மக்களை அனுப்பிவிடும்
'நாம் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்கும்' என்பது நம்மிடையே வழங்கப்படும் பழமொழி. இயேசு போதித்துக் கொண்டிருக்கின்றார். மாலை நேரம் ஆகின்றது. இடமும் பாலை நிலமாக இருக்கின்றது. இதைக் காண்கின்ற சீடர்கள் தாங்களாகவே முன்வந்து, 'உணவு வாங்கிக்கொள்ள மக்களை அனுப்பிவிடும்' என்று சொல்கின்றனர். வாழ்வுதரும் உணவைத் தங்களருகே வைத்துக்கொண்டு வயிற்றுக்கான உணவை மக்கள் வாங்கிக்கொள்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகின்றனர்.
தங்கள் அருகில் இருப்பவரின் வல்லமையை அவர்கள் மறந்துவிட்டனர். அதை விட, ஒரு பிரச்சினைக்கு இதுதான் வழி, இதுமட்டும்தான் வழி என்ற எண்ணத்தில் அவர்கள் மாற்று எண்ணங்களைச் சிந்திக்க மறந்துவிட்டனர்.
சீடர்கள் தங்கள் முன்னே உள்ள மூன்று பிரச்சினைகளைக் காண்கின்றனர்: ஒன்று, பாலை நிலம். இரண்டு, மாலை நேரம். மூன்று, மக்கள் கூட்டத்தின் பசி. பிரச்சினைகள் மூன்று என்றாலும் அவர்கள் தீர்வு என்னவோ ஒன்றாக - 'மக்களை அனுப்பிவிடுதல்' - இருக்கின்றது. இயேசு இன்னொரு தீர்வைக் காண முயற்சி செய்கின்றார். 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.' இப்போதுதான் சீடர்கள் தங்கள் கைகளில் இருப்பதைக் காண முயற்சி செய்கின்றனர்.
அவர்களின் ஆலோசனையை இயேசு ஏற்க மறுத்ததுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறுப்பை அவர்களிடமே கொடுக்கின்றார்.
நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பல நேரங்களில் நாம் தீர்ப்பதற்குப் பதிலாக, பிரச்சினையை அப்படியே ஒதுக்கி அல்லது கூட்டித் தள்ளிவிட நினைக்கின்றோம்.
ஏன்?
நம் திறன்மேல் நம்பிக்கையின்மை.
தோல்வி பற்றிய பயம்.
முயற்சி எடுப்பதற்கான தயக்கம்.
இம்மூன்று காரணங்களுக்காக நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள மறுக்கின்றோம். நமக்கு நாமே பொய்க்காரணங்களை உருவாக்கிக்கொள்ளவும், மாயமான எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் செய்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் இரு இறைவாக்கினர்களைக் காண்கின்றோம். அனனியா என்னும் பொய் இறைவாக்கினர், எரேமியா என்னும் உண்மையான இறைவாக்கினர். மக்கள், அரச அலுவலர்கள், மற்றும் அரசர்களின் நல்லெண்ணத்தைப் பெறும் பொருட்டு, 'எருசலேமுக்கு எதுவும் நேராது' எனப் பொய்யுரைக்கின்றார். அடிமைத்தனத்தின் அடையாளமாக எரேமியா அணிந்திருந்த மரத்தாலான நுகத்தை உடைத்துப் போடுகின்றார். ஆனால், எரேமியாவோ மரத்தாலான நுகம் இரும்பு நுகமாக மாறிவிட்டது என எச்சரிக்கின்றார்.
எதிரிகளின் படையெடுப்பு வரப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தாலும், படையெடுப்பு நடைபெறாது என்று பிரச்சினையை அப்படியே முழுவதுமாக ஒதுக்கி விடுமாறு அரசருக்குக் கற்பிக்கின்றார்.
இன்றைய வாசகங்கள் நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?
(அ) என் வாழ்வின் பிரச்சினைகளை நான் எதிர்கொள்கிறேனா? அல்லது பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறேனா?
(ஆ) என் பிரச்சினைகளை இறைவனின் கண்கொண்டு பார்க்கும்போது தீர்வுகளுக்கான வழிகள் அதிகம் என்பதை உணர்கின்றேனா?
(இ) மற்றவர்களை திருப்திப்படுத்த முயன்ற அனனியா உண்மையிலிருந்து பிறழ்கின்றார். மற்றவரைத் திருப்திப்படுத்துதல் அவருக்கே ஆபத்தாக முடிகிறது. எனவே, பிறரைத் திருப்திப்படுத்தும் பழக்கம் விடுதல் நலம்.
No comments:
Post a Comment