'நோ' சொல்வது
ஈசோப்பு கதைகளில் நம் அனைவருக்கும் அறிமுகமான ஒரு கதை: 'அப்பாவும், மகனும் கழுதை சுமக்கும் கதை.' கழுதையின்மேல் ஏறிச்சென்ற இருவரும் ஊரார் பேச்சைக் கேட்டு, கடைசியில் ஒரு கம்பில் கழுதையைக் கட்டி, இருவரும் தூக்கிச் செல்ல, கழுதை மிரண்டு இவர்களையும் கீழே தள்ளி, அதுவும் கிணற்றில் விழுந்துவிடும்.
எல்லாரையும் திருப்திப்படுத்த முயல்வது ஆபத்து என்பது கதையின் பொருளாகச் சொல்லப்படும்.
எல்லாரையும் திருப்திப்படுத்த அவர்கள் முயன்றதற்குக் காரணம், அவர்கள், மற்றவர்களுக்கு 'நோ' சொல்லத் தவறியதுதான்.
நாம் 'நோ' சொல்லத் தவறிய நேரங்கள் ஏராளம் இருக்கலாம்.
மற்றவர்களுக்கு 'நோ' சொல்லாமல், மற்றவர்கள் மனம் நோகக்கூடாது என நினைத்து, மற்றவர்கக்காக சுமைகள் சுமந்த நேரங்கள் நிறைய இருக்கலாம்.
ஆனால், 'நோ' சொல்வது எல்லா நேரத்திலும் சரியா?
இஸ்ரயேல் மக்கள் சொன்ன 'நோ' என்ன என்பதை அவர்களுக்கு இறைவாக்கினர் எரேமியா வழியாகச் சுட்டிக்காட்டுகிறார் ஆண்டவராகிய கடவுள்:
'பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.
தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்!'
மிக அழகான உருவகம் இது. இது ஒரு விவசாய சமூக உருவகம். எனக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் ஒரு புறம் வற்றாத நீரூற்று இருக்கிறது. தோட்டத்தின் இன்னொரு புறம், தண்ணீர் தேங்காத, அல்லது ஆழம் குறைந்த, அல்லது மடைகள் உடைந்து போன கண்மாய் அல்லது ஊருணி இருக்கிறது. நான், நீரூற்றுடன் உள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு, என்னைக் கண்மாயுடன் இணைத்துக் கொண்டால் என்ன ஆகும்? கண்மாய் சீக்கிரம் வற்றிவிடும். அல்லது உடைந்த மதகுகள் வழியே தண்ணீர் வெளியேறிக் காய்ந்துவிடும். எந்த நிலையிலும் இழப்பு என் தோட்டத்திற்குத்தான்.
நான் ஏன் நீரூற்றைப் புறக்கணித்தேன்?
நீரூற்று காணக்கூடிய அளவில் இல்லை. அது மிகச் சிறிய அளவில் இருந்தது. அதில் எந்தவொரு ஈர்ப்பும் இல்லை.
ஆனால், கண்மாய் பார்ப்பதற்குப் பெரிதாகவும், அகலமானதாகவும், ஆழமாகவும் இருந்தது. இருந்தாலும் அது உடைந்து போயிருந்தது எனக்குத் தெரியவில்லை.
இஸ்ரயேலில் இதே பிரச்சினைதான் இருந்தது.
ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு வாழ்வுதரும் நீரூற்றாக இருந்தாலும், அவர் சிறிய நீரூற்று போல மறைந்து இருந்தார்.
ஆனால், அவர்கள் கண்முன் இருந்த பிற தெய்வங்களின் சிலைகளும், அவற்றின் ஆலயங்களும், வழிபாடுகளும் மிகவும் ஈர்ப்பதாக இருந்தன.
ஆகவே, இஸ்ரயேல் மக்கள், குறிப்பாக, யூதா நாட்டினர், தங்கள் கடவுளுக்கு, 'நோ' சொல்லிவிட்டு, பிற தெய்வங்களுக்கு, 'யெஸ்' சொல்கிறார்கள்.
குருக்கள், திருச்சட்டத்தைப் போதிப்போர், ஆட்சியாளர், இறைவாக்கினர் என மேல்தளத்தில் நிற்பவர்கள் கடவுளுக்கு 'நோ' சொல்கிறார்கள். அவர்களை மற்றவர்களும் பின்பற்றுகிறார்கள்.
இன்று நான் என் வாழ்வில், கண்மாய்களுக்கும், உடைந்த ஊரணிகளுக்கும் 'நோ' சொல்லலாம். ஆனால், வாழ்வுதரும் ஊற்றாகிய கடவுளுக்கு 'நோ' சொல்வது தவறு.
புனித அகுஸ்தினார் தன் வாழ்வில், தன்னுடைய அறிவுசார் தேடல்கள் என்னும் கண்மாய்களிலும், புலனின்பங்கள் என்னும் உடைந்த குட்டைகளிலும், இறுமாப்புநிறை பேரார்வம் என்னும் மதகுகள் இல்லாத ஊரணிகளிலும் தன் வாழ்விற்கான ஆதாரத்தைத் தேடினார். ஆனால், அவைகளால் அவருக்கு நிறைவுதர முடியவில்லை. தன் பார்வையை அவற்றிலிருந்து திருப்பும் அவர், வாழ்வுதரும் நீரூற்றைக் கண்டடைகின்றார். பின்னதற்கு 'யெஸ்' சொன்ன அதே நொடி, முன்னவற்றுக்கு 'நோ' சொல்கிறார்.
ஒரே நேரத்தில், இரண்டிற்கும் 'யெஸ்' சொல்வது, தோட்டத்திற்கும் நீர் கிடைக்காமல், நீரும் சேமிக்கப்படாமல் வீணாகும் ஆபத்தில் முடியும்.
ஒன்றுக்கு 'நோ' என்பது, இன்னொன்றுக்கு 'யெஸ்.' எதற்கு எனப் பகுத்தாய்ந்து தெரிவு செய்வதே ஞானம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 13:10-17) உவமைகளின் வழியாக பேசுவதன் நோக்கத்தை எடுத்துரைக்கின்றார் இயேசு. 'விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது' என்று தன் சீடர்களிடம் சொல்கின்றார் இயேசு. இயேசுவின் சீடர்கள் அவரைத் தேர்ந்துகொண்டதால் நேரடியாக அவரிடமிருந்து மறைபொருளைக் கற்றுக்கொள்கின்றனர். மற்றவர்களோ தூரத்தில் நிற்கின்றவர்கள். தூரத்தை நிரப்புகின்றன உவமைகள்.
No comments:
Post a Comment