Monday, June 3, 2019

என் முகத்தை

இன்றைய (4 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 20:17-27)

என் முகத்தை

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் உரைகளில் பவுலின் எபேசு உரை (காண். திப 20:17-38) மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஏனெனில், திருஅவையின் கட்டமைப்பு, மூப்பர்களின் பணி, இறைவார்த்தைப் பணியின் முக்கியத்துவம் என நிறையக் கருத்துக்கள் இங்கே இடம் பெறுகின்றன. இவ்வுரையின் முதல் பகுதியை இன்றைய முதல் வாசகத்திலும் தொடர்ச்சியை நாளைய முதல் வாசகத்திலும் வாசிக்கிறோம்.

சூழல் இதுதான். எபேசில் பணி புரிகின்ற பவுல் பணியை முடித்துவிட்டு மிலேத்துவிலிருந்து புறப்படுகின்றார். புறப்படுமுன் ஆளனுப்பி எபேசின் மூப்பர்களை வரவழைக்கின்றார். வந்தவர்களிடம் பிரியாவிடை உரை ஆற்றுகின்றார்.

நேற்றும் இன்றும் சாலைகளில் நிறைய இளவல்கள் விடுதிக்குச் செல்வதற்காக பெட்டியும், பாயும், வாளியும், கப்புமாய் நிற்பதைக் காண முடிந்தது. புத்தகப் பை, ஆடைகள், நோட்டுப் புத்தகங்கள் என தங்கள் குழந்தைகளுக்காக பாரம் சுமக்கின்ற அப்பாக்கள் மற்றும் அம்மாக்களின் கண்களில்தாம் எத்தனை கனவுகள்? தன்னுடைய மகனும் மகளும் தான் தங்களுடைய வாழ்வின் கதாநாயகர்கள் என்று கொண்டாடுகின்ற அவர்கள், தங்களுடைய எளிமை, வெகுளித்தனம், எதையும் நம்பும் குணம் என்று தங்கள் கிராமத்துக் குணங்களோடு நகரத்தில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுகிறார்கள்.

விடுதி வளாகங்கள் இன்று நிறைய கண்ணீரைப் பார்த்திருக்கும். 'பத்திரமா போய்ட்டு வாங்கம்மா, வாங்கப்பா!' என்று வெகு சில குழந்தைகளே பெற்றோர்களே வழியனுப்பியிருப்பார்கள். சில குழந்தைகள், 'இன்னும் கொஞ்ச நேரம் இருங்க!' என்றிருப்பார்கள். 'அந்த அவளைப் பாரு! அவளுக்கு நமக்கு பக்கத்து ஊருதான்!' என்று நமக்குத் தெரியாத ஒரு குழந்தையின், விடுதிக் காப்பாளரின், அருள்சகோதரியின் கையைப் பிடித்து ஒப்படைத்திருப்பார்கள் பெற்றோர்கள். 'நல்லா படி! அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன்!' என்று சொல்லி பேருந்துக்குக் காசு போக, மற்ற எல்லாவற்றையும் மகன்-மகள் கையில் திணித்துவிட்டு கண்கள் சுரந்து, நா வறண்டு பேருந்து ஏறுவார்கள்.

ஏறக்குறைய பவுலின் நிலையில் இப்பெற்றோர்களின் நிலைபோலத்தான் இருக்கின்றது.

தான் விட்டுச் செல்லும் குட்டித் திருச்சபை எப்படி வளருமோ? என்ற ஏக்கமும் கவலையும் ஒரு புறம், தான் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் மறுபுறம். 'இன்னும் கொஞ்ச நேரம் இருக்கவா? அல்லது போகவா?' என்ற இழுபறி நிலையிலிருந்து மாறி, 'இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை' என்று புட்டு உடைக்கின்றார் பவுல்.

பவுல் எந்த அளவிற்குத் தன்னை அறிந்திருந்தார் என்பதையும், எந்த அளவிற்கு தூய ஆவியாரின் வழிகாட்டுதலைத் தன் வாழ்வில் உணர்ந்திருந்தார் என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது. ஆக, 'என் வாழ்க்கை இப்படித்தான் போகிறது. அடுத்து இது நடக்கும். அதற்கடுத்து இது நடக்கும்' என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் செதுக்கி வாழ்கிறார் பவுல். மேலும், அடுத்த நிலைக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்.

வாழ்க்கையை ஒரு ஓட்டமாகப் பார்க்கிறார் பவுல். ஓட்டத்தில் ஓடத் தொடங்கியவர் இலக்கை அடையும் வரை ஓட வேண்டும் என்பது கட்டாயம். பாதியில் ஓட்டத்தை நிறுத்துவது ஓடுபவருக்கு இழுக்கு.

இன்று நான் என் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறேன்?

மார்க்கஸ் அவுரேலியு வாழ்க்கையை 'பணம்,' 'ஓடுகின்ற ஆறு' என்று உருவகப்படுத்துகிறார். ஓடுகின்ற ஆற்றில் ஒருமுறைதான் நாம் காலை வைக்க முடியும். அடுத்த முறை வைக்கும்போது அத்தண்ணீர் கடந்துவிடும். ஆக, வாழ்வில் எதையும் தள்ளிப்போடாமல் நாம் சந்திக்கும் நபர், செய்யும் பணி, மேற்கொள்ளும் பயணம் என அனைத்திலும் முழுமையாக ஈடுபட்டால் நலம்.

ஆக, 'இனி என் முகத்தை யாரும் பார்க்கப்போவதில்லை' என்பது எதிர்மறையான சொல்லாடல் அல்ல. மாறாக, வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்பும் ஒருவரின் நேர்முகமான வாக்குறுதி.

3 comments:

  1. தன் குழந்தையின் எதிர்காலக்கனவொன்றையே கண்களிலும்,நெஞ்சினிலும் சுமந்து நிற்கும் எளிமைமிகு,வெகுளித்தனமான, எந்த செயற்கை சாயப்பூச்சுமற்ற பெற்றோரின் எண்ண ஓட்டங்களை தனக்கே சொந்தமான நடையில் தந்தை விவரித்திற்கும் பாங்கும்,அதைத்தான் விட்டுப்பிரியப் போகும் குட்டித்திருச்சபையைப் பற்றிய ஏக்கங்களுடன் நிற்கும் பவுலின் கலக்கநிலையோடு தந்தை ஒப்பிட்டுள்ள விதமும் வாழ்க்கையின் நிஜங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன.”பிரிவு” என்பது யாருக்குமே ‘வலி’ தரும் விஷயமே! ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் செதுக்கி வாழும் பவுலடியார் போன்றவர்களுக்கு பிரிவு கூட வாழ்க்கையின் அடுத்த நிலையே!(step) என்ற புரிதலைத் தருகிறது இன்றையப் பதிவு.”இனி என் முகத்தை யாரும் பார்க்கப்போவதில்லை” எனும் சொல்லாடலை ஒரு ‘நேர்முகமான வாக்குறுதியாக’ எடுத்துக்கொள்ள நிறைய நெஞ்சுரம் வேண்டும்.
    வாழ்வில் நாம் எதையும் தள்ளிப்போடாமல் நாம் மேற்கொள்ளும் அனைத்திலும் முழுமையைக் காட்ட வேண்டும் என சொல்ல வரும் தந்தை “ ஓடுகின்ற ஆற்றில் ஒருமுறை தான் நாம் காலை வைக்க முடியும்; ஏனெனில், அடுத்த முறை வைக்கும்போது அத்தண்ணீர் கடந்து விடும்.” எனும் மேற்கோளை முன் வைக்கிறார். வகுப்பறை சொல்லித்தராத பல வாழ்வியல் பாடங்களை நமக்கு முன் “வாழ்ந்து சென்றவர்கள்” சொல்லித்தந்திருக்கிறார்கள் எனும் விஷயத்தை நமக்கு அடிக்கடி தன் எழுத்தால் உணர்த்தும் தந்தையை நல்ல உடல்,உள்ள சுகம் தந்து இறைவன் பாது காப்பாராக!

    ReplyDelete
  2. பாராட்டுக்கள். மிகவும் அருமையான பிரியாவிடை நிகழ்ச்சிகள். .. பழைய நினைவுகள் வந்து போனது. ஏன் இன்றும் கூட அதே 'பிரியாவிடை' தான் தொடர்கிறது. தூய ஆவியாரின் வழிகாட்டுதலைத் தன் வாழ்வில் உணர்ந்திருந்த புனித பவுலை போல இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடுவோம் ... நன்றி தம்பி.

    ReplyDelete