Sunday, June 16, 2019

வீணாக்க வேண்டாம்

இன்றைய (17 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:38-42)

வீணாக்க வேண்டாம்

சொட்டுச் சொட்டாய் வடியும் நீர் ஒரு நாளுக்கு இருபது லிட்டர், மாதத்திற்கு அறுநூறு லிட்டர், வருடத்திற்கு ஏழாயிரத்து இருநூறு லிட்டர் என கணக்கிட்டு தண்ணீரை வீணாக்க வேண்டாம் என பண்பலையில் சக்தி மசாலா பொதுநலம் கருதி எச்சரிக்கிறது.

என்றுமில்லாமல் இன்று தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு - விழிப்புணர்வை விட - அச்சம் மேலோங்கிவிட்டது. ஊடகங்கள் படுத்துகிற பாட்டில் தண்ணீர் பஞ்சம், வறட்சி என்று மக்களை இன்னும் அலற விடுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 6:1-10), 'நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம்' என அறிவுறுத்துகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மலைப்பொழிவின் ஒரு பகுதியாக, ஒரு கன்னத்திற்கு மறு கன்னம், அங்கிக்கு மேலாடை, ஒரு கல் தொலைவுக்கு இரு கல் தொலைவு என நம்மை கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க அறிவுறுத்துகிறார். 'இன்னும் கொஞ்சம் நடந்தால்தான் என்ன?' என்பதுபோல இருக்கிறது இயேசுவின் அறிவுரை.

தண்ணீரை வீணாக்காமல் இருக்க நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க வேண்டும். அதாவது, வழக்கமாக குழாயை அரைகுறையாய் மூடிவதற்குப் பதிலாக, கொஞ்சம் சிரத்தை எடுத்து திருகி மூடி தண்ணீர் நின்றுவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.

அருளை வீணாக்காமல் இருக்கவும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்கத்தான் வேண்டும்.

எக்ஸ்ட்ரா மைல் நடக்கும்போது உணவு கூட வீணாவதில்லை. ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம் என வைத்துக்கொள்வோம். சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய மீதம் இருக்கிறது. கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடந்து பாத்திரங்களை எடுத்து, உணவை அவற்றில் பக்குவமாக வைத்து, குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாத்தால் உணவு வீணாவதில்லை. அடுத்த நாள் உண்பதற்குப் பயன்படும் நிலையில் இருக்கிறது. அப்படி எக்ஸ்ட்ரா மைல் நடக்காமல் அப்படியே உணவுப் பொட்டலங்களை மேசையில் விட்டுவிட்டால், உணவும் கெடுவதோடு, அறையும் நாற்றம் அடிக்கத் தொடங்குகிறது.

தானே எப்படி எக்ஸ்ட்ரா மைல் நடக்கிறேன் என்பதை பவுல் மிக அழகாக எழுதுகிறார்: 'அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம். வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மன உறுதியோடு தாங்கி வருகிறோம். அடிக்கப்பட்டோம். சிறையிடப்பட்டோம. உழைத்தோம். கண்விழித்தோம். தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்.'

பவுல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடப்பதால், அவர், 'தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு' ஆகியவற்றைக் கொண்டிருக்க முடிகிறது.

அல்லது

இவற்றைத் தக்கவைத்துக்கொள்ள நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடத்தல் அவசியம்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டல், கொஞ்சம் எக்ஸ்ட்ரா பார்த்தல், கொஞ்சம் எக்ஸ்ட்ரா நேரம் செலவிடல், கொஞ்சம் எக்ஸ்ட்ரா கரிசணை என இருந்தால் அருள் வீணாவதில்லை.

1 comment:

  1. அண்மை காலங்களில் நம்மைப் பயமுறுத்தும் தண்ணீர்ப் பஞ்சத்தை இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களுடன் இணைத்து இன்றையப் பதிவைப் படைக்கிறார் தந்தை. தண்ணீர் விஷயத்தில் எக்ஸ்ட்ரா தண்ணீர் பயன்படுத்துவதையும், வீணாக்குவதையும் தவிர்க்க வழி சொல்பவர், “ இறைவன் அருளை”த் தக்க வைத்துக்கொள்ளும் விஷயத்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க யோசனை சொல்கிறார்.கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டல்,பார்த்தல்,நேரம் செலவிடல்,கரிசனை .... இவை நம்மிடம் இருப்பின் புனித பவுலடியாரின் வழியில் தூய்மை,அறிவு,பொறுமை,நன்மை, ஆவியின் கொடைகள்,வெளிவேடமற்ற அன்பு இவற்றைக் கொண்டிருக்க முடியும் என்கிறார்.
    தந்தையிடம் ஒரு பகிர்தல்.....உணவை நாம் உணவகத்திலிருந்து தருவித்து, வீட்டில் வைத்து உண்ணும் பட்சத்தில் தங்களின் அறிவுரை சரியே! ஆனால் அங்கேயே அமர்ந்து உண்ணும் போது? இன்று ஏற்பட்ட அனுபவம். சேலத்தில் ஒரு உணவகத்தில் நுழைந்து இரு மினி(சிறிய) மதிய உணவு கேட்டோம்; கொடுத்தார்கள்.ஆனால் அவற்றில் இருந்த உணவு? ஒன்றே எங்களிருவருக்கும் அதிகம்.மற்றொன்றை என்ன செய்வது? திருப்பியும் கொடுக்க முடியாது. குற்ற உணர்ச்சி மேலிட அப்படியே விட்டு வந்தோம்.இந்த மாதிரி பிரச்சனையில் எப்படி எக்ஸ்ட்ரா மைல் நடப்பது? தந்தை யோசனை சொல்வாரா?
    மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கண்டுபிடித்து, தீர்விற்கு வழி சொல்லும், தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete