Tuesday, June 4, 2019

ஒப்புகை

இன்றைய (05 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 20:28-38)

ஒப்புகை

நேற்றைய முதல் வாசகத்தில் நாம் வாசித்த பவுலின் எபேசு உரை இன்று நிறைவு பெறுகிறது. முதலில் பவுல் மூப்பர்களை எச்சரிக்கின்றார். இரண்டாவதாக, தன்னைப் பற்றி ஒப்புகை செய்கின்றார். மூன்றாவதாக, விடை பெறுகின்றார்.

அ. எச்சரிக்கை

'மூப்பர்களை' 'கண்காணிப்பாளர்கள்' என்று அழைக்கின்றார் பவுல். தொடக்கத் திருஅவையில் 'கண்காணிப்பாளர்' என்பவர் இன்றைய திருஅவையில் 'ஆயர்' (பிஷப்) அல்லது 'பேராயர்' (ஆர்ச்பிஷப்) ஆவார். திருஅவையில் பிரச்சினை அல்லது பிரிவினை வரும்போது இவர்கள் 'ஆண்டவரின் அருள் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும்' என எச்சரிக்கின்றார். பவுல் தன்னை பெரிய ஆளாக ஒருபோதும் நினைக்கவே இல்லை. தன் குழுமத்திலும் பிரச்சினைகள் எழலாம் என உணர்கின்றார். ஆக, இன்றைய சூழலில் நாம் எல்லாரிலும் எல்லாவற்றிலும் 'பெர்ஃபெக்ட்' தேடுவது தவறு என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. மனிதர்கள் நிகழ்வுகள் பிறழ்வு பெறும்போது அவற்றை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டுமே தவிர, பிறழ்வே இருக்கக் கூடாது என்று நாம் நினைக்கக் கூடாது.

ஆ. ஆசைப்பட்டதில்லை

'எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை' என மார்தட்டுகிறார் பவுல். அதாவது, இவருக்கு எந்தவித கவனச் சிதறல்களும் இல்லை. தன்னுடைய பணியின் இலக்கு எது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். ஆக, பொருள் சேர்க்கும் கருவியாக தன்னுடைய பணியை அவர் கருதவே இல்லை. மேலும், தான் உழைத்து பிறருக்கு நன்மை செய்ததாகவும் சொல்கிறார். தன் தேவையை நிறைவேற்றுவதோடு பிறரின் தேவைக்காகவும் உழைக்கின்ற ஒரு மேலான தலைவரை நாம் இங்கே பார்க்கிறோம். 'பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை' என்று இயேசுவின் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொண்டிருக்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நம் நற்செய்தி நூல்களில் இல்லை. மற்ற ஏதாவது ஓரிடத்தில் பதிவு செய்யப்பட்ட வார்த்தைகளாக இவை இருக்கலாம்.

இ. இறைவேண்டல்

பவுல் தங்கள் கண்களிலிருந்து மறையப் போகிறார் என்று உணர்கின்ற எபேசின் மூப்பர்கள் அவருக்காக இறைவேண்டல் செய்கிறார். இது ஓர் ஆச்சர்யமான விடயம். இறைவேண்டல் கண்ணுக்குத் தெரியாதவரையும் நம் கண்முன் கொண்டுவருகிறது. இவ்வாறாக, பவுலை என்றென்றும் நினைவுகூறுத் தொடங்குகின்றனா மூப்பர்கள்.

இறுதியாக,

மூப்பர்கள் கப்பல்வரை சென்று வழியனுப்புகிறார்கள்.

நம் வீட்டுக்கு வருபவர்களை கதவு வரை சென்று நாம் வழியனுப்புகிறோம். அவர் போய்விட்டார் என்று உறுதி செய்வதற்காக அல்ல. மாறாக, இதே இடத்தில் நான் உங்களுக்காக காத்திருக்கிறேன் என்ற செய்தியை அவருக்குச் சொல்வதற்காகத்தான்.

இன்று,

நம்முடைய இறைவார்த்தை வேர், ஆசை, உழைப்பு, இறைவேண்டல் பற்றிய பார்வைகள் எப்படி இருக்கின்றன?

1 comment:

  1. பவுலின் அழகான,ஆழமான எபேசு உரை. அதை இன்னும் எளிமையும், புரிதலும் சேர்த்து நமக்குத் தந்துள்ளார் தந்தை இன்றையப்பதிவில். பிறழ்வை சந்திக்காத ஒருவன் மனிதனே அல்ல.ஆகவே மனிதரிலும்,நிகழ்வுகளிலும் பிறழ்வு நிகழ்கையில் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமேயன்றி, பிறழ்வே இருக்கக்கூடாது என நினைப்பது தவறு என்பதும்,பெற்றுக்கொள்வதை விடக் கொடுத்தலே பேறுடைமை என்பதை நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டுமென்பதும்,கண்ணுக்குத் தெரியாதவர்களைக்கூட நம் கண்முன் கொண்டுவரும் இறைவேண்டலை நம்மருகில் இருப்போருக்காக மட்டுமின்றி தூரத்தில் இருப்போருக்காகவும் செய்ய வேண்டுமென்பதும் பவுலடியாரின் எபேசு உரை நமக்கு சொல்லித்தரும் பாடங்கள்.நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் பாடங்கள் தான்; முயன்று பார்ப்போம்.
    “நம் வீட்டுக்கு வருபவர்ககளைக் கதவு வரை சென்று வழியனுப்புவது அவர் போய்விட்டார் என்று உறுதி செய்வதற்காக அல்ல; மாறாக அதே இடத்தில் நான் உங் களுக்காக்க் காத்திருக்கிறேன் என்ற செய்தியை அவர்களுக்கு சொல்வதற்காக தான்.” அழகானதொரு பதிவின் அழகைக், கூட்டும் வார்த்தைகள். தந்தை ஒருவரால் மட்டுமே இந்தக்கோணத்தில் சிந்திக்க முடியும்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete