Thursday, June 27, 2019

இயேசுவின் திருஇருதயம்

இன்றைய (28 ஜூன் 2019) திருநாள்

இயேசுவின் திருஇருதயம்

இன்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருஇருதயப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். ஏறக்குறைய 11ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் இந்த திருவிழா கொண்டாடப்பட்டதாக கிறிஸ்தவ வழிபாட்டு வரலாறு சொன்னாலும், இயேசுவின் அன்பைப் பற்றிய புரிதல்கள் ஒரிஜன், அம்புரோஸ், ஜெரோம், அகுஸ்தீன், மற்றும் ஐரேனியு அவர்களின் காலங்களிலேயே இருந்திருக்கின்றன.

இயேசுவின் திருஇருதயத்தைப் பற்றி நற்செய்தி நூல்களில் இரண்டு மறைமுகக் குறிப்புக்கள் உள்ளன:

'நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.' (மத் 11:29)

'படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வழிந்தோடின.' (யோவா 19:34)

மேற்காணும் இரண்டு குறிப்புக்களில் இரண்டாம் குறிப்பு இயேசுவின் இருதயத்தை நேரடிப்பொருளிலும், முதல் குறிப்பு உருவகப் பொருளிலும் சொல்கின்றது. இரண்டாம் குறிப்பிலிருந்து தொடங்குவோம்.

'விலாவைக் குத்தினார்' என்பதிலிருந்து 'இதயத்தைக் குத்தினார்' என்று எப்படிச் சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். பதில் எளிது. படைவீரர்கள் வழக்கமாக வலது கை பழக்கமுள்ளவர்கள். வலது கை பழக்கமுள்ளவர் மேல் நோக்கி ஒரு பொருளைக் குத்த அல்லது தாக்க வேண்டுமென்றால் அந்தப் பொருளின் இடப்பக்கம் தான் நிற்க வேண்டும். இதை நம் வீட்டில் ஒட்டடை அடிக்கும்போதே நாம் செய்யலாம். வலக்கை பழக்கம் உள்ளவர்கள் வலதிருந்து இடது என்று குச்சியைப் பிடிப்பர். இடக்கை பழக்கம் உள்ளவர்கள் இடதிலிருந்து வலுது என்று பிடிப்பர்.இந்தப் படைவீரர் இயேசுவின் இதயத்தைக் குத்த அதிலிருந்து தண்ணீரும் இரத்தமும் வெளிப்படுகிறது. இயேசு கல்தூணில் கற்றி அடிக்கப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து நிறைய இரத்தம் வெளியேறியது. இரத்தம் வெளியேறிய உடன் வேகமாக துடிக்கின்ற இதயம் தனக்கு அருகில் இருக்கின்ற நுரையீரலின் தண்ணீரையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும். இது இதயத்தைச் சுற்றி ஒரு பசை போல உருவாகும். இதை அறிவியலில் 'பெரிகார்டியல் எஃப்யூஷன்' அல்லது 'ப்ளேயுரல் எஃப்யூஷன்' என்பார்கள். ஆக, தண்ணீரும் இரத்தமும் இயேசுவின் இதயத்திலிருந்து வெளியேறுகின்றன.

'தண்ணீரும் இரத்தமும்' என்னும் வார்த்தைகள் 1 யோவா 5:6-8லும் காணக்கிடக்கின்றன. இங்கே, 'நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரெனத் தூய ஆவியார் சான்று பகர்கிறார்' என்கிறார் யோவான். 'நீர்' என்பது 'மண்ணகப் பிறப்பு' அல்லது 'மனிதப் பிறப்புக்குக்' காரணமாக இருக்கும் ஆணின் உயிரணுவையும், 'இரத்தம்' என்பது 'விண்ணகப் பிறப்பு' அல்லது 'இறைப் பிறப்புக்குக்' காரணமாக இருக்கும் ஆண்டவரையும் குறிக்கிறது எனக் கொள்ளலாம்.

இயேசுவில் விண்ணும், மண்ணும் சங்கமிக்கின்றன. இறையியல்பும், மனித இயல்பும் ஒருங்கே பொருந்துகின்றன.

ஆக, இயேசுவின் திருஇருதயம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் முதல் பாடம், நம் ஒவ்வொருவரிலும் இருக்கும் இரு இயல்புகளையும் கண்டுகொள்வதோடு அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்தல் அவசியம். மனித இயல்பு ஒருபோதும் வெறுக்கத்தக்கது அல்ல.

இதன் பின்புலத்தில்தான், அருள்பணியாளர் திருப்பலியில் இரசத்தை அர்ப்பணம் செய்யும்போது, மனித இயல்பின் அடையாளமாக சில துளிகள் தண்ணீரை பூசைப் பாத்திரத்தில் சேர்க்கிறார். நாம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் அன்றாடம் இறை-மனித இயல்பின் இணைப்பைக் கொண்டாடிவிட்டு, இவ்விரு இயல்புகளையும் நாம் எதிரிகளாகப் பார்ப்பது தவறு இல்லையா?

முதற்குறிப்பில், 'கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்' என்று இயேசு தன்னைக் குறிப்பிடுகின்றார்.

'கனிவு' என்பது 'எனக்கும் பிறருக்கும் உள்ள உறவில்' அவசியமானது. 'மனத்தாழ்மை' என்பது 'எனக்கும் எனக்கும் உள்ள உறவில்' அவசியமானது. 'மனத்தாழ்மை' என்பது 'தாழ்வு மனப்பான்மை' அல்ல. 'தாழ்வு மனப்பான்மையில்' இருப்பவர் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார். அடுத்தவரோடு தன்னை ஒப்பீடு செய்து பொறாமை கொள்வார். அடிக்கடி எரிச்சல் படுவார். எல்லார் மேலும் கோபப்படுவார். எல்லாரையும் கண்டு ஒதுங்குவார். ஆனால், 'மனத்தாழ்மையில் இருப்பவர்' 'உடன்பிறப்பு போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவார். பிறர் தன்னைவிட மதிப்புக்கு உரியவர் என எண்ணுவார்' (காண். உரோ 12:10). மனத்தாழ்மை உள்ளவர் தன்னுடைய கையறுநிலை, நொறுங்குநிலை, உடைநிலை அனைத்தையும் ஏற்றுக்கொள்வார். கடவுள் முன்னும் மற்றவர் முன்னும் தன்னையே வெறுமையாக்குவார். ஏனெனில், தன்னிடம் உள்ளவை தன்னுடைய இயல்பை ஒருபோதும் கூட்டுவதில்லை என்பது அவருக்குத் தெரியும்.

இவ்வாறாக,

இன்றை திருநாள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத்தருகிறது:

அ. நம்மில் இருக்கும் இறை-மனித இயல்பை அடையாளம் கண்டு அதைக் கொண்டாடுதல். இதை அடுத்தவரிடமும் காணுதல். ஆக, நமக்கு அடுத்திருப்பவர் நமக்கு எதிராகத் தவறு செய்தாலும், 'அவர் மனித இயல்பில் செய்துவிட்டார்' என விட்டுவிட நம்மைத் தூண்டும் இப்புரிதல்.

ஆ. கனிவோடு இருத்தல் - எனக்கும் பிறருக்கும் உள்ள உறவில். கனிமொழி கூறல்.

இ. மனத்தாழ்மை கொண்டிருத்தல் - எனக்கும் எனக்குமான உறவில் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல்.

1 comment:

  1. ‘ இயேசுவின் திரு இருதயம்’.....நான் படித்த பள்ளியே ‘ இயேசுவின் திரு இருதயத்தைத்’ தாங்கி இருந்ததால் நாள் தவறாமல் இன்றுவரை கேட்டும்,படித்தும்,செபித்தும் வந்த ஒரு பெயர்.இறையியல்,மனித இயல்,உயிரியல்...இப்படி எல்லாம் குறித்துத் தந்தை இன்றையப் பதிவில் பேசியிருப்பினும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அந்த மூன்று பாடங்கள் மட்டுமே நமக்குப் போதுமென நினைக்கிறேன்.1. நம்மிலிருக்கும் இறை- மனித இயல்பை அடையாளம் கண்டு கொண்டாடுதலும், அதை அடுத்தவரிலும் காணுதலும், அடுத்தவர் மனித இயல்பில் செய்யும் தவறைப் புரிந்து கொண்டு மன்னித்தலும்2. எனக்கும் பிறருக்கும் இருக்கும் உறவில் கனிவு காட்டுதலும்,கனிமொழி கூறலும்,3. என்னை நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொள்ளுதலும்...
    என்னையும்,எனக்கடுத்திருப்பவரையும் எந்த வித்த் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ளுதலே இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைவதற்கு சம்ம்தானே! பிறகென்ன? இயேசுவின் திரு இருதயம் என் இருதயத்தை அவர் இரு
    தயம் போல் மாற்றிவிடுவார்.
    இருதயம்( இதயம்) பற்றிய ஒரு பதிவு என்பதாலோ என்னவோ ஒரு உயிரோட்டமான , வகுப்பறை புரிதல் அளவுக்கு ஒரு பதிவைத் தந்துள்ள தந்தையின் இதயத்தை இயேசுவின் திரு இருதயம் ( பாது) காத்துக்கொள்வதாக! தந்தைக்கு நன்றிகளும்!! திருநாள் வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete