Thursday, June 20, 2019

வலுவின்மை

இன்றைய (21 ஜூன் 2019) நற்செய்தி (மத் 6:19-23)

வலுவின்மை

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 2 கொரி 11:18, 21-30) நம் சிந்தனையைத் தொடங்குவோம். கொரிந்து நகரத் திருச்சபையில் ஒரு பெரிய தலைமைத்துவ பிரச்சினை நிகழ்கிறது. பவுலின் தலைமையை அல்லது பவுலின் நற்செய்தியை மறந்துவிடுகின்ற கொரிந்து சபையினர் இன்னொரு நற்செய்தியை, இன்னொரு திருத்தூதரைப் பிடித்துக்கொள்கின்றனர். அவரைவிடத் தான் எந்த அளவிலும் குறைவுபடாதவர் என அவர்களுக்கு எழுதுகிறார் பவுல். இங்கே அழகு என்னவென்றால், தன்னுடைய வல்லமையைப் பற்றி அவர் பெருமை பேசாமல் வலுவின்மை பற்றிப் பேசுகின்றார்.

ஒருவேளை நாம் பவுலின் இடத்தில் இருந்தால் என்ன பேசியிருப்போம்?

நான் உயிர்த்த ஆண்டவரை நேருக்கு நேர் சந்தித்தேன்.
திருத்தூதர்களோடு தொடர்பில் இருந்தேன்.
திருத்தூதர் பேதுருவின் வெளிவேடத்தைக் கண்டிக்கும் அளவிற்கு என்னுடைய அறநெறி இருந்தது.
நான் மூன்று பெரிய தூதுரைப் பயணங்கள் செய்தேன்.
பல திருச்சபைகளை ஏற்படுத்தினேன்.
பதிமூன்று கடிதங்களை எழுதினேன்.
எனக்கு கிரேக்கம், இலத்தீன், அரமேயம், எபிரேயம், சிரியக் என ஐந்து மொழிகள் தெரியும்.
எனக்கு ஆளுநர் வீட்டிலும் ஆட்களைத் தெரியும்.
தொழுகைக் கூடத் தலைவர் என் நண்பர்.
நான் ஒரு நல்ல போதகர்.
நிறையப் பேரை மனம் மாற்றியிருக்கிறேன்.
இப்படியாக, நாம் நம்முடைய வலுவின்மைகளை அடுக்கிக்கொண்டே போவோம். இல்லையா?

ஆனால், பவுல் மிகவும் மாறுபட்டவராக, தன்னுடைய வலுவின்மைகளைப் பட்டியலிடுகிறார்.

நான் அடிபட்டேன். கடலில் அகப்பட்டேன். அல்லலுற்றேன். இடர்கள் பட்டேன். கண்விழித்தேன். குளிரில் வாடினேன். ஆடையின்றி இருந்தேன். திருச்சபைகளைப் பற்றிக் கவலைப்பட்டேன். மற்றவர்கள் பாவத்தில் விழுவதைப் பார்த்து உள்ளம் கொதித்தேன்.

இப்படிச் சொல்லிவிட்டு, 'நான் பெருமை பாராட்ட வேண்டுமென்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்'

தன்னுடைய வலுவின்மையை அறிந்தவன்தான் நல்ல தலைவன்.

தன்னுடைய வலுவின்மையை அறிந்து ஏற்றுக்கொள்பவன்தான் நல்ல மனிதன்.

இது எப்படி வரும்?

நான் என்னுடைய அடையாளங்களால் சிறைப்பிடிக்கப்படாதபோதுதான் எனக்கு இந்த மனநிலை வரும். சில நேரங்களில், 'நான் ஓர் அருள்பணியாளர்' என்ற ஓர் அடையாளமே என்னை மற்றவர்களிடமிருந்து பிரித்துவிடுகிறது. நான் இந்த அடையாளத்தைப் பற்றிக்கொள்ளும்Nபுhது, 'அடுத்தவர் என்னை மதிக்கவில்லை,' 'என்னை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை' போன்ற தேவையற்ற கவலைகள் பிறக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்' என்கிறார்.

பவுலைப் பொறுத்தவரையில் தன்னுடைய வலுவின்மைதான் அவருடைய செல்வம். தன்னுடைய நொறுங்குநிலைதான் அவருடைய சொத்து.

இன்று நாம் ஒரு பயோ டேட்டா எழுதுகிறோம் என வைத்துக்கொள்வோம். அதில் எது இடம் பெறும்? என் பெயர், படிப்பு, அறிந்த மொழிகள், செய்த பயணங்கள், எழுதிய புத்தகங்கள், அறிமுகமான நபர்கள், ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளா?

அல்லது என்னுடைய வலுவின்மை, இயலாமை, போராட்டங்கள், தோல்விகள், கவலைகள், ஏக்கங்களா?

முதலில் உள்ளவை நாம் மேலே அணிந்துகொள்ளும் ஆடைகள். அவை கிழிந்து போகும், நைந்து போகும். இரண்டாவது உள்ளவை நாம் உடலுக்குள் இருக்கும் எலும்புகள். அவை மறைவாகத்தான் இருக்கும். ஆனால், அவைதான் நமக்கு உருவமும், உயர்வும் கொடுக்கின்றன.

நம்முடைய வலுவின்மைகளைக் கொண்டாடவும்,

நம் விளக்கு அணைந்துபோயிருந்தாலும் அந்த இருளைக் கொண்டாடவும் அழைக்கிறார் பவுல்.

1 comment:

  1. ‘அழகு’ எனும் சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள் அவரவர் மனநிலைக்கேற்ப. இங்கே பவுலடியாரின் ‘வலுவின்மை’ தான் அவருக்கு அழகு என்கிறார் தந்தை. பவுலின் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன பேசியிருப்பேன்? தந்தையின் பட்டியல் கூட அழகுதான்.” தன்னுடைய வலுவின்மையை அறிந்தவன் தான் நல்ல தலைவன். தன்னுடைய வலுவின்மையை்அறிந்து ஏற்றுக்கொள்பவன் தான் நல்ல மனிதன்.” .... நச்சென்று வருகின்றன தந்தையின் வார்த்தைகள். அருமையிலும் அருமை. ஆத்தும சோதனைக்கு அழைப்பு விடுக்கிறார் தந்தை. என்னுடைய பயோடேட்டா என நான்கொண்டாடுவது எதை? கிழிந்து போகும், நைந்து போகும் என் மேலாடைகளையா? இல்லை... நம் உடலுக்கு உருவமும், உயர்வும் கொடுத்து, மறைந்திருக்கும் எலும்புகளையா?
    நம் வலுவின்மைகளைக் கொண்டாடவும், நம் விளக்கு அணைந்து போயிருந்தாலும் அந்த இருளைக்கொண்டாடவும் பவுலடியாரோடு இணைந்து அழைப்பு விடுக்கும் தந்தைக்கு செவி மடுப்போம். உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete