காற்றை விதைக்கிறார்கள்
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஓசேயா வழியாக இஸ்ரயேல் மக்களின் பிரமாணிக்கமின்மையைக் கடிந்துகொள்கின்றார். இரு விடயங்கள் ஆண்டவராகிய கடவுளுக்குக் கோபத்தைத் தருகின்றன: ஒன்று, இஸ்ரயேல் மக்கள் தங்களுக்குத் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இரண்டு, தங்களுக்கென்று சிலைகளைச் செய்து வழிபட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்கள் ஆண்டவராகிய கடவுளைத் தங்கள் வாழ்விலிருந்து மிக சௌகரியமாக வெளியேற்றி விடுகிறார்கள். ஆண்டவராகிய கடவுளை வெளியேற்றிவிட்டு செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வீணானவையும் பயனற்றைவையும் ஆகும் என்பதை இறைவாக்கினர் ஓசேயா பின்வரும் உருவகங்களால் எடுத்துக் கூறுகின்றார்:
(அ) அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்
(ஆ) கடும் புயலை அறுப்பார்கள்
(இ) வளரும் பயிர் முற்றுவதில்லை
(ஈ) கோதுமை நன்றாக விளைவதில்லை
(உ) அப்படியே விளைந்தாலும், அந்நியரே இதை விழுங்குவர்.
'காற்றை விதைக்கிறார்கள்' மற்றும் 'கடும் புயலை அறுப்பார்கள்' என்னும் வாக்கியங்களை இணைத்துப் புரிந்துகொள்வோம். 'காற்றை விதைத்தல்' என்பது பயனற்ற நிலைக்கான உருவகம். சபை உரையாளர் இதையே, 'காற்றைப் பிடித்தல்' என்கிறார். காற்றைப் பிடிக்க முயல்வதும், அதை விதைக்க முயல்வதும் வீணான செயல்களே. இன்னொரு பக்கம் ஒருவர் எதை விதைக்கிறாரோ அதையே அறுவடை செய்வார். அறுவடை காலத்தில் புயல் என்பது பயிருக்கு ஆபத்தான ஒன்று. ஆக, பயனற்ற ஒன்றை விதைத்து, ஆபத்தான ஒன்றை இஸ்ரயேல் மக்கள் அறுவடை செய்கிறார்கள். பயனற்றது என்பது சிலை வழிபாடு. ஆபத்தானது என்பது ஆண்டவரின் கோபம்.
மற்ற மூன்று வாக்கியங்கள், அவர்கள் அடைகின்ற பசியை எடுத்துரைக்கின்றன. அதாவது, தங்கள் வேற்றுத் தெய்வங்களால் அவர்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ள முயன்றாலும் அவர்களுடைய பசி ஆறுவதில்லை.
மொத்தத்தில், ஆண்டவராகிய கடவுளைத் துறந்து மற்ற தெய்வங்களைப் பற்றிக்கொள்தல் பயனற்றது. அச்செயலால் எவரும் நிறைவு பெறுவதில்லை.
இதை இன்றைய நம் வாழ்வுக்கு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?
நேர மேலாண்மைக்கும், நம் ஆன்மிகத்திற்கும் மேற்காணும் உருவகங்கள் பொருள் தருகின்றன.
நேர மேலாண்மையை எடுத்துக்கொள்வோம். அழைப்பு ஒன்றை மேற்கொள்வதற்காக நான் அலைபேசியை எடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதில் வந்துள்ள இன்ஸ்டாகிராம் நோட்டிஃபிகேஷன் கண்டு நான் அதைத் திறக்கிறேன். அதிலிருந்து சில ரீல்ஸ் பார்க்கத் தொடங்குகிறேன். இப்படியே நேரம் கடக்கின்றது. அழைப்பையும் நான் மேற்கொள்ளவில்லை. என் நேரமும் வீணாகிவிட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் நான் காற்றையே விதைக்கிறேன். ஒவ்வொரு பொழுதும் மேன்மையான பொழுது. அதை நான் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, காற்றை விதைப்பதற்கு அல்ல.
ஆன்மிகத்தைப் பொருத்தமட்டில், என் தேடுபொருள் யார்? இறைவனாக இருக்கிறார் என்றால் என் பசி ஆறும். மற்ற அனைவரும் மற்ற அனைத்தும் வெற்றுப் பாத்திரங்களே. ஒரு வெற்றுப் பாத்திரம் இன்னொரு வெற்றுப் பாத்திரத்தை ஒருபோதும் நிறைக்கவே முடியாது. இதையே புனித அகுஸ்தினார், 'உமக்காகவே படைக்கப்பட்ட எங்கள் இதயங்கள் உம்மில் அமைதி காணும் வரை அவை அமைதி கொள்வதில்லை' என்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 9:32-38), இயேசு பேயை ஓட்டுகின்றார். அவர் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுவதாக பரிசேயர்கள் சொல்கின்றனர். ஆனால், இயேசு அதைப் பொருட்படுத்தவில்லை. ஆயரில்லா ஆடுகள் போல இருந்த மக்களைக் கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்கின்றார்.
பரிசேயர்கள் காற்றை விதைக்கின்றனர்.
இயேசுவோ பரிவை விதைக்கின்றார். கடவுள் நம்மேல் காட்டும் பிரமாணிக்கத்தின் வெளிப்பாடே பரிவு.
ஆண்டவரைத் தலைவராக மேற்கொள்ளாத மனித இனத்திற்கு ஏற்படும் கோர விளைவுகள்! மாறாக எந்த விதமான ஆசாபாசங்களாலும் நிரப்பப்படாத வெற்றுப் பாத்திரங்களாக நாம் இருந்தால் மட்டுமே இயேசுவால் அங்கே பரிவை விதைக்க முடியும்.ஆன்மீகத்தால் நிரப்பமுடியும்! அகுஸ்தினாரின் வார்த்தைகளி்ல் அவருக்காகப் படைக்கப்பட்ட நம் இதயங்கள் அவரிலேயே அமைதி காண முடியும்! நம் வெற்றுப்பாத்திரங்களை எதைக் கொண்டு நிரப்ப ப் போகிறோம்? யாரேனும் ஒருவருக்காவது ஒரு அன்பின் செயல் புரிவோம் இன்று! அழகான பதிவு! தந்தைக்கு நன்றி!
ReplyDelete