Thursday, June 13, 2019

மனந்தளராமல்

இன்றைய (13 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:20-26)

மனந்தளராமல்

இன்றைய முதல் வாசகத்தில் (2 கொரி 3:15-4:1, 3-6) நாம் மையமாக் காணும் 'மனந்தளராமல்' என்ற வார்த்தையையும், நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் 'மனத்தாங்கல்' என்னும் வார்த்தைiயும் எடுத்து இன்று நாம் கொண்டாடும், புனித பதுவை நகர் அந்தோனியார் வாழ்வோடு இணைத்து சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், மலைப்பொழிவின் ஒரு பகுதியாக, சினங்கொள்ளுதல் பற்றிப் பேசும் இயேசு, 'உங்கள் காணிக்கைகளைச் செலுத்த வரும் போது ... மனத்தாங்கல் ... உண்டென நினைவுற்றால்' என்கிறார். இங்கே என்னுடைய மனத்தாங்கல் அல்ல. மாறாக, மற்றவருடைய மனத்தாங்கலே முன்வைக்கப்படுகிறது. ஆக, நான் அடுத்தவரின் கால்களில் நின்று உணர அழைக்கப்படுகிறேன்.

மனத்தாங்கல் எப்போது வருகிறது?

மனத்தாங்கல் என்பது மனதில் விழுந்த ஒரு சிறு கீறல். அந்தக் கீறலை நாம் தொடர்ந்து வைத்திருக்கும்போது அது பெரிதாகிக்கொண்டே வரும் - கொஞ்சமாய் கிழிந்த செருப்பை தொடர்ந்து போட்டால் முழுவதும் கிழிந்துவிடுவது போல. ஆங்கிலத்தில் 'a stitch in time saves nine' என்ற பழமொழி உண்டு. அதாவது, சரியான நேரத்தில் நாம் ஒட்டுப்போடுவது இன்னும் கிழிவதையும், பல முறை ஒட்டுப்போடுவதையும் தவிர்க்கிறது.

கீறல் விழக் காரணமாக இருப்பது யார்? 'நான் அனுமதித்தால் ஒழிய என்னை யாரும் காயப்படுத்த முடியாது' என்ற பக்குவம் பெற்றவருக்கு, கீறல் தன்னால் தான் வருகிறதே அன்றி, அடுத்தவரால் வருவதில்லை என்பது தெரியும். ஆக, கீறலை அனுமதிப்பதும் அனுமதிக்காமல் இருப்பதும் என் கையில்.

இரண்டாவது, அதீத சிந்தனையைக் கட்டுப்படுத்த வேண்டும். நான் இந்த நொடி இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். ஒரு மனம் தட்டச்சு செய்கிறது. இன்னொரு மனம் நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. நினைத்துக்கொண்டிருக்கிற மனம்தான் என்னுடைய ஈகோ. இந்த ஈகோவை நான் கட்டுப்படுத்த வேண்டும்.

புனித அந்தோனியார் மிகப் பெரிய போதகராக வளர்ந்த நேரம், அவருடைய வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத அவருடைய துறவு இல்லத் தலைவர் அவரை பாத்திரம் கழுவும் பணிக்கு அமர்த்துகிறார். ஆனால், அந்தோனியார் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை. 'எனக்கு போதிக்கவும் தெரியும், பாத்திரம் கழுவுவம் தெரியும். நீர் என்னை அனுமதிக்காததால் என் போதனை தாழ்ந்து போவதுமில்லை. நான் வீழ்ந்துபோவதுமில்லை' என்ற ஒரு நேர்முக மனப்பாங்கு கொண்டிருந்தார். தனக்கு வெளியே இருந்து வரும் எதுவும் தன் மனத்தைக் கீற அவர் அனுமதிக்கவே இல்லை.

இந்த மனப்பாங்கைப் பெற, இன்றைய முதல் வாசகம் சொல்வது, 'மனந்தளராமல்' இருப்பது. 'நாங்கள் மனந்தளராமல் இருக்கிறோம்' என்கிறார் பவுல். உடல் தளர்ந்தால் அது உடலை மட்டுமே பாதிக்கும். ஆனால், மனம் தளர்ந்தால், அது மனத்தை, உடலை, உறவை என அனைத்தையும் பாதிக்கும்.

என் வாழ்வின் தெரிவுகளில் நான் மனந்தளராமல் இருந்து, அதீத எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, 'என் வாழ்க்கை என் கையில்' என்று வாழும்போது மனத்தாங்கல் வருவதில்லை.

என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதில் அல்ல என் மகிழ்ச்சி. என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் என்னிடம் உள்ளது மகிழ்ச்சி. இந்த மனநிலையைப் பெற்றிருந்த புனித அந்தோனியார் நமக்கு முன்மாதிரி.

2 comments:

  1. “என் வாழ்வும்,அதை நான் வளமாக வைத்துக்கொள்வதும் என் கைகளில் மட்டுமே இருக்கிறது” எனும் வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லும் ஒரு பதிவு. இவ்வரிகளை நான் இங்கு டைப் செய்ய, என் கைகளில் இருக்கும் இலாவகம் இதை மனத்தளவில் ஏற்றுக்கொள்ள இருக்குமா எனில் கேள்விக்குறியே! “அடுத்தவரின் ‘மனத்தாங்கலுக்கு’ காரணமாக நான் இருக்க மாட்டேன்” என உரக்கச் சொல்லமுடிந்த என்னால் “ நான் அனுமதித்தால் ஒழிய என்னை யாரும் காயப்படுத்த முடியாது” என்று சொல்ல முடியுமா? அதற்கும் கேள்விக்குறியே என் பதில். ஒருவேளை ‘அது சாத்தியமே’ என என்னால் நினைக்க முடிந்தால் அதை என் arrogance எனும் எதிர்மறை உணர்வாகவே நான் கருதுவேன். ஆனால் தந்தை இங்கு குறிப்பிடுவது அதற்கும் ஒரு படி மேலே ...... வெளியே இருந்து வரும் எதுவும் என்னைப் பாதிக்காத “நான்”, “ எனது” எனும் நிலையைக்கடந்த ஒரு மனநிலை...புனித அந்தோணியாரது போன்ற ஒரு துறவியின் மனநிலை. வாழ்க்கை என்னை உச்சத்தில் வைக்கும்போதும்,எச்சமாகத் தூக்கி எறியும் போதும் கொண்டிருக்க வேண்டிய ஒரே மனநிலை.அது அத்தனை எளிதா? இங்கே “ என் உடல் தளரலாம்; ஆனால் மனம் தளர்ந்தால் அது மனத்தை,உடலை,உறவை என அனைத்தையும் பாதிக்கும்” எனும் எச்சரிக்கை மணி பவுலடியாரை எச்சரித்ததைப்போல என்னையும் எச்சரிக்க வேண்டும். “பிறர் என்னை ஏற்கும் போதும்,வெறுக்கும் போதும் என்னிடம் உள்ள என் மகிழ்ச்சிக்குப் பங்கமில்லை” எனும் மனநிலையை நமதாக்கப் புனித அந்தோணியார் நமக்கு முன் மாதிரியாக இருப்பாராக! மனம் முடியாதன முரண்டு பிடிக்கும் விஷயங்களையும் “ முயன்றுதான் பாருங்களேன்!” என்று சொல்ல வரும் தந்தைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!!!

    ReplyDelete