Wednesday, June 5, 2019

உரோமையிலும்

இன்றைய (6 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 22:30, 23:6-11)

உரோமையிலும்

நம் வாழ்வில் அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று தெரியாத வண்ணம் ஒரு திரை எந்நேரமும் நம் கண்முன் தொங்கிக்கொண்டே இருக்கிறது. வெகு சில ஞானியரே அத்திரைக்குப் பின் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுகொள்கின்றனர். சிலருக்குக் கடவுள்தாமே கொஞ்சம் திரையை விலக்கிக் காட்டுகின்றார்.

கடவுள் திரையை விலக்கிக் காட்டும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம்.

பவுல் எருசலேமிற்கு வருகின்றார். கைது செய்யப்படுகின்றார். அவருடைய யூத சமூகத்தைச் சார்ந்தவர்களே அவருக்கு எதிராக கிளர்ந்து எழுகின்றனர். எந்த அளவிற்கு என்றால், 'பவுலைப் பிய்த்து எறிந்து விடுவர் என்று ஆயிரத்தவர் தலைவர் அஞ்சிப் படைவீரர் அவரைக் கூட்டிக்கொண்டு செல்லும்' அளவிற்கு.

சிறையின் தனிமையில் இருந்த பவுலை ஆண்டவர் சந்திக்கின்றார்.

'எல்லாம் முடிந்தது! இனி மரணம்தான்!' - என்று நினைத்துக் கொண்டிருந்த பவுலின் அருகில் வருகின்ற ஆண்டவர் சற்றே திரையை விலக்குகின்றார். 'துணிவோடிரும்! எருசலேமில் என்னைப் பற்றிச் சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்று பகர வேண்டும்' என மொழிகின்றார்.

'எருசலேமே முடிவு' என்று நினைத்த பவுலுக்கு, பாதை இன்னும் கொஞ்சம் நீள்கிறது.

'மறுபடியும் மொதல்ல இருந்தா ...!' என்று கூட பவுல் அங்கலாய்த்திருக்கலாம். ஆனால், இறைவன் தன் உடனிருப்பை அவருக்கு உணர்த்துகின்றார்.

இன்று இத்திரை விலகல் பல நேரங்களில் நம் சக மனிதர்கள் வழியாக நடக்கலாம்.

நான் பதினொன்றாம் வகுப்பிற்குச் செல்வதற்கு முன் அந்த நிகழ்வு நடந்தது. அடுத்த நாள் நான் குருமடத்திற்குச் செல்ல வேண்டும். சாப்பாட்டுப் பணம், பள்ளிக் கட்டணம், நோட்டு புத்தகங்கள், செய்முறை நோட்டுகள் என வாங்க ஏறக்குறைய ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. வீட்டில் பணம் இல்லை. இரண்டு மூன்று பேரிடம் கேட்டுப் பார்த்தும் எங்கள் கிராமத்தில் கிடைக்கவில்லை. அன்று எங்கள் வீட்டில் இருந்தது இருபது, முப்பது கோழிகள். மாலையில் ஒருவர் வந்து ஓட்டலுக்கு அவசரமாக கோழிகள் தேவைப்படுகின்றன என்றும், இருக்கின்ற கோழிகளை அப்படியே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு, இப்போதைக்கு ஆயிரம் ரூபாய் வைத்துக்கொள்ளுமாறும், மற்றதை எடை போட்ட பின் அடுத்த நாள் தருவதாகவும் சொல்லிச் சென்றார்.

இங்கே இவரின் கரத்தைக் கடவுளின் கரம் என்று சொல்லி ஆன்மீகமயமாக்கவில்லை. இருந்தாலும், இப்பிரபஞ்சம் யாரோ ஒருவரை அனுப்பி மற்றவரின் கனவை நனவாக்க விழைகிறது. 'துணிவோடிரும்! இன்னும் நீ மதுரை போய் படிக்க வேண்டும்' என்று அந்த நபர் சொல்வது போல இருந்தது.

இதே போன்ற அனுபவங்கள் நமக்குப் பல இருக்கலாம். நாமே பலருக்கு இத்தகைய அனுபவங்களைக் கொடுத்திருக்கலாம்.

ஒன்றை மட்டும் கற்க வேண்டும். வாழ்க்கை எப்போதும் முடிந்துவிட்டது என்று நினைக்கவே கூடாது. வாழ்வின் தொடக்கத்தை நாம் தொடங்கவில்லை. அப்படியிருக்க அதை நாம் எப்படி முடித்துக்கொள்ள முடியும். ஏதோ ஒரு வழியில் வாழ்க்கை நம்மை நடத்திச் செல்லும். மேலும், இந்த நேரங்களில் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடவும் தேவையில்லை. ஒவ்வொருவரின் வழியும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எல்லாரும் ஒரே வழியில் வந்தால் நெரிசல் அதிகமாகிவிடும். ஆக, என் வழியில் நான் நடக்கப் பழகினால் அதுவே எனக்குப் போதும்.

இன்றும் பவுலின் காதுகளில் ஒலித்த அதே குரல் நம் காதுகளிலும் ஒலிக்கிறது.

நாம் தனிமையாக, சோகமாக, விரக்தியில், நோயில், முதுமையில், கையறுநிலையில், வறுமையில் இருக்கும்போது, அவர் சொல்கிறார்: 'துணிவோடிரும்! இன்னும் நீ நகர வேண்டும்!'

3 comments:

  1. இன்றையப்பதிவை மூன்றுமுறை வாசித்தேன். சொற்களில் எந்த ஜோடனையும் இல்லை; எழுத்தில் எந்த இறுமாப்பும் இல்லை.தந்தையின் வார்த்தைகளில் இருந்த உண்மையும்,இயல்பான எளிமையுமே எனனை அத்தனை முறை வாசிக்க தூண்டியது. ஒருவரின் வாழ்வின் திரை விழுவதும்,பின்பு விழுந்த திரை விலகுவதும் வெகு இயல்பான செயல்.திரை விலகினால் மட்டுமே அரங்கத்தின் அதிசயங்களை நம் கண்களால் கண்டு கொள்ள இயலும்.பவுலின் வாழ்வில், தானே திரையை விலக்கும் ஆண்டவர், தந்தையின் இளமையில் அந்தக் கோழிகள் மற்றும் ஓட்டல்கார்ர் மூலம் திரையை விலக்கியுளளார்.நமக்கும் இத்தகைய சம்பவங்கள் பல முறை ஏற்பட்டிருக்கலாம்.அவற்றைக் கண்டுகொள்ளவும் ஒரு மனப்பக்குவம் தேவை என உணர்த்துகிறது இன்றையப்பதிவு.நாம் தொடங்காத ஒரு வாழ்க்கையை நம்மால் எப்படி முடித்துக்கொள்ள இயலும்? நியாயமான கேள்வி; நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். “நாம்தனிமையாக,சோகமாக,விரக்தியில்,நோயில்,முதுமையில்,கையறுநிலையில்,வறுமையில் இருக்கும்போது,அவர் சொல்கிறார்: ‘ துணிவோடிரும்! இன்னும் நீ நகரவேண்டும்!’”...... ஓங்கி ஒலிக்கின்றன தந்தையின் வார்த்தைகள். செவிமடுப்போம்....தன் இயல்புமாறா வார்த்தைகளால் வாசிப்போரின் மனத்தில் நம்பிக்கை விதைகளைத் தூவும் தந்தையை இறைவன் ஆசீர்வதித்துப் பாதுகாப்பாராக!!!

    ReplyDelete
  2. Good Reflection Yesu

    ReplyDelete