Friday, June 21, 2019

தைத்த முள்

இன்றைய (22 ஜூன் 2019) முதல் வாசகம் (2 கொரி 12:1-10)

தைத்த முள்

அருள்பணி உருவாக்கப் பயிற்சி மையத்திலும் மற்ற இடங்களிலும், நான் வகுப்பு எடுக்கும்போது யாராவது தூங்கினால், முன்னெல்லாம் கோபம் வரும். இப்போது என்னவோ, தூங்குபவர் மேல் இரக்கமோ அல்லது பொறாமையோதான் வருகிறது. இதை உணர்வு முதிர்ச்சி என்பதா?

பவுல் இதை இன்றைய முதல் வாசகத்தில் வேறு மாதிரி சொல்கிறார்.

அதாவது, நாம் செய்கின்ற பணி சிலருக்கு ஏற்புடையதாக இல்லையென்றால், அல்லது அது கண்டுகொள்ளப்படவில்லை என்றால், அல்லது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால், அது 'இறுமாப்பு அடையாமல் இருப்பதற்காக கடவுள் ஏற்படுத்திய ஒரு கருவி' என்கிறார் பவுல்.

அதாவது, 'நான் ஒரு நல்ல ஆசிரியர்' என்று நான் இறுமாப்பு கொள்ளாதவாறு, கடவுள் சிலரை வகுப்பில் தூங்க வைக்கிறார்.

இந்தப் புரிதல் ஏற்புடையதோ இல்லையோ, ஆனால், என் மனம் சோர்வு அடையாமல் இது பார்த்துக்கொள்கிறது.

கடந்த சில நாள்களாக நாம் வாசித்துக்கொண்டிருக்கும் கொரிந்து நகருக்கு பவுல் எழுதிய இரண்டாம் திருமுகத்தின் நிறைவுக்கு வந்துவிட்டோம். 'எனக்கு அருளப்பட்ட ஒப்புயவர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது' என்கிறார் பவுல்.

உடலில் தைத்த முள் - இதை வாசிக்கும்போதே உடம்பில் ஒரு முள் தைத்தால் எப்படி இருக்கும் என்று மனம் கேட்கிறது. நம்முடைய தொண்டையில் மீன் முள் சிக்கியிருந்தாலோ, அல்லது இறைச்சியோடு ஒட்டிய எலும்பு சிக்கியிருந்தாலோ நாம் படாத பாடு பட்டிருப்போம். கண்களில் விழுந்த தூசி, செருப்புக்குள் சிக்கிய கல் போன்றவை தரும் நெருடல்கள் வெளிப்புறத்தில் இருந்தாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

பவுலை வருத்திய முள் எது என்று நம்மால் ஊகிக்கத்தான் முடிகிறது. அது அவருடைய உடல்நலக் குறைவாகவோ, அல்லது அவருடைய வயது மூப்போ, அல்லது அவருடைய மன அழுத்தமோ, அல்லது குழுமத்தில் யாராவது ஒருவரோ, அல்லது தன் கடந்த வாழ்வு பற்றிய குற்ற உணர்வோ எதுவாகவும் இருக்கலாம். ஆனால், 'தான் இறுமாப்பு அல்லது பெருமை கொள்ளாதவாறு கடவுள் இதை அனுமதித்துள்ளார்' என அதையும் நேர்முகமாகவே பார்க்கிறார் பவுல்.

மேலும், முள் தைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்ற கடவுளின் குரலையும் கேட்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 6:24-34), இயேசு, 'கவலை வேண்டாம்' எனக் கற்பிக்கிறார். உணவு, உடை, உயிர் பற்றிய கவலைகூட நம் உடலில் தைத்த முள்ளாக நம்மை வருத்தலாம். சில நேரங்களில் காரணமே இல்லாமல் நம் மனம் சோர்வுறும். உடலும் தளர்வுறும். இவை எல்லாமே முள் குத்தும் தருணங்கள்.

'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்பதுபோல, கடவுளைப் பற்றி நாம் நினைத்துக்கொண்டே இருப்பதற்காக, அவரே ஒரு முள்ளை அனுப்புகிறார். பின் அவரே, 'அருள் உனக்குப் போதும்' என்கிறார்.

முள்ளும் நிஜம். அருளும் நிஜம்.


4 comments:

  1. “ நான் ஒரு நல்ல ஆசிரியர் எனும் இறுமாப்பு கொள்ளாதவாறு இருக்க இறைவன் சிலரை என் வகுப்பில் தூங்க வைக்கிறார்.” தன்னைப்பற்றிய இப்படியொரு எதிர்மறையான விமர்சனத்தை வைக்க எத்துணை தைரியம் வேண்டும்! அது தந்
    தைக்கு நிறையவே இருக்கிறது.” உடலில் தைத்த முள்” சொல்லும்போதே உடலின் எங்கோ ஒரு பகுதியில் வலியை உணரமுடிகிறது. தன்னைக் குத்திய முள்ளின் வலியை முழுமையாக உணரும் முன்னரே “ என் அருள் உனக்குப் போதும்” எனும் இறைவனின் வருடும் குரலையும் கேட்கிறார் பவுல். குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுதல் இதுதானோ?காரணமே இல்லாத சோர்வுகளும், உடல் தளர்வுகளும்... இவை எல்லாமே நம்மை இறைவனை நினைக்க வைக்கத்தான்.... கொஞ்சம் ஆறுதல் தரும் நினைப்பு. அவரையே நினைத்துக்கொண்டிருக்க, ஒரு முள்ளையும், அனுப்பி, “என் அருள் உனக்குப் போதும்” என்றும் சொல்கிறார். ஆனால் “முள்ளும் நிஜம்; அருளும் நிஜம்” என்பது நிஜமோ நிஜம். முன்னுக்குப் பின் முரண்..... இது இறைவனையும் விட்டுவைக்கவில்லை.” தூங்கும் மாணாக்கர் குறித்துக் கவலை வேண்டாம்” என ஆசிரியப் பெருமக்களுக்கு ஆறுதல் சொல்லும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete