Monday, June 17, 2019

தர்மசங்கடம்

இன்றைய (18 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:43-48)

தர்மசங்கடம்

தமிழில் உள்ள 'தர்மசங்கடம்' என்ற சொல்லாடலை நாம் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். இந்த வார்த்தையின் வேர் 'தர்மசங்கட்' என்ற சமஸ்கிருதச் சொல். இரண்டு நன்மைகளுக்கு இடையே அல்லது இரண்டு தீமைகளுக்கு இடையே நாம் சிக்கிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலையே 'தர்மசங்கடம்.'

எடுத்துக்காட்டாக, நம் வீட்டில் குழந்தைக்கு பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக நாம் பத்தாயிரம் ரூபாய் எடுத்து வைக்கிறோம். நாளைதான் பள்ளிக்கட்டணம் கட்ட இறுதி நாள். 'காலையில் உன் பள்ளிக்கட்டணத்திற்கு பணம் தருகிறேன்' என்று வாக்குறுதி கொடுத்து அழுதுகொண்டிருந்த குழந்தையின் அழுகையை இப்போதான் நிறுத்தியுள்ளோம். இந்த நேரத்தில், நம் கூடப்பிறந்த தம்பிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தி வருகிறது. செய்தியைச் சொன்னவர், 'உடனே ஒரு பத்தாயிரம் எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வாங்க!' என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிடுகிறார். பள்ளிக்கட்டணத்திற்காக பணத்தை ஒதுக்கினால் தம்பிக்கு ஆபத்து. தம்பிக்காக பணத்தை ஒதுக்கினால் குழந்தையின் அழுகைக்குக் காரணமாகி, நம் வாக்குறுதியையும் நாம் உடைத்தவர்களாகிவிடுவோம். இதுதான் தர்மசங்கடம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 8:1-9), கொரிந்து நகரத் திருச்சபைக்கு, 'கொடுத்தல் என்ற அறநெறியைக்' கற்றுத் தருகின்றார். எருசலேம் திருச்சபையில் மக்கள் துன்புறுகிறார்கள். அவர்களுக்காக பல திருச்சபைகளில் பணம் சேகரிக்கிறார் பவுல். கொரிந்து நகரத் திருச்சபை பணக்காரத் திருச்சபை. பணம் இருந்தால் போதுமா? மனம் வேண்டுமே! அந்த மனத்தைத் தூண்டி எழுப்புவதற்காக, 'மாசிதோனியத் திருச்சபையை' எடுத்துக்காட்டாகக் காட்டி, 'அவர்கள் கொடுத்தார்கள். நீங்களும் கொடுங்கள் ... நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் அனைத்தும் கொண்டிருக்கிறீர்கள். அதுபோல அறப்பணியும் செய்யுங்கள்' என அறிவுறுத்துகிறார் பவுல். கொடுத்தலுக்கு உதாரணமாக இயேசுவின் மனுவுருவாக்கத்தை முன்வைக்கிறார்.

பிறருக்குக் கொடுக்கும் உணர்வை கடவுளின் அருள் என அழைக்கிறார் பவுல்.

'எனக்கு தேவை இருக்கிறது. பிறருக்கும் தேவை இருக்கிறது. நான் என்ன செய்வது?' என்ற தர்மசங்கடத்தில் இருக்கிறது கொரிந்து சபை.

தர்மசங்கடத்தில் நாம் எந்த முடிவு எடுத்தாலும் நாம் சரியாகத்தான் இருப்போம். தர்மசங்கடமான சூழலில் நல்லது-கெட்டது என்ற கொள்கை வேலை செய்யாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'அன்பு செலுத்துபவர்களிடம் மட்டும் அன்பு செலுத்துவதா?' அல்லது 'எல்லாருக்கும் அன்பு செலுத்துவதா?' என்ற தர்மசங்கடம் பற்றிப் பேசுகின்றார் இயேசு. இங்கே, விண்ணகத் தந்தையை மாதிரியாக வைக்கின்றார்.

பிறருக்குக் கொடுப்பதில் உள்ள தர்மசங்கடம் இதுதான்: 'நான் இதைக் கொடுக்கவா?' 'எனக்குத் தேவை வந்தால் என்ன செய்வது?' 'என் தேவைக்கு யார் வருவார்?'

பிறரிடம் வாங்குவதிலும் தர்மசங்கடம் இருக்கிறது: 'இவரிடம் நான் இதை வாங்கிவிட்டால் இவருக்கு நான் நன்றிக்கடன்பட வேண்டும். ஆகவே, வேண்டாம்.' 'இவர் அன்பின் மிகுதியால்தானே கொடுக்கிறார். ஆகவே, வேண்டும்.'

தர்மசங்கடமான சூழல்கள் எடுக்கும் எந்த முடிவும் சரியே. எந்த முடிவும் சூழல் சார்ந்ததே.
இந்த இடத்தில் கடவுளை மாதிரியாக வைத்துச் செயல்படுவது ஒரு தொடர் பயிற்சியே.


1 comment:

  1. நாம் நல்லதென்று நினைக்கும் ஒரு விஷயத்தை செய்வதா வேண்டாமா?... இப்படிப்பட்ட வேளைகளில் நாம் படும் தர்மசங்கடம் ஒரு புறமிருக்க, மேலும் நம்மைக்குழப்புகிறார் தந்தை. ‘அன்பு செலுத்துபவரிடம் மட்டும் அன்பு செலுத்துவதா?’ இல்லை ‘ எல்லோருக்கும் அன்பு செலுத்துவதா?’..... இதில் என்ன தர்மசங்கடம் என்று எனக்குத்தெரியவில்லை. எல்லோரையும் தான் அன்பு செய்தல் வேண்டுமென்று எல்லோருக்கும் தெரியுமே! தர்மசங்கடம் என்ற ஒரு சூழல் வருகையில், அந்த வட்டத்திற்கு வெளியே என்னை வைத்துப் பிறரை மையப்படுத்தி எடுக்கும் எந்த முடிவும் நல்ல முடிவே! “தர்ம சங்கடத்தில் நாம் எந்த முடிவு எடுத்தாலும் நாம் சரியாகத்தான் இருப்போம்.”... தந்தையே ஒத்துக்கொள்கிறார்.ஆனால் “கொடுத்தல்” என வருகையில் அடுத்தவருக்குத் தேவை எனும் உணர்வு வரும்போதே நாம் கையில்இருப்பதை, நம்மால் இயன்றதைக் கொடுத்துவிட வேண்டும்.இன்னும் கொஞ்சம் நான் சேர்த்துக்கொண்ட பிறகு கொடுக்கலாம் என்ற நினைப்பு...” ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?” என்ற பழமொழிக்கு இடம் கொடுத்து விடும். “:பிறருக்குக் கொடுக்கும் உணர்வே கடவுளின் அருள்” எனில் அந்த (அருள்) உணர்வு என்னிடம் ஏற்படுகையில் அதை செயல்படுத்துதல் தானே விவேகம்! இந்தக் “கொடுத்தலில்” ஏன் பணம்,காசை மட்டுமே சேர்க்க வேண்டும்? நெருக்கடியில் உள்ள எவருக்கும் நாம் தரும் “புன்முறுவல்” கூடக் கொடுத்தலே!.... எந்த இடமாக இருப்பினும் இறைவனை மாதிரியாக வைத்து செயல்படுவது ஒரு தொடர் பயிற்சியே!.... ஒத்துக்கொள்வாம் தந்தையுடன் இணைந்து.
    அழகாகச் சொல்கிறது ஆங்கிலக் குறிப்பு...”இரு தீமைகளில் எதையும் தீண்டாதே! இரு நன்மைகளில் இரண்டையுமே பற்றிக்கொள்.”.. தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete