Friday, June 28, 2019

புனிதர்கள் பேதுரு பவுல்

இன்றைய (29 ஜூன் 2019) திருநாள்

புனிதர்கள் பேதுரு பவுல்

இன்று உரோமைத் திருஅவையின் இருபெரும் தூண்களாக இருக்கின்ற புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

இவர்கள் எழுதிய எழுத்துக்களிலிருந்து இந்த இரு பெரும் ஆளுமைகளிடம் நான் கண்டு வியக்கும் குணங்களைச் சிந்திக்க விழைகிறேன்.

அ. பேதுரு குற்றவுணர்வைக் கையாண்ட விதம்

'இன்றிரவு சேவல் கூவுமுன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய்' என்கிறார் இயேசு.

'இல்லை. சாவிலும் உன்னைப் பிரியேன்' என்கிறார் பேதுரு.

ஆனால், அடுத்தடுத்த மறுதலிக்கிறார்.

முதல் தடவை மறுதலித்தபோதாவது, 'ஐயயையோ! இன்னும் கொஞ்சம் அலர்ட்டா இருந்துகொள்ளலாமே' என்றுகூட அவர் நினைக்கவில்லை. நிகழ்வுகள் மிக வேகமாக நடந்தேறுகின்றன. மூன்று முறை மறுதலிக்கின்றார். இது எப்படின்னா, முதல் முறை தடுமாறி விழுந்தவர், 'இனி விழக்கூடாது' என்று நினைத்து முடிவெடுப்பதற்குள் இன்னும் இரண்டு முறை விழுவதுபோல இருக்கிறது.

மறுதலித்தாயிற்று மூன்றுமுறை. சேவலும் கூவியாயிற்று.

தூரத்தில் அவர் இயேசுவைப் பார்ப்பதாக நாம் காணொளிகளில் பார்க்கிறோம். ஆனால், இயேசுவை அவர் பார்க்கவில்லை என்றாலும் அவருடைய உள்ளத்தில் குற்றவுணர்வு பிறந்திருக்கும். குற்றவுணர்வு என்பது என் மனதுக்கு தெரிந்த ஒன்றுக்கு எதிராக என் மூளை மற்றொன்றைச் செய்ய, என் மனது, 'இல்லை! இது தவறு' என்று என் மூளைக்குச் சொல்ல, மூளை பரிதவிக்கும் உணர்வு. ஆக, மனதுக்கும் மூளைக்கும் நடக்கும் போராட்டம்தான் குற்றவுணர்வு. இந்தக் குற்றவுணர்வு வந்தவுடன் மூளை, 'எல்லாம் முடிந்து போயிற்று. இனி நீ எப்படி அவரை எதிர்கொள்வாய். உன் வாழ்க்கை அவ்வளவுதான். நீ ஒரு தோல்வி' என நிறைய வார்த்தைகளை அள்ளிக் கொட்டும். ஆனால் மனம், 'பரவாயில்லை' என்ற ஒற்றை வார்த்தைதான் சொல்லும். மனதிற்குச் செவிகொடாமல் மூளைக்குச் செவிகொடுப்பவர் தன்னையே அழித்துக்கொள்ளத் துணிகிறார் - யூதாசு போல.

ஆனால், பேதுரு தன் மனத்திற்குச் செவிகொடுத்தார். 'நான் அவரை மறுதலித்தேன்தான். ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்வார்' என்று தன் குற்றவுணர்வின் நேரத்தில் தனக்கு வெளியே பார்த்தார். இயேசுவே சொல்வது போல, 'குறைவாக மன்னிப்பு பெறுபவர் குறைவாக அன்பு செய்வார். நிறைவாக மன்னிப்பு பெறுபவர் நிறைவாக அன்பு செய்வார்.' பேதுரு நிறைவாக மன்னிப்பு பெற்றார் இறுதி வரை அன்பு செய்தார் இயேசுவை.

ஆக, இன்று நான் என் குற்றவுணர்வை எப்படிக் கையாளுகிறேன்? என் மூளையின் சொற்படி நடக்கிறேனா? என் மனத்தின் சொற்படி நடக்கிறேனா?

ஆ. பவுல் தன் மனப்போராட்டத்தை கையாண்ட விதம்

புதிய நம்பிக்கை கொண்டவர்களைக் கைது செய்யப் புறப்படுகிறார் பவுல். ஆனால், அந்த நம்பிக்கையின் பிதாமகனையே அறிவிக்கும் திருத்தூதராக மாறுகின்றார்.

இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றார். திருத்தூதர்களால் நிராகரிக்கப்படுகின்றார்.

அவரின் போதனையைக் கேட்டு மக்கள் வியக்கிறார்கள். ஆனால் அவரைக் கல்லால் எறிகிறார்கள்.

நற்செய்தி அறிவித்து மனம் மாற்றுகிறார். மனம் மாறியவர்கள் வேறு நற்செய்தியை நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

'கண்ணே மணியே' என திருச்சபையைக் கொஞ்சுகிறார். 'நான் குச்சியுடன் வர வேண்டுமா?' என எச்சரிக்கிறார்.

'என்மேல் தைத்த முள் ஒன்று உண்டு' என அழுகிறார். 'எனக்கு வலுவூட்டுகிற இறைவனின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு' எனத் துள்ளிக் குதிக்கிறார்.

'திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் நான் பரிசேயன்' என பெருமிதம் கொள்கிறார். 'எல்லாவற்றையும் குப்பையெனக் கருதுகிறேன்' என சபதம் எடுக்கிறார்.

இவ்வாறாக, பவுலின் மனப்போராட்டம் இவருடைய முரண் வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. இந்த மனப்போராட்டம் பற்றி இவர் அடிக்கடி எழுதுகின்றார். மனப்போராட்டம் என்பது நல்லதுக்கும் தீயதுக்கும் என்றால் எளிதாக வென்றுவிடலாம். ஆனால், இரண்டு நல்லதுக்கு இடையே போராடும்போது, நல்லவை இரண்டிற்கு இடையே ஒன்றைத் தெரிந்துகொள்ளும்போதுதான் அது போராட்டமாகிவிடும். புதிய ஏற்பாட்டு யோசேப்பும் எப்போதும் இரண்டு நல்லவைகளில் ஒன்றைத் தெரிவு செய்வதையே போராட்டமாகக் கொள்கிறார்.

பவுல் எப்படி மனப்போராட்டத்தில் வெல்கிறார்?

ரொம்ப எளிது. தான் நம்பிய இயேசுதான் அவருக்கு அளவுகோல். இயேசுவோடு இயேசுவுக்காக என்றால், 'ஆம்', அப்படி இல்லை என்றால் 'இல்லை'

இவ்விரு புனிதர்களும் நம்முடைய குற்றவுணர்வையும், நம் மனப்போராட்டத்தையும் வெல்ல நமக்கு மாதிரிகளாக நிற்கின்றனர்.


1 comment:

  1. பேதுரு தன் குற்றவுணர்வையும், பவுல் தன் மனப்போராட்டத்தையும் தந்தை பதிவு செய்திருக்கும் அழகு இரு ஓரங்க நாடகங்கள் பார்த்த திருப்தியையும்,உணர்வையும் தருகின்றன.ஒருவரின் குற்றவுணர்ச்சியின் போது மூளைக்கும், மனதுக்கும் நடக்கும் போராட்டம்...தந்தையின் கற்பனாசக்தி அபாரம்.
    பவுல் இறைவனைச் சார்ந்து நிற்கையில் அவரிடம் காணப்பட்ட வலிமையும்,தன்னையே சார்ந்து நிற்கையில் அவரிடமிருந்த வலுவின்மையும்.....மாறி மாறி அவரை அலைக்கழித்ததன் வெளிப்பாடே அவரின் மனப்போராட்டம்,
    தங்களை அலைக்கழித்த மனப்போராட்டங்களுக்குத் தங்களை பலிகடா ஆக்காமல் தாங்கள் நம்பியிருந்த இயேசுவை மட்டுமே அளவுகோலாய் வைத்து வாழ்ந்த காரணத்தினால் மட்டுமே இவ்விரு புனிதர்களும் திருஅவையின் தூண்களாகப் போற்றப்படுகின்றனர்.
    ஆத்தும சோதனைக்குட்படுத்தப்பட வேண்டிய விஷயம்...நான் எனக்கு நேரும் குற்ற உணர்வையும்,என்னால் பிறருக்கு நேரும் குற்ற உணர்வையும் எப்படி சமாளிக்கிறேன்?
    என் வலிமையிலும்,வலுவின்மையிலும் நான் யாரைச் சார்ந்துள்ளேன்.? யோசிப்போம்....
    தந்தைக்கு ஒரு யோசனை... தாங்கள் திரைப்பட டைரக்‌ஷன் மற்றும் கதை,வசனம் துறையிலும் தங்கள் கைவரிசையைக் காட்டலாமே! எனனதொரு திறமைகளின் படையெடுப்பு!! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete