தனக்குத் தானே
கடந்த வாரம் யூட்யூப் சேனல் ஒன்றில், 'மேக்கிங் ஃப்ரண்ட்ஸ் வித் யுவர் லோன்லினஸ்' என்ற காணொளி ஒன்றைப் பார்த்தேன். ஒருவர் தன்னுடைய தனிமையுணர்வோடு நட்பு பாராட்டக் கற்றுக்கொள்தல் பற்றிய அந்தக் காணொளியில் சொல்லப்படுவது என்ன? 'தனிமை' என்றால் என்ன? 'நாம் யாருக்கும் ஒரு பொருட்டு அல்ல என்ற உணர்வுதான் தனிமை.' தனியாக இருப்பதை விட கூட்டத்தில் இருக்கும்போதுதான் தனிமை நம்மை முகத்தில் அறையும். எடுத்துக்காட்டாக, மாலையில் ஒரு பார்ட்டிக்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அங்கே எல்லாரும் ஒருவர் மற்றவரோடு சிரித்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர். என்னிடம் யாரும் பேசவில்லை. நான் அங்கு நிற்பதைக் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. 'ஆக, இங்கே இருக்கும் யாருக்கும் நான் ஒரு பொருட்டு அல்ல' என்ற உணர்வு எனக்கு அங்கே வந்தால் அதுதான் தனிமை. தனிமையில் வாடுபவர்கள் கூட்டத்தை வெறுக்கக் காரணம் இதுவே. இது ஒரு தீமை வட்டம். தனிமை ஒருவரைக் கூட்டத்திலிருந்து விலக்கும். கூட்டம் தனிமையைக் கூட்டும். இப்படி அது ஒரு வட்டமாக வளர்ந்துகொண்டே செல்லும். தனிமையில் ஒரு மிகப்பெரிய நன்மை இருக்கிறது. அதாவது, தனிமையால் நான் என்னுடன் பேச ஆரம்பிப்பேன். அல்லது எனக்குள் இருக்கும் அந்த நபர் என்னுடன் பேச ஆரம்பிப்பார். அந்தக் குரலை நான் கேட்பதோடல்லாமல், அத்தோடு உரையாடவும் தொடங்குவேன்.
'உங்களுக்கு நீங்களே பேசியிருக்கிறீர்களா?'
'எனக்கு நானே பேசுவது' என்பது நம் எல்லாருடைய அனுபவம்.
சுடுதண்ணீரில் குளிப்பதா, குளிர்ந்த நீரில் குளிப்பதா?
காஃபிக்கு இனிப்பு சேர்ப்பதா, வேண்டாமா?
வெளியே செல்வதா? வேண்டாமா?
வெள்ளை சட்டை போடுவதா? கறுப்பு சட்டை போடுவதா?
எனத் தொடங்கி, நாம் நமக்குள்ளே பல விடயங்களைப் பேசிக்கொள்கின்றோம்.
இன்றைய நற்செய்தியில், இரத்தப் போக்குடைய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டு நலம் பெறுவதை வாசிக்கின்றோம். இந்த நிகழ்வை மத்தேயு இப்படிப் பதிவு செய்கின்றார்: 'ஏனெனில், அப்பெண் 'நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும். நலம் பெறுவேன்' எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.'
தனக்குத் தானே சொல்லிக்கொள்வதில் நிறைய தன்னம்பிக்கை பிறக்கும்.
எடுத்துக்காட்டாக, பெரிய கூட்டத்தின்முன் நான் பேசுவதற்கு முன், 'நான் நன்றாகப் பேசுவேன்' என, எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டுகின்றன. இந்தப் பெண்ணும் அப்படித்தான் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறாள்.
ஒருவேளை, இவ்வார்த்தைகளை இவள் தனக்கு வெளியே இருக்கும் யாரிடமாவது சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும்?
'இவள் என்ன முட்டாளா? ஆளைத் தொட்டால் நலமாகலாம். ஆடையைத் தொட்டால் ஆக முடியுமா?' எனக் கேலி பேசியிருக்கலாம்.
'பொது இடத்தில் ஆண் ஒருவரின் ஆடையைப் பெண் தொடுவது ஏற்புடையதன்று' என்று அங்கிருந்தவர்கள் சட்டம் மற்றும் மரபு பேசியிருக்கலாம்.
'கூட்டமாக இருக்குமே! நீ என்ன செய்வ?' என்று அவளுடைய இயலாமையைப் பெரிதாக்கியிருக்கலாம்.
'சும்மா...வீட்டுக்குள்ளேயே இரு! அவரு ஒரு ஆளுன்னு! அவரு நலம் தருவார்னு சொல்லிக்கிற! அவர் என்ன கடவுளா? சாப்பாட்டுக்கு வழியில்லாத தெருப் போதகர்!' என்று இயேசுவைக் கேலி பேசியிருக்கலாம்.
ஆக, இந்த 'நாலு பேரு நான்கு விதமா பேசுவாங்க' என்ற அந்த பேச்சை அவள் கேட்டுக்கொண்டே இருந்திருப்பாள். எழுந்து சென்றிருக்க மாட்டாள்.
அவளை நம்பிக்கை கொள்ள வைத்ததும், எழ வைத்ததும், புறப்பட வைத்ததும், நலம் பெற வைத்ததும், அவள் தனக்குத் தானே பேசிக்கொண்ட அந்த வார்த்தைகள்தாம்.
இளையமகன் தனக்குத் தானே பேசியதால், தன் வார்த்தையைத் தானே கேட்டதால்தான் புறப்பட்டுத் தன் தந்தையிடம் வருகின்றான் (காண். லூக் 15).
சில நேரங்களில், தனக்குத் தானே பேசப்படும் வார்த்தைகள் சோர்வையும், விரக்தியையும் தரலாம். ஆனால், பல நேரங்களில் அது உற்சாகமே தரும். ஏனெனில், நான் பிறந்தது முதல் என்னோடு இருப்பது நான் மட்டுமே. ஆக, என்னை நன்றாக அறிந்தவனும் நான் மட்டுமே.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஓசே 2:14-16, 19-20), இஸ்ரயேலைத் தன் மணமகளாக ஏற்கின்ற கடவுள், அவர்களின் தன்பேச்சு (...) எப்படி இருக்க வேண்டும்? எனக் கற்பிக்கிறார். 'என் கணவனே' என்று சொல், 'என் பாகாலே' என்று சொல்லாதே! ஏனெனில், 'கணவன்' என்று சொல்லும்போது பிரமாணிக்கமும், பாகாலே என்று சொல்லும்போது பிரமாணிக்கமின்மையும் இருக்கும்.
எனக்கு நானே சொல்லும் வார்த்தைகள் என்னுடைய பன்னிரு ஆண்டுகள் இரத்தப் போக்கையும் குணமாக்கிவிடலாம்!
No comments:
Post a Comment