Friday, June 14, 2019

ஆம் - இல்லை

இன்றைய (15 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:33-37)

ஆம் - இல்லை

நேற்று மாலை சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். தேவையான சோப்புக்களை எடுத்துக்கொண்டு திரும்பும்போது இடைமறித்த இளவல் ஒருவர், 'சார், ஹேர் ஆயில் செக்ஷனுக்கு வாங்க! க்ரே ஹேர் நிறைய இருக்கு! இதைப் போட்டா சரியாயிடும்!' என்றார். உடனே எனக்கு ஆங்கில எழுத்தாளரின் வார்த்தைகள்தாம் நினைவிற்கு வந்தன: 'க்ரே ஹேருக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அதன் பெயர் கில்லட்டின். அது பிரெஞ்சு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.' ஆக, தலையை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

கறுப்பாக்க, வெள்ளையாக்க நாம் செய்யும் முயற்சிகள் எல்லாம் நம்முடைய வீணான போராட்டமே.

இதை இன்றைய நற்செய்தியில் இயேசுவே சொல்கிறார்.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையில் இருக்க வேண்டிய தூய்மை பற்றிப் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில், வார்த்தையில் இருக்க வேண்டிய தூய்மை பற்றிப் பேசுகின்றார்:

அ. பொய்யாணை இட வேண்டாம்.

ஆ. ஆம்-இல்லை என்பதைவிட மிகுதியாகப் பேச வேண்டாம்.

'இன்று நடப்பதே உனக்குத் தெரியாது. நாளை நடப்பதை அறிந்தவன் போல பேசாதே' என்று நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கிறது. அதாவது, எல்லாம் என் கையில் இருப்பதுபோல நினைத்து ஆணையிடக் கூடாது. ரொம்ப உன்னிப்பாக இதைச் செய்தால் நாம், 'நாளைக்குத் திருமணத்திற்கு வருகிறேன்' என்று கூட யாரிடமும் சொல்ல முடியாது. ஏனெனில், நாளைவரை நாம் உயிரோடிருப்பது நம் கைகளில் இல்லையே.

தன்னுடைய சீடர்கள் மிகக் குறைவான அளவில் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்தலும், 'ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை' என்பது தவிர, வார்த்தைகளைக் கூட்டாமல் இருப்பதும் நம் உடலுக்கும் மனத்திற்கும் நலம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 5:14-21), பவுல், இதையொத்த கருத்து ஒன்றைப் பகிர்கிறார்: 'நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை'

'மதிப்பிடுவது' (to evaluate)

'மனிதர்களை ஒருபோதும் மதிப்பிடக் கூடாது' என்று என்னுடைய பாஸ் அருள்பணி. விமி சார்லி அடிக்கடி சொல்வார். மனிதர்களை மதிப்பிட்டால் அவர்களை அன்பு செய்ய முடியாது. மனிதர்கள் தங்களுக்கென ஒரு விதியை வகுத்துக்கொள்பவர்கள். தாங்கள் செய்யும் எச்செயலையும் நியாயப்படுத்தக் கூடியவர்கள். அவர்களை மதிப்பிட்டால் நமக்குத்தான் விரக்தி ஏற்படும்.

நாம் மதிப்பிடும்போது தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டு ஒருவரை அளக்கிறோம். அளவுகோலுக்கு மேல் போகிறோம்.

தேவையற்றதை வைத்துகொண்டே இருப்பது, கூட்டிக்கொண்டே இருப்பது - நமக்கு, நம் அலமாரிக்கு, நம் வீட்டின் உள்ளறைக்கு, நம் உள்ளத்திற்கு, நம் உடலுக்கு எதுவும் அழகல்ல.

'ஆம்' என்றால் 'ஆம்.' 'இல்லை' என்றால் 'இல்லை.'

'வேண்டும்' என்றால் 'வேண்டும்.' 'வேண்டாம்' என்றால் 'வேண்டாம்.'


5 comments:

  1. உண்மைதான்! அடுத்த நொடி நமக்கு நிச்சயமில்லை என்றான பிறகு யார் தான் தம் எதிர்காலத்தை அறுதியிட்டுக் கூற முடியும்? ஆணை இடுவதே தவறு என்றான பிறகு பொய்யாணை என்பதை எப்படி நாம் அங்கீகரிக்க இயலும்? அடுத்தவரை மதிப்பிடும் நம் அளவுகோல் தவறென்று தெரியவருகையில் நமக்கு மிஞ்சுவதெல்லாம் விரக்தியே!தேவையற்றதை வைத்துக்கொண்டும், கூட்டிக்கொண்டும் இருப்பது நமக்கு,நம் அலமாரிக்கு,நம் உள்ளறைக்கு நம் உள்ளத்திற்கு, நம் உடலுக்கு எதுவும் அழகல்ல.
    ‘ஆம்,’ என்றால் ‘ஆம்’. ‘ இல்லை’ என்றால் ‘இல்லை.’
    ‘ வேண்டும்’ என்றால் ‘வேண்டும்’. ‘ வேண்டாம்’ என்றால் ‘வேண்டாம்.’
    வையகத்தில் வாழ்வாங்கு வாழ வழி சொல்லும் இயேசு பெருமான் மற்றும் பவுலடியாருக்கு மட்டுமல்ல; தந்தையர் யேசுவுக்கும், அமரர் விமி.சார்லி அவர்களுக்கும் சேர்த்தே நம் நன்றிகளை சமர்ப்பிப்போம். தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. என்ன சாமி?? உங்களுக்கு முடி நரைச்சிருச்சா??

    ReplyDelete