Tuesday, June 11, 2019

சிற்றெழுத்து

இன்றைய (12 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:17-19)

சிற்றெழுத்து

'சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழ விடவில்லை' (காண். 1 சாமு 3:19)

'தரையில் விழுவது' என்றால் வீணாவது என்பது பொருள். தொடக்கநூலில் யூதா, தாமார் நிகழ்வில், 'அந்த மரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் தாமாரோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழி மரபு தோன்றாதவாறு தன் விந்தை தரையில் சிந்தி வந்தான்' (காண். தொநூ 38:8) என்ற இறைவார்த்தைப் பகுதியில் இப்பொருள் தெளிவாகிறது.

தரையில் விழும் அல்லது கீழே விழும் எதுவும் வீணாகிறது என்பது விவிலியப் புரிதல்.

நாம் பழக்கடைக்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். ஒரு கிலோ மாம்பழம் வாங்குகிறோம். வாங்கும்போது கடைக்காரர், 'இப்பழங்கள் நன்கு இனிக்கும்' என்கிறார். வீட்டிற்கு வந்து அவற்றை அறுத்துச் சாப்பிட்டால், அது ரொம்பவே புளிக்கின்றது. உடனடியாக, கடைக்காரர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்கிறோம். கடைக்காரர் சொன்ன சொற்கள் வெற்றுச் சொற்களாக இருக்கின்றன.

ஆக, சொற்கள் தாங்கள் எவற்றைக் குறிக்கின்றனவோ அவற்றை நிறைவேற்றவில்லை என்றால் அவை வெற்றுச் சொற்கள் அல்லது பொய்ச் சொற்கள் ஆகின்றன.

நான் நான்கு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, நான் நான்கு மணிக்கு வரவில்லை என்றால் என் சொற்கள் தரையில் விழுந்த சொற்கள் ஆகிவிடுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு. திருச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் தம்மில் நிறைவேறுவதாகச் சொல்கின்றார். மேலும், 'அயோட்டா' என்று அழைக்கப்படுகின்ற கிரேக்க சிற்றெழுத்து-புள்ளி கூட அழிக்கப்படாது என்கிறார்.

'நிறைவேறுவது' என்றால் 'செயல்வடிவம் பெறுவது.'

நான் ஒரு கட்டுரை எழுதவேண்டும் எனச் சொல்கிறேன் என்றால், அந்தக் கட்டுரை எழுதி முடிக்கும்போதுதான் அது செயல்வடிவம் பெறுகின்றது.

இன்று நாம் நம்முடைய சொற்களாலேயே அறியப்படுகின்றோம். நம்முடைய இதயத்தின் நீட்சியே சொற்கள். சொற்களை இலாவகமாகக் கையாள ஒரு வழி சிரிப்பும், அமைதியும். சில இடங்களில் சொற்களை உதிர்க்காமலேயே வெறும் புன்முறுவலால், அல்லது வெறும் அமைதியால் நாம் பதில் கூறிவிட முடியும். நாம் இன்று எப்படிப்பட்ட சொற்களைப் பேசுகிறோம்? அல்லது எழுதுகிறோம்? எவ்வளவு சொற்கள் நிறைவு பெறுகின்றன? எவ்வளவு பொருள்கள் தரையில் சிந்தப்படுகின்றன?

மலைப்பொழிவின் ஒவ்வொரு போதனையும் புனிதத்தையும் மகிழ்ச்சியையும் நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. என்னுடைய வார்த்தைகள் என்னுடைய புனிதத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்றாக இருக்கின்றனவா?

சிற்றெழுத்து தானே, சின்ன வார்த்தை தானே என வார்த்தைகளை வீணடிக்க வேண்டாம். நிறைவேறாத வார்த்தைகள் எல்லாம் வீணான வார்த்தைகளே. அவை பிறக்காமலேயே இருந்திருந்தால், பேசுபவருக்கு நலமாய் இருந்திருக்கும்!

1 comment:

  1. நம் அன்றாட வாழ்க்கை முறையில்,உறவு முறையில் அர்த்தம் கூட்டும் பதிவு.தரையில் விழுவது, செயல் வடிவம் பெறுவது...புழக்கத்தில் உள்ள வார்த்தைகளே! ஆனால் அவற்றின் பயன்பாட்டை இத்தனை ஆழமாக சிந்தித்ததில்லை. உண்மைதான். இதயத்தின் நீட்சியே சொற்கள் என்பதும், ஒரு நூறு வார்த்தைகள் உணர்த்த முடியா விஷயங்களைக்கூட ஒரு மௌனமோ,புன்முறுவலோ உணர்த்திவிடும் என்பதும் கூட அனுபத்தில் கண்ட உண்மைதான்.ஆனால் இந்த உண்மைகளை அவ்வப்போது நாம் ஓரங்கட்டிவிடுகிறோம் என்பதும் கூட உண்மைதான்.என்னுடைய வார்த்தைகள் மலைப்பொழிவின் போதனை அளவிற்கு புனிதத்தையோ, மகிழ்ச்சியையோ புகட்டவில்லை என்றால் கூடத் தப்பில்லை; அவை கேட்பவரின் இதயத்தை இரணப்படுத்தாமல் இருந்தாலே போதும்.ஒருமுறை உதிர்த்து விட்டால், நாமே நினைத்தாலும் அள்ள முடியாத,அழிக்க முடியாத வீணான வார்த்தைகளைத் தவிர்ப்போம்.
    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந்தற்று” எனும் வள்ளுவனின் வாக்கை மெய்ப்பிப்போம்.
    “நிறைவேறாத மற்றும் வீணான வார்த்தைகள் பிறக்காமலேயே இருந்திருந்தால், பேசுபவருக்கு நலமாய் இருந்திருக்கும்!” தந்தையின் வார்த்தைகள் கொஞ்சம் சூடாகவே வந்து விழுகின்றன.சிந்தித்து, செயல்படுத்தும் ஒரு வாழ்க்கையை வாழ நம்மைத் தூண்டும்ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என்வாழ்த்துக்களும்!நன்றிகளும்!!!

    ReplyDelete