்து வைக்கும் பானை என்றோ, அரிசி சேமித்து வைக்கும் குதிர் என்றோ எண்ண வேண்டாம். பவுலின் காலத்தில் மண்பாண்டம் மனித கழிவுகளைச் சேகரிக்கப் பயன்பட்டது. கழிவறைகள் பொதுவாக வழக்கத்தில் இல்லாத அக்காலத்தில் மனிதக் கழிவுகள் மண்பாண்டங்களில் சேகரிக்கப்பட்டு, அவை அடிமைகளால் சுத்தம் செய்யப்படுத்தப்பட்டன. இப்படிப்பட்ட மண்பாண்டத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளைப் போட்டு வைத்தால் எப்படி இருக்கும்? இதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதே நேரத்தில் தங்க நகைகள் உள்ள மண்பாண்டத்தை மற்றவர்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள். மதிப்புக்குரியதொன்றாகக் கருதுவார்கள். மண்பாண்டத்திற்கு மதிப்பு எப்படி வந்தது? அதன் உள்ளிருக்கும் புதையலை வைத்துத்தானே.

ஆக, பவுல், ஒரு பக்கம் தன்னையே தகுதியற்ற மண்பாண்டம் என்று சொல்கிற வேளையில், மற்றொரு பக்கம் தன்னுடைய மதிப்பு தனக்குள் இருக்கும் கடவுளின் வல்லமையால் வருகிறது என்பதை அறிக்கையிடுகின்றார்.

இதை அப்படியே கொஞ்சம் நற்செய்தியோடு பொருத்திப் பார்ப்போம்.

விபச்சாரம் அல்லது இச்சையான பார்வை ஏன் வருகிறது?

ஒருவர் தன் துணையை விட்டுவிட்டு ஏன் மற்றொரு இணையை நாட வேண்டும்?

மனிதர்கள் தங்களுடைய இயல்பிலேயே பலரோடு உடலுறவு கொள்ள விரும்புபவர்கள் என உளவியலும், சமூகவியலும் சொன்னாலும், சமூக மற்றும் சமய வரையறைகள் இதற்குத் தடை விதிக்கின்றன. திருமணம் என்ற நிறுவனத்திற்கு இதை ஒரு பெரிய தடைக்கல்லாகப் பார்க்கின்றன.

ஒருவர் தன் துணையை விட்டுவிட்டு மற்றொரு இணையை நாடக் காரணம் என்னவென்றால், அவர் தன்னுடைய துணையை வெறும் மண்பாண்டமாகப் பார்ப்பதுதான்.

திருமணத்தின் தொடக்கத்தில் தங்கம் மட்டுமே கண்களுக்குத் தெரிய, காலம் செல்லச் செல்ல மண்பாண்டம் தெரிய ஆரம்பிக்கிறது. அதில் உள்ள கீறல்கள், அழுக்கு, சொரசொரப்பு தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது நாம் மற்றொரு 'தங்கத்தை' நாட ஆரம்பிக்கிறோம்.

மற்றொரு பக்கம், இச்சையோடு பார்ப்பவர் அந்த மண்பாண்டத்தை உடைத்து தங்கத்தை அள்ளிவிட நினைக்கிறார்.

விபச்சாரம் செய்பவர் தன் மனைவியின் 'தங்கத்தை' பார்க்காமல் 'மண்பாண்டத்தைப்' பார்க்கிறார். இச்சையோடு பார்ப்பவர் 'மண்பாண்டத்தை' உடைத்து 'தங்கத்தை' ('அங்கத்தை') அள்ளிக்கொள்ள நினைக்கிறார். இரண்டுமே தவறு என்கிறார் இயேசு.

இன்றைய நாள் வாசகங்கள் இரண்டு செய்திகளை வழங்குகின்றன:

அ. நாம் ஒவ்வொருவரும் கடவுளின் வல்லமையை, சாயலைத் தாங்கியிருக்கும் மண்பாண்டங்கள். நம்மில் தங்கமும் உண்டு, களிமண்ணும் உண்டு. இதை அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஆ. நம் உறவு நிலைகளில் - துறவு மற்றும் திருமண உறவில் - மற்றவரின் தங்கத்தை மட்டுமே பார்ப்பது.

1 comment:

  1. விபச்சாரம்,மண்பாண்டம்,தங்கம்,அங்கம்...... ஒரே வார்த்தைகளின் படையெடுப்பு. உரக்கப் பேச நாம் சங்கடப்படும் பல விஷயங்களைத் தனக்கே உரித்தான தன் அழைத்தலின் பின்னனியில் அதிகாரத் தோரணையோடு “இவை இப்படித்தான்” என்று அச்சாணி கொண்டு ஆணை இடுகிறார் தந்தை. நமக்கும் புரிகிறது....1.இறைவனின் வல்லமையையும்,சாயலையும் தாங்கியுள்ள களிமண்ணும்,தங்கமும் சேர்ந்த கலவையான என்னை நான் அப்படியே ஏற்றுக்கொள்வது.2. நம் உறவு நிலைகளில் மற்றவரின் தங்கத்தை மட்டுமே பார்ப்பது. ஏற்றுக்கொள்வோம்.....,நம்மையும்,நம் உறவுகளையும் அவற்றின் சாயல் குலையாமல்....குறையாமல்.இன்றையக் கால சூழலுக்கேற்றதொரு பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete