Tuesday, June 18, 2019

வலக்கை செய்வது

இன்றைய (19 ஜூன் 2019) நற்செய்தி (மத் 6:1-6, 16-18)

வலக்கை செய்வது

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, தர்மம் செய்தல் பற்றியும், இறைவேண்டல் செய்வது பற்றியும் நோன்பு இருத்தல் பற்றியும் பேசுகின்றார். இம்மூன்றிலும் அடிப்படையாக இருப்பது, நாம் செய்யும் செயல் பிறருக்குத் தெரியக்கூடாது. 'மறைவாயிருக்கின்ற இறைவனுக்கு மட்டுமே இவை தெரிய வேண்டும்.'

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 9:6-11), கொடுத்தலின் அவசியத்தைப் பதிவு செய்கிறார் பவுல்.

நான் குருமடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, மதுரையில் உள்ள உறவினர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஒரு சிறிய மோதிரம் பரிசளிக்க விரும்பினார் என் அம்மா. மோதிரத்தை வாங்கித் தந்தவர் தான் வர இயலாததால் நான் சென்று அக்குழந்தை அணிவிக்குமாறு சொன்னார். 'குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும்போது யாருக்கும் தெரியாமல் அதன் விரலில் போட்டுவிடாதே. எல்லாரும் இருக்கும்போது போட்டுவிடு!' என்று சொல்லி அனுப்பினார்.

நாம் செய்கின்ற நல்ல செயல் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றும், நாம் யாருக்காவது எதையாவது கொடுப்பது மற்றவருக்குத் தெரிய வேண்டும் என்றும், நாம் எங்காவது வருவது யாருக்காவது தெரிய வேண்டும் என நினைக்கிறோம்.

கடந்த வாரம் திருச்சிக்கு நம் தமிழக முதல்வர் வந்தார். திருச்சி எங்கும் கட்அவுட்களும், சுவரொட்டிகளும், கொடிகளும். ஏன்? 'நான் வருவது அடுத்தவருக்குத் தெரிய வேண்டும்'

எல்லாமே 'ஈகோ' தான். எல்லாமே மாயை தான்.

என்னதான் என் முகத்தை நான் சுவரொட்டியில் அடைத்து ஊரெல்லாம் ஒட்டினாலும், பார்வையற்ற நபருக்கு அது ஒன்றுமில்லைதான், வீட்;டிலேயே இருப்பவர்களுக்கு அது ஒன்றுமில்லைதான், அந்தப் பக்கம் செல்லாதவருக்கு ஒன்றுமில்லைதான். அப்படியிருக்க, என் ஈகோவுக்கு நான் ஏன் தீனி போட வேண்டும்?

இதுதான் இயேசுவின் கேள்வி. செபிக்கும்போது, தர்மம் செய்யும்போது, நோன்பிருக்கும் போது நம்முடைய ஈகோ மறைய வேண்டுமே தவிர, ஈகோவுக்குத் தீனி போடும் காரணிகளாக அவை மாறிவிடக் கூடாது.

'நான் செய்வது மற்றவருக்குத் தெரிந்தால் அவரும் தூண்டுதல் பெறுவார்' என்றும், 'உங்க பேரை, நீங்க ஐம்பதாயிரம் நன்கொடை கொடுத்ததை நான் கோவிலில் வாசிக்கிறேன். அப்பதான் மற்றவர்களுக்க அது இன்ஸ்பிரேஷனாக இருக்கும்' என்றும் சில இடங்களில் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இயேசுவின் பதில் ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக இருக்கிறது: 'யாருக்கும் தெரியக்கூடாது!'

அடுத்தவர்களுக்கு எவ்வளவு கொடுப்பது?

'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்கிறார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்கிறார்' என்கிறார் பவுல்.

'பெறுபவர் எல்லாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்' என்பது வாழ்க்கை நியதி. ஆக, கடவுளிடமிருந்து பெற்றவர்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் பவுல்.

'கொடுப்பவர் எல்லாம் பெற்றுத்தான் ஆவர்' என்பதும் வாழ்க்கை நியதி. ஆக, கொடுப்பதை மறைத்துக் கொடுக்கச் சொல்கிறார் இயேசு.

என்னதான் செய்வது?

கொடுப்பதா? வேண்டாமா?

'கொடுப்போம்' ஏனெனில் 'நாம் பெற்றோம்'

'பெறுவோம்' ஏனெனில் 'நாம் கொடுக்கிறோம்'


4 comments:

  1. “நாம் ஒரு நல்ல செயலைச் செய்யும் போது அது மறைவாயிருக்கும் தந்தைக்கு மட்டுமே தெரிய வேண்டும்”. இன்றையப் பதிவின் மையக்கருத்து. இது ஒரு புறமிருக்க, தங்களில் ஒளிந்திருக்கும் ஈகோவை குஷிப்படுத்துவதற்காகவே கொடுப்பவர்களும் உண்டு. இப்படிப்பட்டவர்களின் ஈகோவை உசுப்பேத்துவதில் அருட்பணியாளர்களுக்கும் கணிசமான பங்குண்டு என்பது தந்தைக்கும் தெரிந்திருப்பதில் மகிழ்ச்சியே! பெறுபவர் கொடுப்பதும், கொடுப்பவர் பெறுவதும்.... அனைத்துமே மறைவில் நடக்க வேண்டிய செயல். கொடுப்பதா? வேண்டாமா? எனும் கேள்வியையும் கேட்டு ‘கொடுப்போம்’ ஏனெனில் ‘நாம் பெற்றோம்’; ‘பெறுவோம்’ ஏனெனில் ‘நாம் கொடுக்கிறோம்’ என பதிவை நிறைவு செய்கிறார் தந்தை. கொடுப்போம்... அலுங்கிக் குலுங்கிக் கொடுப்போம்..... மறைவாயிருக்கும் தந்தைக்கு மட்டுமே தெரியும் படி.

    ReplyDelete
  2. நிற்க.... நாம் ஒரு விசேஷ வீட்டிற்குச் செல்கையில் பரிசு கொடுப்பதும், அதை வீட்டுக்கார்ருக்குத் தெரியும்படிக் கொடுப்பதும் காலம் காலமாக நம் குடும்பங்களில் இருந்து வரும் மரபு. ஏனெனில் அவர் ஏற்கனவே நமக்குப் பரிசு கொடுத்திருக்கலாம்; அதைத் திரும்பவும் எதிர்பார்க்கலாம். இதைத்தான் தந்தையின் தாயும் அவரிடம் கூறியிருப்பார்கள். அன்று தாயின் சொல்லைத் தட்டாத தனயன், இன்று பல உயரங்களை எட்டிய பிறகு பழசைத் திரும்பிப் பார்த்து வேறு விதமாக விமரசிக்கிறார். அவர் மீது தப்பில்லை. நிகழ்வு ஒன்றுதான். ஆனால் நாம் நிற்கும் இடமும், நமக்குக் கிடைத்த புரிதலும் நம் செயல்களின் அர்த்தங்களை மாற்றிப்போடுகின்றன. தந்தையும் அதற்கு விதிவிலக்கல்ல. எந்த விஷயத்தையும் ஒரு மூன்றாவது கண் கொண்டு பார்க்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!.

    ReplyDelete