எளிதானவையும் நன்மையானவையும்
'இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.'
இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியை வாசித்தவுடன், அதைக் கொஞ்சம் நீட்ட வேண்டும் போல இருக்கிறது:
'இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார் ... ஆனால், அவருடைய சீடர்களும், நாமும் அங்கேயே நின்றுகொண்டு அவருடைய அறிவுரைகளை மட்டும் பிடித்துக் கொண்டு நிற்கிறோம்!'
இன்றைய நற்செய்தி வாசகமும், முதல் வாசகமும் (காண். எசா 1:11-17), எளிமையானதற்கும், நன்மையானதற்கும் உள்ள இடைவெளி பற்றிப் பேசுகின்றன.
இதை எப்படி உருவகிப்பது?
உயரம் தாண்டுதல் போட்டியைப் பார்த்திருப்போம். அல்லது சிறுவயதில் நாமே அந்த விளையாட்டை விளையாடியிருப்போம். உயரம் தாண்டுபவருக்கென்று ஒரு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த இலக்கில் ஒரு குச்சி பொருத்தப்படும். உயரம் தாண்டுபவர் தன்னுடைய கையில் இருக்கும் கம்பை நிலத்தில் ஊன்றி, அந்த உந்துவிசையால் மேலே எழும்பி, அந்தக் குச்சிக்கு அருகில் சென்றவுடன், தன் கம்பைத் தான் வந்த பக்கம் உதற வேண்டும். உதறிய அதே வேகத்தில் அவர் குச்சிக்கு அந்தப் பக்கம் செல்ல வேண்டும். இச்செயல்களில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் - கம்பைச் சில நொடிகள் கூட அல்லது குறையப் பிடித்திருந்தாலோ, அல்லது வந்த திசை பார்த்து உதறவில்லை என்றாலோ, குச்சியின் அடுத்த திசைக்கு ஏறிச் செல்லவில்லை என்றாலோ - அவரால் உயரம் தாண்ட முடியாது. அல்லது போட்டியில் வெல்ல முடியாது.
இதை நம் ஆன்மீக வாழ்விற்கு அப்படியே பொருத்திப் பார்த்தால், நாம் நிற்பது இப்பக்கம். கடவுள் நிற்பது அப்பக்கம். அப்பக்கம் கடந்து செல்வதற்கு நம் கைகளில் கொடுக்கப்படுகின்ற கம்புதான், நாம் வைத்திருக்கின்ற விவிலியம், திருஅவைச் சட்டம், அருளடையாளங்கள், அருள்கருவிகள், அருள்பணியாளர்கள், ஆன்மீக முன்னோடிகள் அனைத்தும். இவற்றை வைத்து நாம் மேலே எழும்பிச் செல்லலாம். ஆனால், அக்கரைக்குப் போவது நம் கம்பைக் கைவிடுவதில்தான் இருக்கிறது. இவற்றைப் பிடித்துக்கொண்டு அப்பக்கம் செல்வது சாத்தியமன்று. அப்படி முயற்சி செய்தால், நாம் தாண்ட வேண்டிய குச்சியையும் சேர்த்து நாம் தள்ளுவதுடன், புறப்பட்ட மண்ணிலேயே மீண்டும் விழுந்துவிடுவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்டிக்கின்றார். ஏனெனில், அவர்கள் காணிக்கைகள் செலுத்துவது, தூபம் காட்டுவது, திருவிழாக்கள் கொண்டாடுவது, எரிபலிகள் செலுத்துவது என நிறுத்திக் கொண்டனர். ஏனெனில், இவை எளிதானவை. இவற்றை விட்டுவிட்டால் தங்கள் அடையாளம் போய்விடும் என நினைத்தனர். ஆனால், ஆண்டவராகிய கடவுளைப் பொருத்தவரையில், ஒருவர் இவற்றை விடும்போது, தன்னிலே விடுதலை பெற்றவர் ஆகிறார். அப்படி விடுதலை பெறுபவர், எளிமையானவற்றைச் செய்வதை விடுத்து, நன்மையானவற்றைச் செய்ய ஆரம்பிப்பார்: 'தன் தீச்செயலை விட்டுவிடுவார், நன்மை செய்யக் கற்றுக்கொள்வார், நீதியை நாடித் தேடுவார், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்வார், திக்கற்றோருக்கு நீதி வழங்குவார், கைம்பெண்ணுக்காக வழக்காடுவார்.'
நற்செய்தி வாசகத்தில், இயேசு, தன் அறிவுரையை முடித்தவுடன், 'கற்பிக்கவும், நற்செய்தி அறிவிக்கவும் புறப்பட்டுச் செல்கின்றார்.' அதாவது, தன் அறிவுரைகள் அல்லது கட்டளைகள் ஒருபக்கம் இருக்கட்டும் என நினைத்த அவர், இப்பக்கத்திலிருந்து அப்பக்கத்திற்குக் கடந்து போகின்றார். ஆனால், இன்று நாம் செய்வது என்ன?
இயேசு கொடுத்த அறிவுரைகளை அழகாக ஒரு புத்தகமாக எழுதி, அதை வெல்வெட் பைண்டிங் செய்து வைத்துக்கொண்டு அழகு பார்ப்பதிலும், அதன் அடிப்படையில் சட்ட ஒழுங்கை வரையறுத்து, யார் மீறுகிறார், யார் மீறுவதில்லை என்று ஆராய்ச்சி செய்வதிலும், மீறுபவரை விமர்சனம் செய்வதிலும், மீறாதவர் மேல் குற்றம் காண்பதிலும் நம் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
'கற்பித்தலும், நற்செய்தி அறிவித்தலும்' அன்றாட வாழ்வில் நடைபெற வேண்டுமெனில், நாம் அப்பக்கத்திற்குக் கடந்து செல்ல வேண்டும்.
புத்தகத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டே இருத்தல் எளிமையானது. ஆனால், படிப்பதே நன்மையானது.
அரிசியை வாங்கிப் பார்த்துக் கொண்டே இருந்தல் எளிமையானது. ஆனால், சமைத்து உண்ணுதNலு நன்மையானது.
மருந்துகளை வாங்கிப் பார்த்துக் கொண்டே இருத்தல் எளிமையானது. ஆனால், அவற்றின் கசப்பைப் பொருட்படுத்தாமல் உண்ணுதலே நன்மையானது.
சிலுவையைச் சுமக்க வேண்டும் என்ற எண்ணம் எளிமையானது. ஆனால், சுமப்பது நன்மையானது.
எளிமையானதிலிருந்து நன்மையானதற்கு நாம் கடப்பதே இறைவன் விரும்புவது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
No comments:
Post a Comment