வெறும் மனிதனல்ல
நான் உரோமைக்குச் சென்ற புதிதில், ஒருநாள் சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எனக்கு எதிரே ஒரு தாய் தன் குழந்தையைக் கூட்டி வந்துகொண்டிருந்தார். அந்தக் குழந்தை முன்னே நடந்துகொண்டிருக்க, அதன் இடுப்பில் ஒரு கயிறு கட்டியிருந்தது. அந்தக் கயிற்றின் மறுபக்கத்தை அந்தத் தாய் தன் கைகளில் பிடித்திருந்தார். குழந்தையின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, அதைப் பிடித்துக்கொண்டே தாய்மார்கள் வருவதை நான் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தேன். நம் ஊரில் குழந்தைகள் முன்னால் நடக்க, தாய்மார்கள் பின்னால் நடப்பர். இவர்கள் குழந்தைகளைக் கயிறுகளால் அல்ல, மாறாக, தங்கள் கண்களால் கட்டிக்கொள்கின்றனர்.
குழந்தையின் இடுப்பில் கயிற்றைக் கட்டி அதை நடத்திச் செல்வது என்னும் உருவகத்தை இன்றைய முதல் வாசகத்தில் காண்கின்றோம். இஸ்ரயேல் மக்களை மணமகள் அல்லது மனைவி என அழைத்த ஆண்டவராகிய கடவுள், இன்று, அவர்களை, 'மகன்' என அழைக்கிறார்.
'எகிப்திலிருந்து (அடிமைத்தனத்திலிருந்து) அவர்களை (என் மகனை) அழைத்து வந்தேன்' என்கிறார். அதாவது, இழுத்துச் செல்லப்பட்டவர்களை அழைத்து வருகின்றார் கடவுள். இதே இறைவாக்குப் பகுதியைத்தான் புனித மத்தேயு தன் நற்செய்தியில் மேற்கோள் காட்டி, குழந்தை இயேசு எகிப்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் அழைத்து வரப்பட்டதைக் குறிப்பிடுகின்றார் (மத் 2:15).
'பரிவு என்னும் கட்டுக்களால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி அவர்களை நடத்தி வந்தேன்' என்கிறார்.
இங்கே, கட்டுக்கள் என்பது காயத்திற்கு இடப்பட்ட கட்டுக்கள் என்றும் சொல்லலாம். அல்லது குழந்தைகளைச் சுற்றிக் கட்டப்படும் துணி என்றும் சொல்லலாம். அன்புக் கயிறுகள் என்பதையும் அடிமைகளைக் கட்டியிருக்கும் கயிறுகள் என்றும், குழந்தைகளின் இடுப்பில் கட்டி நடை பழக்கப் பயன்படும் கயிறுகள் என்றும் சொல்லலாம்.
மொத்தத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன் வழிநடக்கிறார்.
இறுதியாக,
இஸ்ரயேல் மக்கள் வழிதவறிச் சென்றாலும் அவர்கள்மேல் அவர் கோபத்தைக் காட்டவில்லை. 'என் கோபம் அகன்றுவிட்டது. என் இரக்கம் பொங்கி வழிகின்றது' எனச் சொல்கின்ற கடவுள்,'கோபப்பட நான் மனிதல்ல. நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர்' என்கிறார்.
வழிதவறிச் செல்லும் குழந்தைகளைக் கடிந்துகொள்வது பெற்றோரின் இயல்பு. பெற்றோர்கள் கடிந்துகொண்டு, பின் குழந்தையைத் தழுவிக்கொள்கின்றனர். ஆனால், கடவுள் அப்படிச் செய்வதில்லை. அவர் கடிந்துரைப்பதே இல்லை. தழுவிக்கொள்ள மட்டுமே செய்கின்றார்.
மகாத்ரியா அவர்களின் 'உணர்வு முதிர்ச்சி' என்கிற காணொளியில், 'உணர்ச்சி நாடகம்' பற்றிப் பேசுகிறார். அதாவது, நாம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சில நாடகங்கள் நடிக்கிறோம். எப்படி? என் மகன் வீட்டிற்கு தன்னுடைய மதிப்பெண் அட்டையுடன் வருகிறான். இரண்டு பாடங்கள் தவறியிருக்கிறான். உடனே நான் அவன்மேல் கோபம் கொண்டு அவனை அடிக்கிறேன். பின் மதிப்பெண் அட்டையில் கையொப்பமிட்டு அவனைப் பள்ளிக்கு அனுப்புகிறேன். அவன்மேல் கோபம் கொள்வதற்குப் பதிலாக நான் நேரடியாக கையொப்பம் இட்டிருக்கலாமே? ஏன் இந்த உணர்ச்சி நாடகம். நம் உணர்ச்சி நாடகங்கள் பெரும்பாலும் நம் பாதுகாப்பு கவசங்கள். ஆனால், இவை ஆபத்தானவை. உணர்ச்சி நாடகங்கள் குறையக் குறைய உணர்வு முதிர்ச்சி பெருகும்.
பல நேரங்களில் உணர்ச்சி நாடகங்களால் நாம் நிறைய உறவுகளை இழந்திருக்கிறோம். அல்லது உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்திவிடுகிறோம்.
நாம் அனைவருமே ஒருவர் மற்றவரை அன்புக் கயிறுகளால் கட்டியுள்ளோம். அந்தக் கயிற்றின் பிடியிலிருந்து சில நேரங்களில் மற்றவர் நழுவும்போது, நாம் கடாமுடா என்று சண்டை போடத் தேவையில்லை. சற்று நேரம் காத்திருந்தாலே போதும். அவர்கள் மீண்டும் வழிமேல் வந்துவிடுவார்கள். இதுவே ஆண்டவராகிய கடவுள் நமக்குச் சொல்லும் உறவுப் பாடம்.
இதே பாடத்தையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 10:7-15), இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றார். பணி செய்யச் செல்லும் இடத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் சண்டையிட வேண்டாம். மெதுவாக அடுத்த இல்லம் செல்லுங்கள் என்கிறார்.
இன்றைய நாளின் பாடங்கள் எவை?
(அ) ஆண்டவராகிய கடவுள் நம்மை மகனாக, மகளாகப் பாவித்து வழிநடத்திவரும் அருள்பெருக்கை நாம் அனுபவித்த பொழுதுகள் எவை?
(ஆ) அவருடைய அன்புக் கயிறுகள் நம்மை அழுத்துவதாக எண்ணி அவரிடமிருந்து நாம் தப்பியோடிய பொழுதுகள் எவை?
(இ) நம் உறவுநிலைகளிலும் கோபத்தை மிகுதியாகக் குறைக்கவும், இரக்கத்தை மிகுதியாகப் பெருக்கவும் நாம் செய்ய வேண்டியவை எவை?
இஸ்ரேல் மக்கள் வழி தவறிச்சென்றிடினும் அவர்கள் மேல் கோபத்தைக் காட்டாத இறைவன் “;என் கோபம் அகன்று விட்டது; என் இரக்கம் பொங்கி வழிகின்றது; கோபப்பட நான் மனிதனல்ல; நான் உங்கள் நடுவே இருக்கும் தூயவர்” என்கிறார் கடவுள்! ஆனால் புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் இறைவனின்/ இயேசுவின் உச்சக்கட்டக் கோபத்தை நாம் பார்த்துள்ளோம். கோப்ப்பட வேண்டிய காரணங்களுக்காக கோபப் படுவதில் தவறில்லை.அதுவும் ஒரு உணர்வுதான்! ஆனால் அது பொங்கி வழியக்காத்திருக்கும் வேளையில் கொஞ்சம் இரக்கமெனும் நீரூற்றி அணைக்க முயல்பவரே மனித வடிவில் நாம் காணக்கூடிய தெய்வங்கள். உணர்வுகளைத் தன் கட்டுக்குள் வைத்துக் காக்கத் தெரிந்தவனே மனிதன்! நல்ல செய்தி தந்த தந்தைக்கு நன்றி!
ReplyDelete