Thursday, June 6, 2019

தன்முனைப்பு

இன்றைய (7 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 25:13-21)

தன்முனைப்பு

மனிதர்களாகிய நமக்கு பாலுணர்வு மற்றும் வன்முறை உணர்வு என்னும் இரண்டு உணர்வுகள்தாம் மேலோங்கி இருக்கின்றன என்கிறார் உளவியல் அறிஞர் ஃப்ராய்ட். ஆனால், இவ்விரண்டையும் தாண்டி அல்லது இவ்விரண்டையும் உந்தித் தள்ளுகிற ஒரு உணர்வு இருக்கிறது. அதுதான், 'தன்முனைப்பு' அல்லது 'தன்முக்கியத்துவம்' (self-importance). 'மற்றவரைவிட நான் முக்கியமானவன் அல்லது முக்கியமானவள்' என்ற உணர்வு நமக்குப் பல நேரங்களில் இருக்கிறது. இந்த உணர்வில் நல்லது இருக்கிறது. அதாவது, இது இருந்தால்தான் நாம் நம் முன்னெடுப்புக்களில் வெற்றி பெற முடியும். நாம் குழந்தையாக கருவுரும் நிகழ்விலேயே இது இருக்கிறது. பல ஆயிரம் விந்தணுக்களில் தன்முனைப்பு கொண்டிருக்கிற விந்தணுவே முட்டையோடு கலக்கிறது. ஆக, 'நான்தான் முக்கியமானவன், முக்கியமானவள்' என்ற உணர்வு நமக்கு இயல்பாக இருக்கிறது. இதில் நன்மையும் இருக்கிறது. நம் முதல் பெற்றோரின் பாவமும் இதுதான். 'அது என்ன? யாரோ இங்கே கடவுள்னு இருக்காராமே! அவரைவிட நான் முக்கியமே!'

ஆனால், இதில் நிறைய தீமைகள் இருக்கின்றன. அடுத்தவரை ஏற்றுக்கொள்ளாமை, பொறாமை உணர்வு, ஒப்பீடு, கோபம், தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை இவை அனைத்தும் இந்த உணர்வில்தான் ஊற்றெடுக்கின்றன. 'என்னை எல்லாருக்கும் தெரியும்,' 'எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு,' 'நான் யார்னு தெரியுமா?' இவை போன்ற சொல்லாடல்கள் எல்லாம் இவ்வுணர்வின் குழந்தைகள். இதை இப்போது லேட்டஸ்ட் வார்த்தையில் 'கெத்து காட்டுதல்' என்கிறார்கள்.

நான் பேராயரின் செயலராக இருந்தபோது நினைப்பதுண்டு. ஒரு பங்கு அல்லது ஊர் அல்லது நிறுவனத்தின் விழாவிற்குச் செல்லும்போது, விழாவிடத்தை நெருங்குகையில் ஒரு பெருமித உணர்வு இருக்கும். பேராயரோடு அமர்ந்து செல்வதால் இருக்கும் உணர்வு அது. வெடி, கொட்டு சத்தம், மாலையின் நறுமணம், சந்தனம், குங்குமம், வீடியோ, ஃபோட்டோ என அமர்க்களமாக இருக்கும். ஆனால், விழா முடிந்து வீடு திரும்பும்போது சிக்னலில் மற்ற கார்களோடு கலந்து நிற்கும்போதும் எங்கள் காரும் 'ஆயிரம் கார்களில் ஒரு கார்' தான். ஆக, முதலில் நான் பெற்ற 'முக்கியத்துவ' உணர்வு இரண்டாவது நிகழ்வில் ஒன்றுக்கும் பயன்படாது.

ஆக, 'தன்முனைப்பு' அல்லது 'தன்முக்கியத்துவம்' எல்லாம் இடம் சார்ந்தது. அல்லது நம் மூளைக்குள் உதிக்கும் உணர்வே அன்றி வேறில்லை. இன்னும் சொன்னால் அது ஒரு மாயை.

இன்றைய முதல் வாசகத்தில் பவுலின், இயேசுவின் தன்முனைப்பு அல்லது தன்முக்கியத்துவம் காயப்படுகிறது. எப்படி? நம்பிக்கையாளர்கள் இயேசுவை கிறிஸ்து என்றும், கடவுள் என்றும், கடவுளின் மகன் என்றும் கொண்டாடுகிறார்கள். பவுலை சீடர் என்றும் புறவினத்தாரின் திருத்தூதர் என்றும் கொண்டாடுகின்றனர். ஆனால், என்ன நடக்கிறது?

அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்துவைச் சந்திக்கின்றனர். அகிரிப்பா ரொம்ப நாள் எருசலேமில் இருக்கிறார். அவர்களுக்கு பொழுது போகவில்லை. இந்த நேரத்தில் கைதிகளைப் பற்றிய பேச்சு வருகிறது. அப்போது பெஸ்து சொல்கிறார்: 'கைதியா விடப்பட்ட ஒரு மனிதர் இருக்கிறார் ... இறந்து போன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள்'

பெஸ்துவைப் பொறுத்தவரையில், பவுல் என்பவர் ஒரு கைதி. இயேசு என்பவர் இறந்து போன ஒருவர்.

ஆக, நம் அடையாளங்கள் துடைத்து எறியப்படும் நேரம் கண்டிப்பாக வரும். அந்த இடத்தில், அந்த நேரத்தில் நாம் தன்முனைப்பு, தன்முக்கியத்துவம் கொண்டிருக்க முடியாது. இதை எப்படி எதிர்கொள்வது? இந்த நேரத்தில் நம் மகிழ்ச்சியை எப்படி தக்கவைத்துக்கொள்வது?

ரொம்ப சிம்பிள்.

நம் அடையாளங்களோடு நம்மை ஒன்றிக்கவே கூடாது. மற்றவர்களிடமிருந்து என்னைப் பிரித்துப் பார்க்காமல் இணைத்துப் பார்க்க வேண்டும். மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்னும் மாயைக்குள் சிக்கிவிடக் கூடாது.

பவுலும் சிக்கவில்லை. இயேசுவும் சிக்கவில்லை.

கைதியாக இருந்தாலும் பவுல் பவுல்தான். இறந்தவராக இருந்தாலும் இயேசு இயேசுதான்.

1 comment:

  1. அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனையை எடுத்துவைக்கிறது இன்றையப் பதிவு.’ தன் முக்கியத்துவம்’... நாம் இந்த உலகை சந்திக்குமுன்னரே நம்மோடு ஐக்கியமாகிப்போன ஒரு உணர்வை விஞ்ஞான பூர்வமாக, தன் வாழ்க்கை அனுபவப் பூர்வமாக அலசுகிறார் தந்தை. இறுதியில் அது ஒன்றுக்கும் உதவாத ஒரு ‘மாயை’ எனத்தூக்கி எறிகிறார்.அடையாளங்கள் உருவிஎடுக்கப்பட்ட இரு மனிதர்கள்...கைதியாக உருமாற்றம் செய்யப்பட்ட பவுல்,மற்றும் இறந்து போன இயேசு.இத்தகைய சூழ்நிலைகளில் நாம் தூக்கி எறியப்படுகையில்,நம்மோடு அடையாளப்படத்தப்பட்ட சில மேலான விஷயங்களை யாரோ நம்மிலிருந்து களைந்து,நம்மை நிர்வாணப்படுத்தும்போது “ சிறுமை” எனும் வெறுமை நம்மை சின்னாபின்னப்படுத்துவதை உணர்ந்திருப்போம். உச்சத்தில் நம்மைப்பிறர் ஏற்றும்போதும், எச்சமாக எண்ணி நம்மைக்கீழே போட்டு மிதிக்கும் போதும் அடையாளங்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ளாத இயேசு போல, பவுல் போல “ இது தான் நான்! நான் இப்படித்தான்!!” என்ற முத்திரையோடு வாழப்பழகினால் “இவன்/ இவள் இப்படித்தான்” எனும் அக்மார்க் முத்திரை நம்மீதும் ஒட்டப்படும். வாதிடுவதற்கு எளிதான ஆனால் வாழ்க்கையை விட்டுத் தள்ளிவைக்கக் கஷ்டமான நம் ஊணோடும்,உதிரத்தோடும் கலந்த ஒரு உணர்வு குறித்த தந்தையின் விளக்கம் அருமை ...அதை வாழ்வாக்கவும் பழகிக் கொள்ளும் பட்சத்தில்.அருமையான ஒரு வாழ்க்கைப்பாடம் தந்த தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete