Friday, June 7, 2019

வாடகை வீடு

இன்றைய (8 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 28:16-20, 30-31)

வாடகை வீடு

வாடகை வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா? அல்லது வசித்திருக்கிறீர்களா?

சாலைகளில் சில சமயங்களில் மக்கள் வீடு மாறிச் செல்லும்போது வாகனங்களில் பொருள்களைச் சுமந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். வாடகை வீடு நமக்கு ஒரு இரண்டாங்கெட்டான் உணர்வைத் தரும். நாம் இருக்கும் இடம் நமக்குச் சொந்தம். ஏனெனில், நாம் வாடகை கொடுக்கிறோம். அதே இடம் நமக்குச் சொந்தமல்ல. ஏனெனில், அது வேறொருவருடையது. 'இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு ஊரெல்லாம் வீடு' என்பது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் நேர்முகமான உணர்வைக் காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு கட்டுவதை விட வாடகைவீட்டில் வாழ்வதையே மக்கள் விரும்புகிறார்கள். பணி, படிப்பு என்று புலம்பெயர்தல் நடக்கும் போது சொந்த வீட்டைவிட வாடகை வீட சௌகரியமானது.

வாடகை வீட்டில் சில அசௌகரியங்கள் இருந்தாலும், வாடகை வீடு நமக்கு பெரிய வாழ்க்கைப் பாடத்தைச் சொல்கிறது.

நம் ஆன்மா குடியிருக்கும் வாடகை வீடுதான் நம்முடைய உடல். உயிரை இரவல் கொடுத்தவன் அதை எடுத்தவுடன், உடலை வாடகைக்குக் கொடுத்த மண் அதை தனக்கென எடுத்துக்கொள்கிறது.

நம் தாயின் கருவறை நாம் தங்கியிருந்த வாடகை வீடுதான். திருமணம் வரை தங்கும் பிறந்த வீடு, திருமணம் முடிந்தவுடன் தங்கும் மாமியார் வீடு, வேலைக்காக வெளிநாட்டில் தங்கியிருக்கும் வீடு, விடுதி, படிக்கும்போது, பணியிடத்தில் தங்கியிருக்க என நாம் தற்காலிகமாக வைத்திருக்கும் அனைத்துமே வாடகை வீடுகளே.

நம்முடைய உறவுகளும் வாடகை உறவுகளே. நாம் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் உறவுகள் வாடகை உறவுகளே. உறவுகள் - இரத்த, திருமண, உடன்படிக்கை - அனைத்துமே நமக்கு உடைமை அல்ல. பாதியில் வந்த அனைத்தும் பாதியில் செல்ல வேண்டும், ஒன்றுமில்லாமல் வந்தவன் ஒன்றுமில்லாமலேயே செல்ல வேண்டும் என்பதே வாழ்வியில் நியதி.

ஆனால், பாதியில் வந்த உறவு என்றாலும் உறைவிடம் என்றாலும் உயிர் என்றாலும் உடல் என்றாலும் அதை நாம் எப்படிப் பயன்படுத்தி நம்மையே நிறைவாக்கிக்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

இன்றைய முதல் வாசகத்தில், 'பவுல் தனி வீட்டில் தங்கியிருந்தார்,' 'பவுல் இரண்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்' என பதிவு செய்கிறார் லூக்கா. பவுல் தன்னுடைய பழகும் திறன் மற்றும் உறவைப் பயன்படுத்தி, சிறையிலிருந்து வெளியேறி வீட்டுச் சிறைக்குச் செல்கின்றார். தனி வீடு. ஆனால், காவலாளிகள் இருப்பர்.

அங்கே பவுல் ஞானம் பெறுகிறார்.

தன்னை அழிக்கத் துடிக்க நினைத்த யூதர்களை அழைத்துப் பேசுகிறார்.

'யூதர்களை எதிரிகள் என்றும், உறுப்பு சிதைப்பவர்கள் என்றும், வயிறே அவர்கள் தெய்வம் என்றும், மானக்கேடே அவர்களுடைய வாழ்க்கை' என்றும் சாபமிட்டவர், அவர்களை வரவழைத்துப் பேசுகின்றார். அதாவது, தன் வாழ்நாள் குறுகியது. இனி சண்டையிட்டு என்ன பயன்? என எண்ணுகின்ற பவுல், அவர்களை அழைத்து மிகவும் சாந்தமாக, 'என் இனத்தாருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேச அழைத்தேன். நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்' என்கிறார். அவருடைய பேச்சில் வெறுப்போ, கோபமோ இல்லை.

வாடகை வீடு தந்த வாழ்க்கைப்பாடம்தான் இது.

வாடகை வீட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பு நம்மை அடுத்தவர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொள்ள நம்மைப் பழக்கும். 'இது நிரந்தரமல்ல' என்ற உணர்வு இருப்பதால் நாம் யாரையும் கண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டோம்.

'ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று என்னிடம் யாராவது சொன்னால், அப்படியா என்று கேட்டுவிட்டு நகரும் மனப்பான்மை' தருவதுதான் வாடகை வீடு. 'இல்லை. அது இரண்டு' என்று வாதிடுவது நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்கும் செயலாகும்.

நிரந்தரமான இறைவனை விட, நிரந்தரமற்ற வாடகை வீடும் நமக்கு வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தரும் - பவுலுக்குப் போல!


1 comment:

  1. “உயிரை இரவல் கொடுத்தவன் அதை எடுத்தவுடன், உடலை இரவல் கொடுத்த மண் அதைத் தனக்கென எடுத்துக்கொள்கிறது.” இத்தனை பெரிய வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்லவா வாடகை வீட்டைக்குறித்த இத்தனை பெரிய பீடிகை தந்தைக்கு? ‘பாதியில் வந்த அனைத்துமே பாதியிலேயே செல்ல வேண்டும்’... என்பதுதான் இன்றையப் பதிவின் கருப் பொருளா? இல்லை..இல்லை... “பாதியில் வந்த உறவென்றாலும்,உயிர் என்றாலும்,உடல் என்றாலும், அதை நாம் எப்படி நிறைவாக்கி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் இரகசியம்” இதுவே இன்றைய கருப்பொருள். தன் எதிரிகளென நினைத்தவர்களைத் தன் வாழ்வின் சுருக்கம் கருதி அவர்களோடு கோபம் மற்றும் வெறுப்பு எட்டிப்பார்க்காத வார்த்தைகளை முன் வைக்கிறார் பவுல்.பவுலுக்கு வாடகை வீடு வாழ்க்கைப்பாடம் தந்தது என்பதற்காக வாடகை வீட்டில் குடியிருக்கும் எல்லோருமா இப்படிப் பாடம் படிக்கின்றனர் என்றால் “ இல்லை” என்பதே என் பதில்.தந்தை ஒரு சொந்த வீடு கட்டி,அதில் ஒருவரை வாடகைக்கு வைத்து,இன்றையப் பதிவின் விஷயங்களெல்லாம் உண்மையா என்று கண்டறிய வேண்டுமென விளைகிறேன்.ஒரே ஒரு பவுல் தான் இருக்க முடியும்.சவுல்களே அதிகம்.நிரந்தரமான இறைவனை விட,நிரந்தரமற்ற வாடகை வீடும் நமக்கு வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தரும்..... நாமும் பவுலைப்போன்று கற்றுக்கொள்ளத் தயாராயிருக்கும் பட்சத்தில். “மனத்தைத் திறந்து வைத்தால் பாடங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் அதில் குடியேறும்”. பாடம் புகட்டிய தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete