Wednesday, June 19, 2019

எண்ணங்கள்

இன்றைய (20 ஜூன் 2019) முதல் வாசகம் (2 கொரி 11:18, 21-30)

எண்ணங்கள்

யூடியூபில் நான் விரும்பிப் பார்க்கும் அலைவரிசைகளில் ஒன்று டேனியல் ஆலி என்பவருடையது. பணம், பண முதலீடு, பணம் ஈட்டுதல் போன்ற தலைப்புக்களிலும், பயணம், விவிலியம், மனைவி, மனைவியின் பிறந்தநாள், கிறிஸ்தவ அறநெறி போன்ற கருத்துருக்களிலும் நிறைய காணொளிகள் வெளியிட்டுள்ளார். பணக்காரர் ஆவதற்குத் தேவையான மூன்று குணங்கள் என்று ஒரு காணொளி இட்டார். அவை எவை?

(அ) உன்னை நீயே ஏற்றுக்கொள். அதாவது, நம்மிடம் இருக்கும் இருப்புநிலை - மொழி, நிறம், இனம், கையிருப்பு, உறவிருப்பு அனைத்தையும் ஒரு இன்வென்டரி எடுத்து, இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தவறு, இது சரி, இப்படி இருந்தால் நல்லா இருக்கும், அப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று கற்பனை செய்யக் கூடாது. மாற்ற முடிவதை மாற்ற முடியும், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளத்தான் முடியும் என்ற பக்குவம் அவசியம்.

(ஆ) உன் அதீத ஆசைகளை விட்டுவிடு. 'லஸ்ட்' என்றவுடன் 'காமம்' என்று நாம் நினைக்கத் தேவையில்லை. அதீத ஆசை எதன் மேல் இருந்தாலும் ஆபத்துதான். அது படிப்பாக, புகழாக, பெண்ணாக, ஆணாக, பயணமாக, பொழுதுபோக்காக, குடியாக, போதையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

(இ) உன் எண்ண ஓட்டத்தை நிறுத்து. 'ட்ரிஃப்ட்' என்றால் ஒன்றைச் செய்ய முயலாமல் அதை ஒட்டியே பேசிக்கொண்டிருப்பது. எடுத்துக்காட்டாக, சாப்பிட்டபின் என்ன செய்வது என்பதை சாப்பிட்ட பின் உட்கார்ந்து யோசித்துக்கொண்டு, செய்யவா, வேண்டாமா என மனம் பிளவுபட்டு இருப்பது. இந்த நேரத்தில் நம் மூளை கண்டதையும் சிந்திக்கும். சிந்திக்கும் அனைத்தையும் சரி என்றும் சொல்லும் அது.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல், இந்த மூன்றாம் பிரச்சினையைத்தான் கொரிந்தில் காண்கிறார். அவர்கள் 'எண்ணங்களைச் சீரழியவிட்டுக்கிடக்கிறார்கள்.' மேலும், பவுலின் நற்பண்புகளை எல்லாம் அவருடைய வீக்னஸ் எனப் பார்க்க ஆரம்பித்தார்கள். பவுலை விட்டுவிட்டு இன்னொருவரை எளிதாக ஏற்றுக்கொள்கின்றனர்.

பவுல் தன்னுடைய கையறுநிலையில் இப்படிப் புலம்புகிறார்:

'நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. இனி இருக்கவும் மாட்டேன் ... உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள் மீது அன்பு கொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.'

நம்முடைய கையறுநிலையில் நாம் கடவுளைத் துணைக்கு இழுத்துப் புலம்புவதுபோல பவுலும் புலம்புகின்றார்.

இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 6:7-15), 'மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போக வேண்டாம்' என அறிவுறுத்துகிறார் இயேசு.

மிகுதியான எண்ணங்களும் வேண்டாம்.

மிகுதியான சொற்களும் வேண்டாம்.

நாளை, நாளை மறுநாள், அடுத்த வருடம், அடுத்த பத்து வருடம் என ரொம்ப யோசித்துக்கொண்டே இருக்க வேண்டாம்.

இப்போது நான் விளையாடப் போக வேண்டும். அவ்வளவுதான்!

1 comment:

  1. பணக்கார்ர் ஆகும் ஆசை தந்தைக்கு வந்து விட்டது போலும்!. நம்மையே நாம் ஏற்றுக்கொள்வதும், அதீத ஆசைகளை விட்டொழிப்பதும், மனம் பிளவுபட்டு நிற்கையில் சிந்திப்பதை நிறுத்துவதுமே அதற்கு வழிகள் என்கிறார் தந்தை. நம் மக்களே நம்மைப்புறக்கணிக்கையில்.... நம் கைகளே நம் கண்களைப் பதம் பார்க்கையில் பவுலைப் போன்ற ஒருவர் இறைவனை நோக்கிப் புலம்பாமல் வேறு என்ன செய்ய இயலும்? மிகுதியான சொற்களோ, எண்ணங்களோ , நாளையைப் பற்றிய கவலைகளோ வேண்டாம். இன்றையப் பொழுதை மட்டும் நாம் பார்த்துக்கொண்டால், நாளையப் பொழுதை ‘நாளையே’ பார்த்துக்கொள்ளும். வானத்துப் பறவைகளுக்கு உணவையும், வயல்வெளி மலர்களுக்கு நிறத்தையும் தரும் இறைவன் நமக்குத்... தம் மக்களுக்கு தேவையானதை மறுப்பாரோ? அவரை நம்புவோம். இன்றையப் பொழுதுக்கு வழி சொல்லும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!
    .

    ReplyDelete